Loan Waiver vs Loan Write Off - இவை இரண்டிற்கும் வேறுபாடு என்ன?

Loan Waiver vs Loan Write Off  - இவை இரண்டிற்கும் வேறுபாடு என்ன?

Loan Waiver , Loan Write Off  - இந்த இரண்டு சொற்களும் நம்மில் பலர் கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து கேட்கிறோம் அல்லது காண்கிறோம்.

முதலில் வங்கித்துறையில் கடன் தொடர்பான அடிப்படை பதிவுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

ஒருவருக்கு வங்கி கடன் கொடுக்கிறது என்றால் அவர் பெயரில் ஒரு பதிவேட்டை ஏற்படுத்தி, அதில் அந்த நபர் வாங்கிய கடன் குறித்த தகவல்களை வங்கி கிளை பதிவு செய்யும்.  சட்ட வழிமுறைகளில் கடன் கொடுத்த தொகையை மீட்க வழிவகைகள் கொண்ட ஆவணமாக அது இருக்கும்.

கடன் வாங்கியவர் கடனை முறையாக செலுத்தவில்லை என்றால், அது தொடர்பில் வங்கி கிளை சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.  கடன் வாங்கியவரின் சொத்துக்கள் சட்டத்தின் வழியாக முடக்கப்பட்டு, கொடுத்த கடனை மீட்பர்.

கடன் வாங்கியவரிடமிருந்து மீட்பதற்கு சொத்து என்று ஏதும் இல்லை என்றால் அதை என் பி ஏ என்று குறிப்பிட்டு வாராக் கடன் என்று குறித்து வைப்பர்.  அதாவது சட்டப்படி பல முயற்சிகள் மேற்கொண்டாலும் பணத்தை மீட்க இயலாத கடன்.

வாராக் கடன் -ல் இரண்டு வகை உள்ளது.  அதாவது, உண்மையிலேயே நொடிப்பு ஏற்பட்டு ஒரு நிறுவனம் கடன் தொகையை செலுத்த இயலாது போனதால் வாராக் கடன் ஆன கடன்.

மற்றொன்று, கடன் வாங்கியவரிடம் கடனுக்கு ஈடான அல்லது அதற்கும் பலமடங்கு மேலான சொத்து இருக்கும். ஆனால், பல தில்லாலங்கடி வேலைகள் செய்து அல்லது அரசியல் பின்புலம் கொண்டு கடனை திரும்பச் செலுத்தாமல் அதை வாராக் கடனாக மாற்றுவது.

இந்த இரண்டாவது வகையை சார்ந்தவர்களை தான் வில் ஃபுல் டிபால்டர்ஸ் அதாவது "தன் விருப்பத்தினால் கடனை திருப்பி செலுத்தாதவர்கள்" என குறிப்பிடுகிறார்கள்.

அரசு மனம் வைத்தால், இத்தகைய "தன் விருப்பத்தினால் கடனை திருப்பி செலுத்தாதவர்கள்" இடம் இருந்து சட்டப்படி கடன் தொகையை மீட்டெடுக்க முடியும்.

கடன் தள்ளுபடி என்றால் என்ன?


கடன் தள்ளுபடி என்றால் முழுமையாக கடனை தள்ளுபடி செய்து விடுவது. அதை ஆங்கிலத்தில் லோன் வைவர் (Laon Waiver) என்று சொல்கிறார்கள்.  தள்ளுபடி செய்தாகி விட்டது என்றால் அவர் பெயரில் கடன் இல்லை என்று பொருள்.

இப்படி தள்ளுபடி செய்துவிட்டால் கடன் வாங்கியவர் பெயரில் வங்கி ஆவணங்கள் எதிலும் அவர் பெயரில் எந்த நிலுவை தொகையையும் காட்டாது.  சிபில் பதிவுகளிலும், அவரை கடன் திரும்பச்செலுத்தாதவர் என எந்த கடன் நிலுவை தகவல்களும் இருக்காது.

லோன் ரயிட் ஆஃப் (Loan Write Off) அதாவது கடன் எழுத்தில் அழிப்பு என்றால் என்ன?

லோன் ரயிட் ஆஃப் (Loan Write Off) அதாவது கடன் எழுத்தில் அழிப்பு என்றால் அது கடன் தள்ளுபடி அல்ல.  வங்கி, தான் கொடுத்த கடனை சட்டப்படி திரும்ப பெறுவதற்கான உரிமையை விட்டுக் கொடுப்பது.  அதாவது வங்கி, கடன் வாங்கியவரிடம் இருந்து சட்டப்படி கடனை பெறும் தனது உரிமையை விட்டுவிடுவது.  கடன் வாங்கியவர் கடன் கட்டாமல் இருந்து விடலாம்.  அவர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் வங்கியால் எடுக்க இயலாது.

இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.  கடன் வாங்கியவர் குறித்த கடன் நிலுவை தொகை தகவல்கள் கடன் கொடுத்த வங்கி கிளையில் ஆவணமாக இருக்கும்.  ஆனால் அது ஒரு சட்டப்படியான ஆவணமாக இருக்காது. 

அதாவது கடன் கொடுத்த தகவல் இருக்கும்.  கடன் நிலுவை தொகை கடன் வாங்கியவர் பெயரில் இருக்கும்.  ஆனால் வங்கியால் சட்டப்படி கடனை திரும்ப்பப் பெற இயலாது.

வங்கி, பின் நாளில் நீதிமன்றம் நாடினாலும், நீதிமன்றம் அதை ஒரு வழக்காக ஏற்க இயலாது.  ஏனெனில் சட்டப்படி கடன் திரும்பெப்பெறும் உரிமையை வங்கி இழந்து விட்டது.

அதாவது, கடன் வாங்கியவர் கடன் தொகையை நிலுவையில் வைத்துள்ளார் என்பது தகவலாக மட்டும் இருக்கும்.  மேலும் இந்த தகவல் சிபில் போன்ற கடன் மதிப்பீடு செய்வோரின் மதிப்பீடுகளில் அவை தகவலாக பதியப்படும்.

வேறுபாட்டை தெளிவாக சொல்வதானால்:

எடுத்துக்காட்டாக, உங்களிடம் ஒருவர் பத்தாயிரம் ரூபாய் கடனை ப்ரோ நோட்டு போட்டு கடனாக வாங்கி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

நீங்கள் அவருக்கு அந்த கடனை தள்ளுபடி செய்து விட்டீர்கள் என்றால் அந்தப் ப்ரோ நோட்டை கிழித்து அவரிடமே தந்துவிடுகிறீர்கள்.

அதாவது, உங்களிடம் கடன் கொடுத்ததற்கான எந்த வகை ஆவணத்தை வைத்திருக்கவில்லை.  முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

அதே வேளையில் அவருக்கு அந்த கடனை Loan Write Off அதாவது கடன் எழுத்தில் அழிப்பு  செய்கிறீர்கள் என்றால் ப்ரோ நோட்டு மீது CANCELLED என்று எழுதி குறுக்குக் கோடுகளையும் எழுதி வைத்துள்ளீர்கள் என்றால் அந்த ப்ரோ நோட் சட்டப்படி செல்லாது.  ஏனெனில், நீங்களே அதன் மீது CANCELLED என்று எழுதி அதன் சட்ட மதிப்பை இழக்கச் செய்துவிட்டீர்கள்.  ஆனால் கடன் வாங்கியவர் பெயரில் கடன் இருப்பதாக ஒரு அடையாளத்திற்கு ப்ரோ நோட்டை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.

அதாவது கடனை நீங்கள் தள்ளுபடி செய்யவில்லை.  கடன் நிலுவை தொகையை மீட்பதற்கான சட்ட வாய்ப்புகளை நீக்கிக் கொண்டீர்கள்.

இதுதான் வேறுபாடு.

வங்கி உங்களுக்கு ஒரு நூறு கோடி ரூபாய் கடன் கொடுத்துவிட்டு இதே போன்று WRITE OFF செய்வதாக இருந்தால் நீங்கள் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வீர்கள் என்பது எமக்கு புரிகிறது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: