மின் கணக்கீடும், வாட்ஸ் அப்பில் பரவ விடும் பதட்டங்களும்

மின் கணக்கீடும், வாட்ஸ் அப்பில் பரவ விடும் பதட்டங்களும்

கடந்த நாள் முதல் வாட்ஸ் அப்பில் "ரீடிங் எடுக்க வரும் போது கட்டிய பணத்தை கழிக்க அனுமதிக்காதீர்கள் அதற்கான யூனிட்டை கழிக்க சொல்லுங்கள்.!! " என்ற ஒரு பதட்டமான செய்தி பகிரப்பட்டு வருகிறது.

இந்த பதிவை சமூக ஊடகங்களில் படித்த பலரும், ஏதோ தமிழக மின் வாரியம் தமது பயனீட்டாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக என்ன வைக்கிறது.

உண்மையில், மின் கணக்கீடு எவ்வாறு மேகொள்ளபடுகிறது?  இப்படி மின் வாரியம் மக்களை ஏமாற்றி பணம் ஈட்டுமா?

இந்த முழு முடக்கத்தினால், மின் கணக்கீடு செய்ய வருபவர்கள், இந்த முறை நேரடியாக வந்து கணக்கீட்டு பணிகளை மேற்கொள்ளாமல், பழைய கட்டணத்தையே மின் வாரியம் கட்ட சொல்லி இருக்கிறது.  இப்படி மின் கணக்கீடு செய்யாமல் விடுவது ஒன்றும் புதிதல்ல.

மின் கணக்கீடு செய்ய வரும் பொழுது வீடு/கடை/அலுவலகம்/தொழிற்சாலை பூட்டி இருப்பின், பழைய மின் கணக்கீடு கட்டணத்தையே செலுத்த சொல்லி தகவல் வரும்.  அதே நடைமுறை தான் இதிலும் பின்பற்றப்பட இருக்கிறது.

எடுத்துக்காட்டாக, மின் கணக்கீடு பிப்ரவரியில் எடுக்கப்பட்டு, அதற்கு 300 அலகுகள் அளவீடு என வந்து இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.  அதற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்தி இருப்பீர்கள். 

ஏப்ரல் கணக்கீடு, மின் கணக்கீட்டாளர் நேரடியாக வர இயலாததால் பழைய 300 அலகுகள் அளவீடு என வைத்து கட்டணம் செலுத்த சொல்லி இருக்கிறார்கள்.

ஜூன் கணக்கீடு வரும்பொழுது, உங்களது மார்ச் முதல் ஜூன் வரையிலான 4 திங்களுக்கான பயன்பாடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.  அப்பொழுது 700 அலகுகள் என வருகிறது என வைத்துக் கொள்வோம்.

அதற்காக, உங்கள் பயன்பாடு 700 அலகுகள், அதில் நீங்கள் செலுத்திய தொகை போக மீதம் கட்டச் சொல்ல மாட்டர்கள்.  இப்படி அச்சப்படுத்தும் வகையில் வரும் செய்தி போலியானது.  நடைமுறையில் இல்லாதது.

அப்படியானால்?

700 அலகுகள் என்று வந்த கணக்கீட்டை இரண்டால் வகுத்து, ஏப்ரல் கணக்கீட்டில் 350 அலகுகள் என்றும் ஜூன் கணக்கீட்டில் 350 அலகுகள் என்றும் கணக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அதாவது, ஏப்ரல் கணக்கீடு 350 அலகுகள்.  ஆனால் நீங்கள் கட்டிய தொகை 300 அலகுக்கானது மட்டும்.  ஆக 350 அலகு பயன்பாடு என அதை கணக்கிட்டு நீங்கள் கட்ட வேண்டிய மீதி தொகையை கட்டச் சொல்வார்கள்.

மீதமுள்ள 350 அலகுகள் சூன் கணக்கீடுக்கான கட்டணமாக உங்களிடம் இருந்து பெறப்படும்.





இதுதான் எப்பொழுதும்மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.  அத்தகைய நடவடிக்கையே இந்த முடக்கத்தில் எடுக்காமல் விடப்பட்ட கணக்கீடுக்கும் நடைமுறைப்படுத்தப்படும்.

புரளிகளை பரப்புவோரை தவிர்த்துடுங்கள்.  அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்துங்கள்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: