ஓசூர் பொதுமக்கள் நாள்தோறும் உறிஞ்சி வருகிறார்கள்!!! பிறகு எப்படி ஏரியில் தண்ணீர் இருக்கும்?

ஓசூர் பொதுமக்கள் நாள்தோறும் உறிஞ்சி வருகிறார்கள்!!! பிறகு எப்படி ஏரியில் தண்ணீர் இருக்கும்?

ஒசூர் இராமநாயக்கன் ஏரியில் ஓசூர் மாநகராட்சியால் கடந்த ஒன்றறை ஆண்டுகளாக ரூபாய் 1 கோடி மக்கள் வரிப்பனத்தை செலவு செய்து நிரப்பப்பட்ட தண்ணீர் எங்கே சென்றது என கடந்த சில நாட்களாக கிருட்டிணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.
இதற்கு மெளனமே பதிலாக மாநகராட்சி அமைதி காத்து வந்தது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தமிழக அமைச்சரும் ஓசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலகிருட்டிண ரெட்டி அவர்கள், ஏரியில் நிரப்பப்பட்ட தண்ணீரை ஆழ்துளை கிணறுகள் மூலம் பொதுமக்கள் நாள் தோறும் குடிநீருக்காக உறிஞ்சி வருகிறார்கள் பிறகு எப்படி ஏரியில் தண்ணீர் இருக்கும்? என்று எதிர் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே செயற்கை கோள் பட ஆதாரங்களுடன் கிருட்டிணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் குற்றச்சாட்டை முன்னெடுத்து மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒசூர் நகரின் நடுப் பகுதியில் அமைந்துள்ள இராமநாயக்கன் ஏரியில் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் தமிழக அரசினால் 50 லட்சம் செலவில்  கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவர அடிப்படை கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

ஓசூர் மாநகராட்சி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஏரியில் நீர் நிரப்ப சுமார் ஒரு கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக கணக்கு எழுதியுள்ளது.

இது குறித்து எற்கனவே குற்றச்சாட்டை முன்வைத்த கிருட்டிணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் ஏரியில் நிரப்பப்பட்ட தண்ணீருக்கு ஒசூர் மாநகராட்சி ஆணையர் சரியாக விளக்கத்தை அளிக்காவிட்டால் இன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் இருக்கபோவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் உண்ணாவிரதம் இருக்க ஒசூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

ஆனால் உண்ணாவிரத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார், இராமநாயக்கன் ஏரியில் ஒரு கோடி ரூபாய் செலவில் நிரப்பப்பட்ட 10 லட்சத்து 850 கிலோ லிட்டர் தண்ணீர் எங்கே சென்றது என மீண்டும் தனது குற்றச்சாட்டை செயற்கை கோள் படங்களுடன் விளக்கிய அவர், இந்த தண்ணீரை 20 கோடி ரூபாய்க்கு மாநகராட்சி அலுவலர்கள் விற்றார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி இல்லை என்றால் அந்த தண்ணீர் எங்கே என அலுவலர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஏரியில் தண்ணீர் நிரப்பப்பட்டது குறித்து செய்தியாளர்கள் முன்னாள் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியிடம் கேள்வி எழுப்பிய போது,

கிருட்டிணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் இராமநாயக்கன் ஏரியை வைத்து அரசியல் செய்து வருகிறார்.

இந்த திட்டம் 25 லட்சம் செலவில்தான் நிறைவேற்றப்பட்டது. தண்ணீர் நிரப்பட்ட சில திங்கள்களில்  அருகில் புதிய சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டதால் தண்ணீர் நிரப்பும் பணிகள் நிறுத்தப்பட்டது.

ஏரியில் நிரப்பப்பட்ட தண்ணீரை ஆழ்துளை கிணறுகள் மூலம் ஓசூர் பொதுமக்கள் நாள்தோறும் உறிஞ்சி வருகிறார்கள்!!! பிறகு எப்படி ஏரியில் தண்ணீர் இருக்கும்? என ஊடகத்தாரை பார்த்து தமது எதிர் கேள்வியை கேட்டார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: