வளர்ப்பு உயிரினங்களை தத்து எடுப்பதற்கு அல்லது தத்து கொடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை

வளர்ப்பு உயிரினங்களை தத்து எடுப்பதற்கு அல்லது தத்து கொடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை

மனித குழந்தைகளை தத்து எடுப்பதற்கும் கொடுப்பதற்கும் ஆயிரம் சட்டங்கள் இருக்கின்றன.  ஆனால் வளர்ப்பு உயிரினங்களை பொருத்தமட்டில் சட்ட திட்டங்கள் பெருமளவில் இல்லை.

ஓர் ஆர்வத்தில் வளர்ப்பு உயிரினத்தை தத்து எடுப்பதும், தத்து எடுத்த சில நாட்களிலேயே அனாதையாக கைவிட முயல்வதும் வழக்கமாக நடந்தேறும் நிகழ்வாக உள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால், பணம் கொடுத்து வாங்கிய வளர்ப்பு உயிராக இருப்பின், அதை மற்றொருவர் தத்தெடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது.  ஆனால் நாட்டு உயிரினங்களை பொறுத்தவரை, அவை விலையில்லாமல் கிடைப்பதால், கேட்பதற்கு யாருமின்றி, தெருவில் அனாதையாக தூக்கி எறியப்படும் நிகழ்வுகள் நாள்தோறும் நடந்தேறி வருகின்றன. 

ஆகவே இப்படி வளர்ப்பு உயிரினங்கள் அனாதையாக விடப்படுவதை தடுக்க வேண்டுமேயானால், தத்து எடுப்பவர் கீழ்காணும் குறிப்புகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு, பின்பு தத்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

1.  தத்து எடுப்பவர் வளர்ப்பு உயிரினம் வளர்ப்பதில் முன் அனுபவம் கொண்டவரா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  முன் அனுபவம் இல்லாதவர் என்றால், தத்து கொடுப்பவர், தான் கொடுத்த வளர்ப்பு உயிரினத்தை வளர்ப்பதில் அவருக்கு உதவிகள் மற்றும் பயிற்சிகள் கொடுக்க வேண்டும்.

2.  தத்து எடுப்பவர் தனக்கு உரிமையான வீட்டில் குடியிருக்கிறா அல்லது வாடகை வீட்டில் குடியிருக்கிறாரா என்பதை கவனிக்க வேண்டும்.  வாடகை வீட்டில் குடியிருக்கிறார் என்றால், வீட்டின் உரிமையாளர், வீட்டில் வளர்ப்பு உயிரினம் வளர்ப்பதற்கு அனுமதி அளித்துள்ளாரா என்பதை கொடுப்பதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டும்.  வாடகை ஒப்பந்தத்தில், வளர்ப்பு உயிரினம் வளர்க்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  வாய்வழி அனுமதி மட்டும் இருப்பின் பின்னாளில் இது தொடர்பில் இடறல்கள் வர வாய்ப்புள்ளது.

3. தத்து எடுத்தவர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதாக இருப்பின், தத்தெடுக்கப்பட்ட உயிரினத்தை அந்த நாட்களில் யார் கவனித்துக் கொள்வது?  கவனித்துக்கொள்ள மாற்று வாய்ப்புகள் உள்ளனவா?

4. வளர்ப்பு உயிரினத்தை தத்து எடுப்பதில் வீட்டில் வாழும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஒப்புதலும் உள்ளதா?  அல்லது ஒரே ஒருவரின் ஆர்வத்தினால் மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. சிறுவயதுடையவர்களை மட்டும் நம்பி என்றும் உயிரினங்களை தத்துக் கொடுக்கக்கூடாது.  மேலும் பொருளாதாரத்திற்காக பிறரை சார்ந்து வாழ்பவர்களுக்கும் தத்து கொடுக்கக் கூடாது.  அந்த உயிருக்கு போதிய சத்தான உணவு, தடுப்பூசிகள், புழு மருந்துகள் மற்றும் தரமன மருத்துவத்திற்கு பணத்தை செலவு செய்ய தத்து எடுப்பவர் மனநிலை கொண்டவராக இருக்க வேண்டும்.

6.  வளர்ப்பு உயிரினம் கொடுக்கல்-வாங்கல் பொருள் அல்ல.  அது ஓர் உயிர். அந்த உயிருக்கு, உயிர் மட்டுமின்றி இன்பம் துன்பம் உணரும் மனமும் உள்ளது என்பதை தத்து எடுப்பவர் உணர்ந்திருக்க வேண்டும்

7.  தத்து எடுப்பவர்கள் பலரும் வளர்ப்பு உயிரினம் குட்டியாக இருக்கும் பொழுது ஆர்வத்துடன் தத்து எடுத்து விட்டு பின்னாளில் அதை அனாதையாக விடுவது நடந்தேறி வருகிறது.  குட்டியாக இருக்கும் பொழுது விளையாடுவதும், பின்னாளில் கவனிக்காமல் விடுவதும் ஏற்றுக்கொள்ள இயலாது.  ஆகவே, தத்து எடுப்பதென்பது, அந்த உயிரின் வாழ்நாள் முழுமைக்கும்... அதாவது அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு அந்த உயிரை காப்பது தமது கடமை என்ற உணர்வு வேண்டும்.

8. தத்து எடுக்கப்படும் உயிரினங்கள், குட்டிகளாக இருக்கும் பொழுது வீட்டினுள் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க இயலாது.  தத்து எடுப்பவர் இதை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.  வெளியில் சென்று கழிக்க பழக்கவேண்டும் என்ற பொறுமையும் இருக்கவேண்டும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: