கோவிட் 19 (கொரோனா) தொற்றினால் ஏற்படும் பின்விளைவுகள்

கோவிட் 19 (கொரோனா) தொற்றினால் ஏற்படும் பின்விளைவுகள்

"கொரோனா வந்தால் வந்து விட்டு போகிறது" என்கிற மனநிலை கொண்டவரா நீங்கள்?  "அது ஒரு வழக்கமான சளிக்காய்ச்சல்" என்று சமூக வலைதளங்களில் படித்து ஆறுதல் அடைந்தவரா நீங்கள்?  இந்த கட்டுரையை முழுமையாக படியுங்கள்.

கோவிட் 19 தொற்று ஏற்படுவதற்கு முன், நுரையீரலில் எவ்வித பாதிப்பும் இல்லாதவர்கள், எளிதாக குணமடைந்து வீடு திரும்புகிறார்கள்.  அப்படி மீண்டெழுபவர்களில் சிலர் மட்டும், மீண்டும் தமக்கு மூச்சு விடுவதில் திணறல் இருப்பதாகச் சொல்லி மருத்துவமனையை நாடுகிறார்கள்.

அப்படி வருபவர்களை ஆய்வு செய்த பொழுது, கோவிட் 19 தொற்றானது நிரந்தரமான ஒரு வடுவை நுரையீரலில் விட்டுச் சென்றுள்ளது கண்டறியப்படுகிறது. இவர்களுக்கு நுரையீரல் சார் தசை அழற்சி ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக ஏற்படும் ஃப்ளூ அல்லது நிமோனியா தொற்று ஏற்பட்டால் கூட நுரையீரலில் நிரந்தரமான வடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதற்கும் இந்தக் கோவிட் 19 தொற்று ஏற்பட்டவர்களின் நுரையீரலில் ஏற்படும் நிரந்தர வடுவிற்கும் வேறுபாடு என்னவென்றால், விகித எண்ணிக்கையில், இவர்களுக்கு கூடுதலாக பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில்...


கோவிட் 19 தொற்று ஏற்பட்டு மும்பை மன்னர் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் (கே.இ.எம் மருத்துவமனை) மருத்துவம் பெற்று குணமடைந்து வீடு திரும்பிய சிலர், ஓர் இரு திங்கள்கள் கழித்து, தங்களுக்கு மூச்சுத்திணறல் இருப்பதாகச் சொல்லி, மீண்டும் மருத்துவமனைக்கு வந்தது மருத்துவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

மூச்சுத்திணறல் பாதிப்புடன் மீண்டும் மருத்துவமனையை நாடும் கோவிட் 19 குணமான நோயாளிகள், குணமடைந்து மருத்துவமனையை விட்டுச் செல்லும் பொழுது அவர்களுக்கு எவ்வித மூச்சுத்திணறல் அறிகுறிகளும் இல்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

மீண்டும் மருத்துவமனைக்கு வந்தவர்களின் நுரையீரலை மருத்துவர்கள் ஆய்வு செய்ததில், இவர்களுக்கு கடுமையான நுரையீரல் சார் தசையளர்ச்சி ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.  அதனால் கடுமையான மூச்சுத்தினறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கு மருத்துவமனையில் உயிரி காற்று செலுத்தவேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது.  இவர்களில் ஒருசிலருக்கு வாழ்நாள் முழுவதும் உயிரி காற்று செலுத்தும் மருத்துவ கருவியின் உதவி தேவை ஏற்படுகிறது.  அதாவது, அத்தகைய ஒரு கருவியின் துணையின்றி இவர்களால் சரியாக மூச்சு விட இயலாது.

கோவிட் 19 குணமடைந்து சில திங்கள்கள் கடந்தபின் அவர்களுக்கு மூச்சு திணறல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டு, தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுகிறது.

இந்த நுரையீரல் சேதமடையும் பாதிப்பானது, பயன்படுத்தப்பட்ட மருந்துகளால் ஏற்படுகிறதா? அல்லது தொடர்ந்து பல நாட்களுக்கு உயிரி காற்று செயற்கை முறையில் நுரையீரலுக்கு செலுத்தப்பட்டால் ஏற்படுகிறதா? அல்லது ஸ்டீராய்டு எனப்படும் ஊக்கியங்கள் பயன்படுத்தியதால் ஏற்படுகிறதா? என்பதற்கான விடை இதுவரை நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வுகளில் இல்லை.

இந்த பாதிப்பு, கோவிட் 19 தொற்றினால் ஏற்பட்டுள்ளது என உறுதியாகச் சொன்னாலும், ஒருசிலருக்கு மட்டும் இத்தகைய நுரையீரல் பாதிப்பு ஏன் ஏற்படுகிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற புள்ளி தரவுகளின் படி, கோவிட் 19  தொற்றுக்கு உள்ளானவர்களில் 40% அளவிற்கு கடும் மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்படுவதாகவும், 25% அளவிற்கு நிரந்தரமாக நுரையீரலில் வடு ஏற்படுவதாகவும் தெரியவருகிறது.

இத்தாலியில்...


ஐரோப்பிய நாடுகளில், முதன் முதலில் கோவிட் 19 தொற்றினால் கடுமையாக பாதிப்படைந்த இத்தாலி நாட்டில், கோவிட் 19 தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களை மூன்று திங்கள்களுக்குப் பின், அவர்களின் நுரையீரலை ஆய்வு செய்தனர். ஆய்வில், அவர்களில் 20% பேருக்கு நிரந்தரமாக நுரையீரலில் வடு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகள் இத்தாலி நாட்டின் பதுவை மருத்துவ பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

பெரும்பாலானவர்களுக்கு கோவிட் 19 தொற்று என்பது வழக்கமாக வந்து போகும் சளி காய்ச்சல் போன்ற ஒரு நோயாக இருந்தாலும், சிலருக்கு அது ஒரு நிரந்தரமான கொடிய வடுவை விட்டுச் செல்கிறது.  இத்தகையோர் தங்களது நுரையீரலில் நிரந்தரமான பாதிப்புடன் மீதம் உள்ள வாழ் நாட்களில் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.

லண்டனில்...


லண்டனைச் சேர்ந்த மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, வென்டிலேட்டர் துணையுடன் மீண்டெழுந்தவர்கள் மட்டும் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாவது இல்லை.

அவர்களது ஆய்வின்படி, கோவிட் 19 தொற்று ஏற்பட்ட பொழுது, நமது நோய் எதிர்ப்பு தன்மை "சைட்டோகைன் ஸ்ட்ராம்" என்கிற வேதி புயலை ஏற்படுத்துவதால் நுரையீரல் பெரும் பாதிப்படைகிறது.

இதனால் நுரையீரலில் உள்ள குருதி நாளங்களில் சிறுசிறு உரைகுருதிகள் வடிவெடுத்து, குருதி ஓட்டத்திற்கு தடை ஏற்படுத்தியுள்ளன.  இதன் விளைவாக புதிய குருதி நாளங்கள் நுரையீரலில் வளர்வதற்கு தூண்டுதல் ஏற்பட்டுள்ளது.

அப்படி புதிதாக வளர்ந்த குருதி நாளங்கள் முறையாக வளர்வதில்லை.  இதனால் நுரையீரலில் பெருமளவு குருதி அழுத்தம் ஏற்பட்டு நுரையீரல் தசைகளில் நிரந்தரமான சேதம் அடையச் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு சேதமடைந்த நுரையீரலால் போதிய அளவிற்கு உயிரி காற்றை குருதிக்கு வழங்க இயலாததாலும், பாதிப்படைந்த குருதி நாளங்களை கொண்டு நுரையீரலால் முழுமையாக செயல்பட இயலாத நிலை ஏற்படுவதாலும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

இந்த ஆய்வுகள் லண்டன் கைய் ஸ் மற்றும் புனித தோமை என்.எச்.எஸ் பவுண்டேசன் அறக்கட்டளை (Guy s and St Thomas NHS Foundation Trust) சார்பில் நடத்தப்பட்டது.

எச்சரிக்கை...


இந்த மருத்துவ தகவல்கள் நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால், கோவிட் 19 தொற்று தொடர்பில் நாம் பயப்படத் தேவையில்லை என்ற மனநிலையை கொண்டிருக்க இயலாது என்பதைத்தான்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: