மூணார் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தன் முதலாளிக்காக காத்திருக்கும் நாய்

மூணார் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தன் முதலாளிக்காக காத்திருக்கும் நாய்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணார் அருகே ராசமலையில் உள்ள பெட்டிமுடி தோட்டம், நிலச்சரிவு ஏற்பட்டதில் குடியிருப்பு பகுதி முழுவதும் மண்சரிவால் மூடப்பட்டு, அங்கு வாழ்ந்து வந்த சுமார் 80 பேர் உயிரிழந்துவிட்டதாக ஐயப்படுகிறது.

மீட்புப்பணி முழு வீச்சில் அங்கு நடைபெற்று வருகிறது.  இறந்தவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருகிறது.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில், பலியான குடும்பங்களில் ஒன்று வளர்த்து வந்த நாய், தமது முதலாளிகளின் வருகைக்காக உணவை உட்கொள்ளாமல் நிகழ்விடத்தில் காத்து நிற்பது, அங்கே மீட்புப்பணியில் ஈடுபடுவோரின் கண்களில் நீர் வழிய செய்கிறது.

நாய் தனது ஈரக் கண்களுடன் ஏங்கியபடி, மண், சகதி மற்றும் பாறைகளால் மூடப்பட்ட தமது காணாமல் போன வீட்டை மற்றும் தம்மிடம் அன்பு பாராட்டி வாழ்ந்த அந்த மக்களின் வருகைக்காக, வைத்த கண் விலகாமல், பார்த்து, காத்து நிற்கிறது.

அந்த பாசமிகு உயிரினத்தை... அன்பின் வெளிப்பாடாய் காத்து நிற்கும் அந்த உயிரை... அரவணைக்க மற்றும் அமைதிப்படுத்த அங்கு பணி செய்வோரும் அந்த குடியிருப்பின் பகுதி அருகில் வாழ்ந்து வந்தவர்களும் எவ்வளவுதான் முயன்றாலும், அந்த நாய் அந்த இடத்தை விட்டு அகல மறுக்கிறது.

குடியிருப்பு பகுதிக்கு அருகே வாழும் ஒருவர் அந்த பாசத்திற்காக ஏங்கும் உயிரை வலுக்கட்டாயமாக தன் இருப்பிடத்திற்கு அழைத்து உணவு கொடுக்க முயன்றார்.

உணவை உட்கொள்ளாமல் அவரின் பிடியில் இருந்து விலகி மீண்டும் மீட்பு பணி நடக்கும் இடத்தை அடந்த அந்த நாய், ஏங்கி பார்த்து காத்து நிற்கிறது.

தனக்கு ருசியான உணவு தேவையில்லை, தன் மீது அன்பு செலுத்தியர்களின் பழைய சாதமே போதும், என உணவை உட்கொள்ள மறுத்து அங்கேயே அது காத்து நிற்பது, பலரின் நெஞ்சு பிளவுபடும் படியான காட்சியாக உள்ளது.

வாயில்லா அந்த உயிரால் தன் உரிமையாளர்கள் யார் என சொல்லவும் தெரியவில்லை, தன் இழப்பின் வேதனையை வாய்விட்டு கதறி அழுது, தன்னை தானே தேற்றிக்கொள்ளவும் தெரியவில்லை.

அந்த அன்பு உயிருக்கு, தன்னை அன்பு செய்து வளர்த்தவர்கள், இனி மீண்டும் வர மாட்டார்கள் என்பதை யார் எப்படி  சொல்லி புரிய வைப்பது?

Share this Post:

தொடர்பான பதிவுகள்: