மனைவி மீதான அன்பை வரலாற்றில் பொறித்த கணவர், நாடே நெகிழ்தது

மனைவி மீதான அன்பை வரலாற்றில் பொறித்த கணவர், நாடே நெகிழ்தது

3 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்த தன் மனைவியை மறக்க இயலாத கணவர், சிலிக்கான் மெழுகு வடிவில் மனைவியை வடித்து, தான் புதிதாக கட்டிய வீட்டின் வரவேற்பு அறையின் நடுவில் உட்கார வைத்து மகிழ்ந்தது காண்போரை மட்டுமின்றி நாடு முழுவதையும் நெகிழ வைத்து விட்டது.

மனைவிக்காக தாச் மகால் கட்டியது, மனைவி இறந்த செய்தி கேட்டு கணவர் இறப்பது, கணவரின் இறப்பின் செய்தி கேட்டு மனைவி இறப்பது, என கணவன் மனைவிக்கு இடையேயான மன நெருக்கத்தை நாம் பல்வேறு செய்திகளில், வரலாற்று குறிப்புகளில் கேட்டறிந்து இருக்கிறோம்.

குறிப்பாக வயது மூப்பு அடைய அடைய, கணவன் மனைவிக்கு இடையேயான அன்பின் நெருக்கம் கூடிக் கொண்டே செல்கிறது என்பதற்கு இவையெல்லாம் சான்று.

கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சீனிவாஸ் குப்தா, அவர் செய்த ஒரு செயலின் மூலம் உலகம் முழுவதையும் அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி மாதவி, தன் இரு பெண் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, தனது காரில் திருப்பதி நோக்கி சென்றுள்ளார். காரை அவரது ஓட்டுனர் ஓட்டிச் சென்றுள்ளார்.
முன்னால் சென்ற சரக்குந்து மீது கார் மோதியதில் முன் பயணிகள் இருக்கையில் இருந்த மாதவி நிகழ்விடத்திலேயே பலியானார்.  மகள்கள் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

மாதவி உயிருடன் இருக்கும் பொழுது, சீனிவாசனும் அவரும், தங்களுக்கு ஒரு மிகப்பெரிய மாளிகை வீடு வேண்டும் என முடிவெடுத்தனர்.  அப்படி ஒரு மாளிகை கட்டுவதை அவர்கள் இருவரும் தம் வாழ்நாள் கற்பனையாக கொண்டிருந்தனர்.

மாதவியின் இழப்பு, சீனிவாசனை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.  அதற்கு ஒரே தீர்வு, தாங்கள் இருவரும் சேர்ந்து கற்பனை செய்த மாளிகையை கட்டுவது என முடிவெடுத்தார் சீனிவாசன்.

சீனிவாசன் பல்வேறு கட்டடக்கலை நிபுணர்களின் அறிவுரையை கேட்டாலும் அவருக்கு மனது முழுமையடையவில்லை.  கடைசியாக தனது நண்பரின் மூலம் கட்டடக் கலை நிபுணர் ரங்கன்னந்ணவர் அறிவுரையை கேட்டுள்ளார்.

அவர், மாதவியின் முழு வடிவ சிலிக்கான் மெழுகு சிலையை, பெங்களூர் சிலை சிற்பி ச்றீதர் மூர்த்தி மூலம் செய்து, வீட்டின் வரவேற்பறையில் வைத்தால், சிறப்பாக இருக்கும், என சொன்னதன் அடிப்படையில், அதேபோன்று சிலை செய்து சீனிவாசன் வைத்துவிட்டார்.

சீனிவாசன் மாளிகை கட்டியிருப்பது கருநாடக மாநிலத்தின் பெல்லாரி அருகே, கொப்பல் என்கிற பேரூர் ஆகும்.  இங்கு வானிலை வெப்பம், மெழுகு சிலை வைக்க ஏதுவாக இருக்காது என்பதால், சிலையை சிலிக்கான் மெழுகு கொண்டு வடித்துள்ளனர்.

மாளிகையின் புதுமனை புகுவிழா 2020, ஆகஸ்ட் 8-ம் நாள் நடைபெற்றுள்ளது.  விழாவில் பங்கெடுத்தவர்கள் அனைவரும், சீனிவாசன் தன் மனைவி மீது எத்தகைய அன்பை வைத்துள்ளார் என வாய் வலிக்க வலிக்க மெய்மறந்து பேசிச் சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட, இணைய பயன்பாட்டாளர்கள் தம் பங்கிற்கு சீனிவாசனை எவ்வளவு புகழ முடியுமோ, அவ்வளவு புகழ்ந்து, பதிவிட்டு வருகின்றனர்.

வாழும்போது கணவரின் அன்பை பெண்கள்புறிந்து கொள்கிறார்களோ இல்லையோ, ஆண்கள் தம் வாழ்க்கை துணையின் மீது அளவில்லா அன்பு வைத்துள்ளார்கள் என்பது மீண்டும் மீண்டும் வரலாற்றில் இத்தகைய செயல்கள் மூலம் தொடர்ந்து குறிக்கப்படுகிறது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: