வெற்று தோற்றங்கள் மூலம் தோற்றுவிக்கப்படும் சாதனையாளர்கள்?

வெற்று தோற்றங்கள் மூலம் தோற்றுவிக்கப்படும் சாதனையாளர்கள்?

வரலாற்றை மாற்றி எழுதுவது, "23 ஆம் புலிக்கேசி" திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கு ஒப்பானவையே!  உண்மையில், எதுவுமே நடைபெறவில்லை என்றாலும், நடைபெறாத ஒன்றை, போர் என வரலாற்றில் எழுதி, போர் என்றால் என்னவென்று தெரியாதவர், மாபெரும் சாதனையாளராக, வெற்றி வீரராக போற்றப்படுவது வழக்கமான ஒன்றாகத்தான் உள்ளது.

பெரும்பாலான நிகழ்வுகளில், மக்களின் கவனம், உண்மை தன்மையிலிருந்து திசை திருப்பப்பட்டு. ஒரு சிலரால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் சில செயல்கள் மூலம், நடைபெறாத ஒன்று நடைபெற்றதாகவும், நடைபெற்றது நடைபெறாததாகவும் மக்கள் சிந்தனையில் மாற்றி அமைக்கப்படுகிறது.

இதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு, மோடி அவர்கள், தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்டு, பெருமான் இராமனை அயோத்திக்கு கூட்டிச்சென்று காட்டிய நிகழ்வு.

56 அங்குல மார்பகம் கொண்ட மோடி, தலையில் மகுடத்துடன், பட்டாடை ஒளிர, நாடே போற்றும் பெருமான் இராமனை, சின்னஞ்சிறு வடிவமாக வடித்து, அவர் பிறந்த இடமாக சொல்லப்படும் அயோத்திக்கு அழைத்துச் செல்வது போன்ற ஒரு நிகழ்வை அரங்கேற்றி, தொலைக்காட்சிகளில் கோடிக்கணக்கான மக்களை பார்க்கச் செய்தது, தாம் இந்துக்களுக்கான ஒரே தலைவர் என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதற்கே!.

உண்மையில் மோடி செய்தது என்ன?  இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் முழு தோல்வி!  கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில்  தோல்வி! அருகில் உள்ள நாடுகளுடன் நல்லுறவு என்பதில் தோல்வி! சீனாவின் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் தோல்வி!

அயோத்தியில் இராமர் கோவில் என்பதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த அத்வானி மற்றும் அவரது குழுவினர், இராமர் கோவில் கட்டுமானப்பணி பூஜை நிகழ்வில் தட்டமிட்டு மறைத்தொழிக்கப்பட்டனர்.

நாட்டிற்கு ஒரு நல்லதையும் செய்யாத மோடி, இன்றைக்கு இந்துக்களுக்கான இராம அரசுக்கு ஒப்பான ஒரு அரசாட்சியை அமைத்து தருவார் என்ற ஒரு நம்பிக்கை மாயையை மக்களிடத்தே ஏற்படுத்தி இருக்கிறார் என்றால், திட்டமிட்டு நிகழ்வுகள் கோர்வையாக அமைக்கப்பட்டு, மக்கள் நம்பும்படியான ஒரு காட்சி அரங்கேற்றப்பட்டுள்ளது.

இந்த திட்டமிட்ட அரங்கேற்றங்களின் மூலம், மோடி இந்துக்களின் ஒரே மீட்பர் என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டமிட்ட அரங்கேற்றத்தின் சிறப்பு என்னவென்றால், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தவிர வேறு எந்த பாஜக தலைவரும் இராமர் கோவில் கட்டுமான பணி பூசை நிகழ்வில் காட்டப்படவில்லை அல்லது பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

வெகுவாக திட்டமிட்டு, அத்வானி, உமா பாரதி போன்றோரின் முயற்சிகள், அயோத்தி இராமர் கோயில் கட்டுமாணத்திற்கு தொடர்பில்லை என்ற அளவிற்கு மக்கள் மனதில் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சொல்லப்போனால், அத்வானி போன்றோரின் அயோத்தி தொடர்பான அனைத்து முன்னெடுப்புகள் மற்றும் முயற்சிகள் யாவற்றையும் பாஜக கட்சியைச் சார்ந்தவர்கள் கூட மறந்து விட்டார்கள் எனலாம்.

அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் ஒரு புறமிருந்து போகட்டும்... அதன் தொடர்ச்சியாக, சமூக வலைதளங்களில், மோடியை இராமனின் மற்றொரு பிறப்பு என்பதற்கு ஈடாக பலரை வைத்து இடுகைகள் இட வைத்தது, இந்தச் செயல்கள் மூலம் மக்களை மூளைச்சலவை செய்து, மோடி அரசின் தோல்விகளில் இருந்து திசை திருப்ப, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடகம் என்பதற்கு சான்றாக அமைகிறது.

இதில் கொடுமை என்னவென்றால், அயோத்தியில், பாபர் கட்டிய மசூதியை இடித்து, அதே இடத்தில், இராமர் கோவில் கட்டவேண்டும் என தம் உயிர்களை துச்சமென மதித்து, துணிச்சல் மிகு போராட்டங்களை மேற்கொண்ட அத்வானி, உமா பாரதி மற்றும் மேலும் பல்லாயிரக்கணக்கான உண்மையான இராமர் மீது பற்று கொண்டவர்கள், குற்றவாளிக்கூண்டில், குற்றம் சாட்டப்பட்டவர்களாக இன்றும் இதற்கு பின்பும் நீதியரசர்கள் முன் தோன்றி வருகின்ற நிலை நீடிக்கிறது.

இராமர் கோவில் கட்டுமான பணியின் செய்திகளால்,

மோடியின் திட்டமிடா கொரோனா தொற்று தடுப்பு பொது முடக்கத்தால், பயணிக்க வழி இன்றி நடந்தே உயிரை மாய்த்த மக்கள்,  உணவின்றி தவித்த மக்கள், வருவாய் இன்றி துன்பப்படும் மக்கள் தாம் அனுபவிக்கும் துன்பங்களை மறந்து விட்டார்கள்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2016 ஆம் ஆண்டில் 8.25% ஆக இருந்து. 2019 ஆம் ஆண்டில் 4.25% சரிந்துள்ளது.  பொருளாதார சீரழிவு மக்கள் சிந்தனையில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டை, பிற்பாட்டோரே மறந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மரங்களை வெட்டி சாலைகளில் போட்டு, போக்குவரத்தை தடுத்து, பேருந்துகளை எரித்து, பல மனித உயிர்களை பலியிட்டு பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமை பரிபோவதை பாமக தலைவர் இராமதாசு போன்றோர் கூட குரல் எழுப்பாமல் அமைதி காக்கும் நிலை உள்ளது.

சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்க தவறிய மோடி, சீன செயலிகளை தடுப்பதாக சொல்லி, சீனாவிடம் ஏதோ போரிட்டு வென்று விட்டது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி உள்ளார்.  சீனாவின் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கும் சீன செயலிகளை தடுப்பதற்கும் எத்தகைய வேறுபாடு உள்ளது என்பதை மக்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.

மக்களின் சிந்தனையை திசை திருப்பும் முயற்சிகளில் மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

தமிழகத்தில் தொடரும் ஈ பாஸ் அடக்குமுறையை தட்டிக்கேட்க யாருமில்லை!

காஷ்மீரில் லட்சக்கணக்கான மக்கள்  கிட்டத்தட்ட வீட்டு சிறைகளில் தொலைதொடர்பு வாய்ப்பின்றி ஓராண்டுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளதை கேட்பதற்கு யாருமில்லை!

நீதிமன்ற தீர்ப்புகள் எல்லாம் ஆட்சியாளர்களுக்கு ஏற்புடையதாக வருவதை உற்றுநோக்க மக்களுக்கு நேரமில்லை!

Share this Post:

தொடர்பான பதிவுகள்: