செய்திகள்
திருவிழா நாட்கள் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் இல்லை.: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை ஆய்வு நடுவம் தகவல் தமிழக மீனவர்கள் 23 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம் முன்னாள் முதன்மை அமைச்சர் மன்மோகன் சிங் டில்லி எய்ம்ஸில் அனுமதி தலைக்கவசம் கட்டாயம் ஆணை - அமல் முதல் நாளில் 2000 வாகனங்கள் பறிமுதல் மதுரை மாவட்டம், திருமங்கலம், வாகைகுளம் அய்யனார் கருப்பசாமி கோயிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவையொட்டி பல்வேறு விதமான சிலைகளை வழிபாட்டாளர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தினர் அனைத்து அட்டைதாரர்களுக்கும் குடிமை பொருட்கள் வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை


அதல பாதாள குழிக்கு இழுத்து செல்லப்படும் இந்திய பொருளாதாரம்

அதல பாதாள குழிக்கு இழுத்து செல்லப்படும் இந்திய பொருளாதாரம்

இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி.  இதில், வேலை செய்யத்தக்க வயதுடையவர்கள், ஆண் பெண் சேர்த்து 40 விழுக்காடு.  அதாவது 52 கோடி நபர்கள் வேலை செய்யும் 20 முதல் 64 வயதுடையவர்கள்.

இவர்களில் ஆண்கள் 27 கோடி, பெண்கள் 25 கோடி என்று எடுத்துக்கொண்டால், ஆண்களில் 17% (4.7 கோடி) மற்றும் பெண்களில் 8% (2 கோடி) மட்டுமே திங்களொன்றிற்கு ரூபாய் 10 ஆயிரத்திற்கு மேல் வருவாய் கொண்டுள்ளனர். 

மேலும் கீழுமாக கணக்கை சரி செய்தாலும், மொத்த மக்கள் தொகையில் 7 கோடிக்கு குறைவானவர்கள் மட்டுமே திங்களொன்றிற்கு 10,000 ரூபாய்க்கு மேல் வருவாய் பெறுகின்றனர்.

மோடி நடுவன் அரசின், கொரோனா பரவலை தடுப்பதாக சொல்லி மேற்கொண்ட திட்டமிடா முடக்கத்தால், இந்தியாவில் இதுவரை இரண்டரை கோடி பேர் வேலை இழந்துள்ளனர். 7 கோடி நபர்களில், 2.5 கோடி நபர்கள் நடுவன் அரசின் திட்டமிடா செயல்களால் வருவாயை இழந்துள்ளனர் என்றால், மீதம் 4.5 கோடி மட்டுமே இன்றைக்கு ரூபாய் 10,000 க்கும் கூடுதலான வருவாயை கொண்டுள்ளனர்.

வேலை இழந்தவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர்கள்.  அதாவது திங்களொன்றிற்கு 25,000 ரூபாக்கு மேல் வருவாய் ஈட்டியவர்கள்.

இந்த வருவாய் பிரிவினர் தான், நடுத்தர வருவாய் பிரிவினர் என்ற கணக்கில், இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று அடையாளம் காணப்படுபவர்கள்.  

இவர்களை சார்ந்து தான் இந்தியாவின் பொருளாதாரம் மீதான கண்ணோட்டம் உலக அரங்கில் புரிந்துகொள்ளப்பட்டு, வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவிற்குள் ஈர்க்கிறது.

இவர்களின் வேலை மற்றும் வருவாய் இழப்பை, அரசு திட்டமிடாமல் ஏற்படுத்தியது, இந்தியாவின் முதுகெலும்பு என்ற அடையாளம் கொண்டவர்களின் முதுகெலும்பை உடைப்பதாக அமைகிறது. 

தெளிவாகச் சொல்வதானால், இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பு,மோடி நடுவன் அரசின் இந்த திட்டமிட்டா முடக்கத்தால் உடைக்கப்பட்டுள்ளது எனலாம்.

உலக அளவில், பிற நாடுகள் கொரோனா தடுப்பு முடக்கங்களை நடைமுறைப்படுத்தி இருந்தாலும், இந்தியா அளவிற்கு, கடுமையான முடக்கத்தை எந்த நாடும் அமல்படுத்தவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

முடக்கத்தின் பயனாக, நோய் கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும், தலைமுடிக்கு போடும் ஷாம்பு முதல் சரக்குகளை ஏற்றிச் செல்லும் சரக்குந்து வரை அனைத்தின் விற்பனையும் சரிந்துள்ளது.

இவ்வளவு கடுமையான பொருளாதார பாதிப்பிலிருந்து, இந்திய பொருளாதாரம் மற்றும் மக்கள் மீண்டெழுவதற்கான எந்த வாய்ப்புகளையும் அல்லது திட்டத்தையும் நடுவன் அரசு ஏற்படுத்தி தரப்போவதாக உலக பொருளாதார வல்லுனர்கள் இதுவரை உணரவில்லை. 

ஏனெனில், நடுவன் அரசானது, தன் நாட்டு மக்களை, வெற்று தட்டை கொட்டச்சொல்லுதல், விளக்கு பிடிக்க வைத்தல், வானிலிருந்து பூ தூவுதல் போன்ற பயனற்ற, சிறு பிள்ளைத்தனமான செயல்களை மட்டுமே செய்து வந்துள்ளது.

பொருளாதார வல்லுநர் விவேக் கெளவுல் கூற்றின்படி "அடுத்து வர இருக்கும் ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் 8 அல்லது 9 விழுக்காடு வளர்ச்சியை காணும் என்பதற்கான வாய்ப்பு இல்லை"  என்கிறார்.

2012 ஆம் ஆண்டு வாக்கில், 8 விழுக்காடாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி, நடுவன் அரசின் இந்த பொது முடக்கத்திற்கு முன்பே, கடந்த 7 ஆண்டுகளில் மெல்ல மெல்ல சரிந்து, 4.2 என்ற அளவிற்கு வீழ்ந்து கிடந்தது.

கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் பெருகி வருவது, மக்களை மேலும் கட்டுப்பாடான வாழ்க்கையை மேற்கொள்வதற்கு வழிவகை செய்வதால், அவர்கள், செலவினங்களை மேலும் குறைத்து வருகின்றனர்.  இதனால் மேலும் பொருட்களின் விற்பனை தேக்கம் ஏற்பட்டு, நாட்டின் பொருளாதாரம் இருப்பதை காட்டிலும் அதல பாதாள சரிவை சந்திக்கும் நிலை உள்ளது.

கடந்த வருவாய் ஆண்டை ஒப்பிடுகையில், இந்தியாவின் திறன் கைபேசி இறக்குமதி 51% சரிந்துள்ளது.  உணவகங்களில் 75% அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது.  மோட்டார் விற்பனை 28% குறைந்துள்ளது.

மக்கள் பலர் தாங்கள் குடியிருந்த பகுதிகளை விட்டு, வாடகை குறைவான பகுதிகளுக்கு இடம்பெயர்வது, வரும் நாட்களில் ரியல் எஸ்டேட் தொழில், இந்தியாவில் மிக இக்கட்டான சூழலை சந்திக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.  இது மேலும் பணப்புழக்கத்தை சுருக்கி, இந்திய பொருளாதாரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வந்தாலும், தமது சேமிப்பு முதலீடுகளை அதனை நோக்கி திருப்பிவிட மக்கள் மனநிலை கொண்டிருந்தாலும், வேலை இழப்பு மற்றும் பொருளாதார முடக்கத்தால், இந்தியாவில் 75% தங்க விற்பனை குறைந்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தை அச்சமடைய வைக்கும் மற்றொரு செய்தி என்னவென்றால், மக்கள், தமக்கு கிடைக்கும் அனைத்து பணத்தையும், அப்படியே வங்கிகளில் சேமித்து வைக்கும் மன நிலையை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.   வங்கிகள், இத்தகைய சேமிப்புகளுக்கு மிக குறைந்த வட்டி தருவதால், இந்த சேமிப்புகள் யாவும் பின் நாட்களில் கூட மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த பயன் தராது.

ஏற்கனவே முதலீடுகள் இன்றி தவித்து வரும் இந்திய மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மேலும் முதலீடுகள் குன்றி, தரமற்ற மருத்துவ வாய்ப்புகளை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய நடுவன் அரசு, பல்வேறு பொருளாதார திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக அறிவிப்பு மேற்கொண்டாலும், முடக்கத்திற்கு முன்பே, பொருளாதார மந்தநிலை சூழலை கடந்த 7 ஆண்டுகளாக ஏற்படுத்தி வைத்திருப்பதால், வாய் வார்த்தைகளில் மட்டுமே பொருளாதார திட்டங்களை நடுவன் அரசால் அறிவிக்க இயல்கிறது.

எச்எஸ்பிசி வங்கியின் வல்லுநர் பிரன்சுல் பண்டாரி "முன்புபோல், வாடிக்கையாளர்கள் பொருட்களை தாமாக முன்வந்து வாங்குவார்கள், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி நாட்டிற்கு ஏற்படும் என்ற மனநிலையை இந்திய அரசு விட்டு விட்டு, பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை காணவேண்டும்" என்று கூறுகிறார்.

இந்திய நடுவன் அரசு, தேவையற்ற செலவினங்களுக்கு பணத்தை செலவிடுவதை தவிர்த்து, மக்களைப் பிளவு படுத்தி அரசியல் பிழைப்பு மேற்கொள்வதை தவிர்த்து, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான உண்மையான நாட்டுப்பற்று கொண்டு, முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

நன்றி:
1.  புள்ளி தகவல் தரவுகள்:  ஆசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்
2.  இந்திய பொருளாதார சூழ்நிலை தகவல்: தி வால் ஸ்ட்ரீட் சேர்னல்

Share this Post:

தொடர்பான பதிவுகள்: