சொரியாசிஸ்: நோய் அல்ல, இது ஒரு குறைபாடு!

சொரியாசிஸ்:  நோய் அல்ல, இது ஒரு குறைபாடு!

சொரியாசிஸ் என்ற சொல்லைக் கேட்டாலே பெரும்பாலானவர்கள் அது ஏதோ ஒரு தொற்றுநோய் என்ற கருத்தை உள்வாங்கி கொள்கின்றனர்.  அலோபதி மருத்துவத்தில் அரிப்பு என்ற பொருள் கொண்ட கிரேக்க "சொரியா" சொல்லையும் "இசிஸ்" என்றால் நோய் என்று பொருள்படும் சொல்லையும் சேர்த்து "சொரியாசிஸ்" என்று குறிப்பிடுகிறார்கள்.

தமிழிலும் சொரி என்றால் அரிப்பு என்று பொருள் படுவதால், தமிழை தாய் மொழியாகக் கொண்ட நமக்கு, சொரியாசிஸ் என்றால் அரிப்பு நோய் என்று உடனடியாக விளங்குகிறது.

சொரியாசிஸ், ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் தொற்றுநோய் அல்ல.  கவனிக்காமல் விட்டால், சொரியாசிஸ் பாதிப்பு உள்ளவர், தம் உடலின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு மற்றொரு பகுதிக்கும் பரவுவதை உணர்வார்.

"சொரியாஸிஸ் நோய்" என்று குறிப்பிடுவதை விட, அது ஒரு குறைபாடு என்று சொல்வதே சரி.  எப்படி நீரழிவு நோய், உடல் உறுப்பின் செயல்பாடு குறைபாடால் ஏற்படுகிறதோ, அதேபோல, உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படுவதே இந்த சொரியாசிஸ்.

தேவையற்ற நிலையில், புதிய தோல் வேகமாக உருப் பெற்று, மேல்புற தோல் காய்ந்து உதிர்வதால் ஏற்படுவதே சொரியாசிஸ் பாதிப்பு.

நீரழிவு போலவே, சொரியாசிஸ் பாதிப்பும், தலைமுறைகளுக்கு, மரபணுக்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும் வாய்ப்பு உள்ளது.

சொரியாசிஸ், மருந்தின் மூலம் குணப்படுத்த இயலும் பாதிப்பு அல்ல.  ஆனால் மருந்துகள் துணைகொண்டு கட்டுப்படுத்த இயலும். அதாவது, பாதிப்பை கட்டுப்படுத்தலாம், முற்றாக தடுக்க இயலாது.

சொரியாசிஸ் பலவகைப்படும்:


அவற்றில் பிளேக் சொரியாசிஸ், எரித்ரோ டெர்மிக் சொரியாசிஸ் மற்றும் இன்வேர்ஸ் சோரியாஸிஸ் ஆகியவை பெரும்பாலான மக்களை பாதிக்கிறது.

மேலே குறிப்பிட்டவை அனைத்தும், தோலின் மேற்புறத்தில், தோல் காய்ந்து உதிரும் தன்மையை வெளிப்படுத்தும்.

சொரியாசிஸ் ஆர்த்தரைடீஸ் என்பது கை கால் விரல் மூட்டுக்களை செயலிழக்கச் செய்துவிடும். இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.  இல்லையேல் முடக்கம் நிரந்தரமாக மாறிவிடும்.




சொரியாசிஸ் - ஒரு பார்வை:


மரபணுக்கள் மூலம் வந்து சேரும் சொரியாசிஸ் குறைபாடு, நாம் உட்கொள்ளும் மருந்து அல்லது வெயிலில் பெருமளவு சுற்றுவது அல்லது மன அழுத்தம் இவற்றினால் பொதுவாக இது வெளிப்படுகிறது.

நம் மூதாதையர் யாருக்கேனும் சொரியாஸிஸ் குறைபாடு உள்ளது என்பதை நாம் கண்டிருப்போமேயானால், நாமும், நம் அடுத்த தலைமுறைகளும், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

குணப்படுத்த இயலாத பாதிப்பு சொரியாசிஸ்.  ஆனால், மருத்துவ முறைகளால் இவற்றை கட்டுப்படுத்த இயலும்.

மருத்துவரின் அறிவுரைப்படி செயல்பட்டால், பாதிப்பு வெளிப்படுவதை குறைக்கலாம்.  பாதிப்பின் தன்மையை கட்டுப்படுத்தலாம்.  தாக்கத்தை குறைக்கலாம்.

சொரியாசிஸ், வெட்கப் படுவதற்கான ஒரு பாதிப்பு அல்ல.  நம் உடலில் ஏற்படும் தாமாக செயல்படும் நோய் எதிர்ப்புத்தன்மை (ஆட்டோ இம்யூன்) போராட்டத்தால் வெளிப்படுவது சொரியாசிஸ் அறிகுறி.  மன அழுத்தமும் சொரியாசிஸ் வெளிப்படுவதற்கு ஒரு அடிப்படை.

சொரியாஸிஸ் ஏற்பட்ட ஒருவரை தொடுவதாலோ, சொரிந்தால் உதிர்ந்து விழும் பொடுகுகள் மூலமோ, முத்தமிடுதல் மற்றும் உறவு கொள்ளுதல் மூலமோ சொரியாசிஸ் பரவாது.  இது நோயல்ல... இது ஒரு குறைபாடு...

சொரியாசிஸ் மருத்துவம்:


சொரியாசிஸ் பாதிப்பு தோல் மீது அறிகுறியாக காட்டியவுடன் அதற்காக மருத்துவம் எடுத்துக் கொள்வதே சிறந்தது.  கவனிக்காமல் விட்டால், உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பரவி, நாளடைவில் உடல் உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கான தாக்கத்தை ஏற்படுத்தும்.

பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் குழைமம் (கிரீம்) பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

சாலிசிலிக் அமிலம் கலந்த சோப்பு அல்லது ஷாம்பூ பயன்படுத்துவது தோல் செதிலாக உதிர்வதை தடுக்கும்.

கடுமையான பாதிப்பு உள்ளவர்களுக்கு, மருத்துவர் அறிவுரையுடன் ஊக்கியம் (ஸ்டீராய்டு) பயன்படுத்துவது  பலன்தரும்.

சில நேரங்களில் அரிப்பை சொறிவதால், புன் ஏற்பட்டு, அதனால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.  நோய்த்தொற்று ஏற்படுமேயானால், அதற்காக மருத்துவர் துணையுடன் மருந்து உட்கொள்வது தேவை.

மருத்துவம் மற்றும் மருந்துகள் ஆகியவற்றைவிட, உணவு பழக்க வழக்கங்களையும்,  வாழ்வின் செயல்பாடுகளையும் சற்று மாற்றி அமைத்தால், சொரியாசிஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வரலாம். அதன் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

அலோபதி மருத்துவம் மட்டுமல்லாது, பிற மாற்று மருத்துவ முறைகளும் சொரியாசிசை கட்டுப்படுத்தும்.  எல்லா மருத்துவ முறைகளாலும் கட்டுப்படுத்த மட்டுமே இயலும், குணப்படுத்த இயலாது என்பதை சொரியாசிஸ் பாதிப்பு உடையவர்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையேல் தேவையற்ற செலவினங்களுக்கு முற்படுவீர்கள்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: