வட இந்திய ஊடகங்கள் பல, கடந்த சில நாட்களாக, ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பான பல கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை, வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற கருத்துக்களை எடுத்துரைத்து வருகின்றன.
ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் மூடப்பட்டதால், பொருளாதார சீரழிவு ஏற்பட்டு, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொழில் செய்து வந்தவர்களுக்கும், அங்கே பணி செய்தவர்களுக்கும், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பேரிடர் ஏற்பட்டுவிட்டதாக ஒரு கருத்தை, இந்த கட்டுரைகள் மூலம் வட இந்திய வேதாந்த நிறுவன ஆதரவு ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.
இத்தகைய கருத்துக்களால் உந்தப்பட்டு, உண்மையில் ஸ்டெர்லைட் ஆலையின் பின்னணி என்ன? அதன் வரலாறு என்ன? அது மூடப்பட்டதால் ஏற்பட்ட விளைவு என்ன? அது தொடர்ந்து நடத்தப்பட்டு வந்திருந்தால் ஏற்பட இருந்த விளைவுகள் என்ன? என்பது குறித்து ஒரு கட்டுரை வரைவதற்கான வாய்ப்பு ஏற்பட்ட்டது.
ஸ்டெர்லைட் ஆலை மூடல்
நடுவன் அரசின் தூண்டுதலால், தமிழக காவல்துறை 2018 ஆம் ஆண்டில், 13 அப்பாவித் தமிழர்களை, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது சுட்டுக்கொன்றது. தமிழ மக்களின் கோபத்தை தடுக்கும் முயற்சியாக, தமிழக அரசு, வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடுவதற்கான ஆணையை பிறப்பித்தது.
ஸ்டெர்லைட் ஆலையின் வரலாறு
ஸ்டெர்லைட் ஆலை, வேதாந்தா குழுமத்தின் ஒரு பகுதியாகும். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிய இந்த ஆலையில் செம்பு உருக்கி பிரித்தெடுக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையானது, 1991 ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரி என்கிற இடத்தில் நிறுவப்படுவதாக இருந்தது. இதற்காக மகாராஷ்டிரா அரசு 500 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தது. 1993 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டது.
உள்ளூர் மக்கள், இந்த ஆலையால் ஏற்படும் பின் விளைவுகளை உணர்ந்து, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்ததால், அந்த ஆலை அங்கு நிறுவப்படாமல் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழக அரசு, இந்த ஆலையை, தூத்துக்குடியில் நிறுவுவதற்கு இடம் தருவதாகச் சொல்லி, தூத்துக்குடி பொது மக்களின் கருத்துக்களையும், மீனவர்களின் கருத்துக்களையும் கேட்காமல், இந்த ஆலையை நிறுவுவதற்கான அனுமதியை கொடுத்தது.
பல்லுயிர்கள் வாழும் மன்னார் வளைகுடா பகுதியில், பெருமளவு மாசு இந்த ஆலையால் ஏற்படும் என்றும், அதனால், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மனிதனுக்கு இந்த ஆலையால் பெருந்தீங்கு ஏற்படும் என கூறி, அப்போதே தூத்துக்குடி மீனவர்கள், முழுமையான தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அப்போதைய தமிழக அரசு, அவர்களின் கூற்றை ஏற்காமல் ஆலைக்கு அனுமதி வழங்கியது.
அரசியலில் பிழைப்போர் பலர், இந்த ஆலையில் இருந்து பல துனை வேலைகளை தமக்காக பெற்றுக்கொண்டு தமது பிழப்பிற்கு வழி தேடிக்கொண்டனர்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலை 1998 ஆண்டு முதல் தனது செம்பு உற்பத்தியை தூத்துக்குடியில் துவங்கியது.
மனிதனும் செம்பின் தேவையும்
செம்பு மின்கடத்துவதற்கு சிறந்த பொருள். இதன் நெளியும், நீட்டிக்கும் மற்றும் வளையும் தன்மையானது, பல்வேறு பயன்பாட்டில், இதை பயன்படுத்துவதற்கு ஏதுவாக்குகிறது. மேலும், பித்தளை, தங்கம் மற்றும் வெங்கலம் ஆகிய பொருட்கள் உற்பத்தியில் செம்பு பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
செம்பு பிரித்தெடுத்தல்
பல்வேறு வகைகளில் செம்பு மனிதனுக்கு பயன்படும் பொருளாக விளங்கினாலும், செம்பை உருக்கி பிரித்தெடுத்து உற்பத்தி செய்வது, காற்று, மண் மற்றும் நீரை மாசு படுத்துவதாக அமைகிறது.
ஏனெனில், பிரித்தெடுக்கும் பொழுது, பெருமளவிலான ஹைட்ரஜன் குளோரைடு, சல்ஃபர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, மேலும் நச்சுக் கலந்த புகை, காற்று, ஆவி என பலவற்றையும் வெளியிடுகிறது.
இத்தகைய நச்சுக்களால், தொழிற்சாலை அருகில் வாழ்வோருக்கு, வாந்தி, மயக்கம், தலைவலி, வயிற்று அழைச்சல், சிறுநீரகக் கோளாறு, ஈரல் கோளாறுகள் மற்றும் இறப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சுற்றுச்சூழலின் மீதான தாக்கம்
செம்பை பிரித்தெடுத்து உற்பத்தி செய்தல் என்று வந்துவிட்டாலே, அங்கே மாசு ஏற்படுத்துதல் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும். ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை, அந்த ஆலையானது பல்வேறு வேதி பொருட்களை மண்ணிலும், நீரிலும், காற்றிலும், மாசு ஏற்படுத்து என்று அறிந்தே, வெளியிட்டது என்பது உறுதி செய்யப்பட்ட குற்றச் செயலாகும்.
காற்று, மண் மற்றும் நீரின் மாதிரிகளை எடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, உச்ச நீதிமன்றம், இந்த ஆலைக்கு 100 கோடி ரூபாய் தண்டத்தொகை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், தனது பொறுப்பற்ற நடவடிக்கையால், 2013 ஆம் ஆண்டு சல்பியூரிக் அமிலம் கசிந்து, அருகில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தியது. அப்பொழுதே மக்கள் இந்த ஆலை மூடப்பட வேண்டும் என போராட்டங்களை முன்னெடுத்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை மூடியதால் ஏற்பட்ட பின்விளைவு
இந்தியாவின் மொத்த செம்பு உற்பத்தியில் இந்த ஸ்டெர்லைட் ஆலை 2018 ஆம் ஆண்டு மார்ச் வரை 45 விழுக்காடு அளவிற்கு தன் பங்கைக் கொடுத்து வந்தது.
இந்த ஆலையை தவிர்த்து இந்தியாவில் ஹிண்டால்கோ மற்றும் இந்துஸ்தான் செம்பு நிறுவனம் ஆகியவை செம்பு உற்பத்தி செய்து வருகின்றன.
இவை இரண்டிலுமான மொத்த செம்பு உற்பத்தி, இந்தியாவில் இயங்கும் மின் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு தேவையான செம்பை வழங்க போதுமானதாக இருக்காது.
மேலும், செம்பு, பிற பொருட்கள் உற்பத்திக்கும் தேவையான ஒரு மூலப்பொருளாக விளங்குகிறது.
ஆகவே இந்தியா, தன் செம்பு தேவைக்காக, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தீர்வு
இந்திய அரசு, தன் குடிமக்களின் உயிர்களை காக்கும் நடவடிக்கையாக, முதலில் தமது அரசியல் தேவைகள் மற்றும் தனது குஜராத்தி நண்பர்கள் என்பனவற்றை தவிர்த்து, மாசு ஏற்படுத்தும் ஆலைகளை ஊக்குவிப்பதில் இருந்து முற்றாக விலகி தடுக்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பங்களை கொண்ட, குறைந்த மாசு ஏற்படுத்தும் செம்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைவதற்கு ஏதுவாக வரிச் சலுகைகளை அறிவித்து, இறக்குமதிக்கு பொருளாதார உதவிகளைச் செய்தும் புதிய பாதுகாப்பான தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும்.
தனது நாட்டின் மண், காற்று மற்றும் நீர் மாசுபடாமல் இருக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்த மண்ணின் மீது உண்மையான பற்று கொண்ட மக்களின் ஆவல்.