மூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்?

மூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்?

நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதையடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன, பாசக-வின் நீண்ட நாள் தோழமை கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்சிம்ரத்கவுர் பாதல் பதவி விலகுகிறார்.

மேலும் கடும் எதிர்ப்புகளை அடுத்து முதன்மை அமைச்சர் நரேந்திர மோடி,

"எதிர்க்கட்சிகளின் தவறான பரப்புரைகளுக்கு உழவர்கள் இரையாக வேண்டாம்"

என்று வழக்கமான தனது கருத்தை கூறுகிறார் .

பொதுவாக இது உழவர்களுக்கு எதிரானது, கார்ப்பரேட்களுக்கு, தனியார்களுக்கு வாய்ப்பானது, உழவு தொழிலில் உள்ளவர்களை அழிப்பது, நாட்டின் உணவுப்பாதுகாப்பை அழிப்பது என்று கடுமையான எதிர்மறை கருத்துக்கள் எழுந்து வருகின்றன.

நடுவன் அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான

1.  வேளாண் விளைபொருள் விற்பனை சட்ட வரைவு
2.  உழவர்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உறுதி அளிக்கும் சட்ட வரைவு,
3.  அடிப்படை தேவையான பொருட்கள் திருத்த சட்ட வரைவு

ஆகிய 3 சட்ட வரைவுகளும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் நாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டன.

இந்த 3 சட்டங்கள் எதை நோக்கியது? என்று பார்போம்:

1. வாழ்வதற்கு அடிப்படை தேவையான பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அத்தகைய பொருகளின் விலைகள் மீதான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

2. ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வாய்ப்பு செய்து கொடுத்தல்

3. ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை இனி மாநில அரசுகளின் கட்டுப்பாடு எல்லைக்கு வெளியே, தனியார் சந்தைகளை நிறுவுவது.  அதற்காக சலுகைகளை மோடி அரசு வழங்குவது.

அதாவது மண்டி முறையை ஒழித்துக் கட்டுவதாக இந்த 3 வது சட்டத்தை தான் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. உழவர்களின் போராட்டமும் இது குறித்து தான்.

ஏற்கெனவே உள்ள ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் மண்டி முறை ஒழிக்கப்பட்டு, தனியார்கள், பெரு வணிகர்கள், தரகர்கள், ஆகியோரே உழவர்களின் உற்பத்திப் பொருட்களின் விலைகளை இனி முடிவு செய்வதற்கு இந்த மோடி நடுவன் அரசின் புதிய சட்டம் வழிவகை செய்கிறது.

உழவர்கள் கவலைப்படுவது என்னவெனில், மண்டிகள் என்ற ஏபிஎம்சிக்கு வெளியே தனியார்களை கொண்டு வருவதன் மூலம் ஏபிஎம்சியில் விளை பொருட்களை வாங்குபவர்கள் எண்ணிக்கை சரியும்.

இது ஏனெனில், இந்தப் புதிய வேளாண் சட்டத்தில், இந்த புதிய தனியார் ‘வணிக பகுதிகள்’ அல்லது புதிய தனியார் சந்தைகளில் பொருட்களை விற்க வரும்போது சந்தைக் கட்டணம், சுங்கம், அல்லது கூடுதல் கட்டணம் என எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பழைய மண்டி முறையில் கட்டணங்கள் கூடுதலாகச் சேர்க்கப்படும்.  அதாவது, மாநில அரசு அமைக்கும் சந்தையில் பொருள் விற்றால் வரி சேர்க்கப்படும், அதே வேளையில் தனியார் அமைக்கும் சந்தைகளுக்கு வரி இல்லை.

தனியார் சந்தைகளை உள்ளே கொண்டு வந்து அவர்களுக்குச் வாய்ப்பாக இந்த சலுகைகளை அளிக்கும் போது, இது சரி நிகரான ஒரு போட்டிச் சந்தையை ஏற்படுத்தாது.

சமூக அறிவியலாளர் மற்றும் அரசியல் தலைவரான, உழவர் இயக்கங்களின் தலைவருமான யோகேந்திர யாதவ் இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றில் கருத்து கூறும்போது,

“ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் குழுக்களுக்கு வெளியே இருக்கும் தனியார்களுக்கு கூடுதல் கட்டணம், வரி இல்லை என்றால் ஏபிஎம்சி பக்கம் யாரும் வர மாட்டார்கள். வணிகர்கள் எளிதாக வெளியேயிருந்து கொள்முதல் செய்து கொள்வார்கள். அவர்கள் தங்கள் வருவாயில் ஒருவிகிதத்தை தருவதாகக் கூறி உழவர்களை ஆசை காட்டி இழுக்க முடியும். இப்படி செய்தால் ஏபிஎம்சி முறை முற்றிலும் ஒழிந்து விடும்”

என்கிறார்.

மேலும்,  

“ஏபிஎம்சி முறையை மேம்படுத்துவதற்குப் பதிலாக இவர்கள் தனியார்களுக்கு தாரை வார்த்து மண்டி முறையையே ஒழிக்கப் பார்க்கின்றனர்”

என்கிறார்.

இது நடந்து விட்டால் திறந்த சந்தை என்ற பெயரில், விளை பொருள் விற்பனை சந்தை கார்ப்பரேட்டுகளின் தன்னிச்சையான செயல்பாட்டிற்கு வந்து விடும், விளை பொருட்களுக்கு இவர்கள் வைப்பதுதான் விலை.

எந்த வணிகரும் அவர்களது கூட்டமைப்பு முடிவு செய்ததற்கு கூடுதலாக விலை கொடுக்க மாட்டார்கள்.

ஆனால் ஆர் எஸ் எஸ் மற்றும் பா ச க ஆதரவாளர்கள் கூறுவது யாதெனில்

"போட்டி நிகர்நிலை ஏற்படுத்தும், கட்டுப்பாடற்ற விளைபொருள் கொள்முதலால், சந்தை துல்லிய போட்டியை சந்திக்கும், இதனால் உழவர்களுக்கு அவர்களது விளைபொருட்களுக்கான சரியான  விலை கிட்டும்’

என்கிறார்கள்.

வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர்,

“இந்த மசோதாக்கள் போட்டியை அதிகரித்து தனியார் முதலீட்டை இந்த துறையில் ஈர்க்கும் இதனையடுத்து வேளாண் உள்கட்டமைப்பு வளர்ச்சியடைய உதவும். வேலை வாய்ப்பு உருவாகும்”

என்கிறார்.

ஆனால் இந்தச் சந்தை பொருளாதாரக் கோட்பாடு பொத்து போய் சமச்சீரான போட்டி என்பது காணாமல் போய்விட்டது என்பது வேறு கதை. அதுதான் பீகாரில் வரலாற்று உண்மையாக விளங்கிவருகிறது.

கார்ட்டெல் என்ற முதலாளிகள், கார்ப்பரேட்கள் தங்களுக்குள் ஒப்பந்தித்துக் கொண்டு இந்த பொருளுக்கு இன்னவிலைதான் கொடுக்கப் போகிறோம் என்று கூட்டாக முடிவுசெய்து கொள்வார்கள், இதில் எங்கு சந்தைப் போட்டி ஏற்படப்போகிறது?

பிகாரில் ஏற்கெனவே ஏபிஎம்சி முறை ஒழிக்கப்பட்டு, 2006-ல் மாற்று முறை கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து குறைந்த அடிப்படை விலை அளிக்க வேண்டிய விளைபொருட்களை அரசு வாங்குவது கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தப்பட்டதுதான் நடந்தது.  இது தான் வரலாறும்.

ஏபிஎம்சி முறையில் விளை பொருட்களை வணிகர்கள் மண்டியில் ஏலம் எடுப்பார்கள், கூடுதல்விலை கொடுக்க முன்வருபவர்களுக்கு விற்கப்படும். ஏனெனில் அங்கே அடிப்படை குறைந்த விலை என்று ஒரு அடிப்படை விலையை மாநில அரசு முடிவு செய்யும்.

ஆனால் தனியார் மண்டிகளில் இந்த முறை கிடையாது. பிகார் தனியார் மண்டிகளில் உழவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு மிகக்குறைந்த விலையே கொடுக்கப்படுகிறது, அதுவும் விளை பொருள் உற்பத்தி அளவிற்கு ஏற்ப இது கடுமையாக மாறுகிறது.

பிகாரில் சோளத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,200 கடந்த ஆண்டு இருந்த விலை நடப்பு ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ.1300 ஆகச் சரிந்துள்ளது.

பிகார் மாநிலத்தின் தனியார் மண்டி குறித்து வேளாண் உணவுப்பொருள் கொள்கை நிபுணர் தேவிந்தர் ஷர்மா,

“தனியார் முதலீடுகளை ஈர்ப்பது என்பதுதான் இதன் சொல்லப்படும் மேம்போக்கான கருத்து. விற்பனை உள்கட்டமைப்புகளில் தனியார் முதலீடுகளை ஈர்த்து போட்டித்திறன் மிகு சந்தை மூலம் சிறந்த விலை கிடைக்கும் என்பதுதான் அரசு சொல்லும் கோட்பாடு, ஆனால் உழவர்களுக்கு பேரிடராக அப்படி எதுவும் நடக்கவில்லை.  அதற்கு பதிலாக தனியார் கொள்ளை வருவாய் ஈட்டுவது தான் நடந்தேறி வருகிறது"

என்ற உண்மை நிலையை எடுத்துச்சொல்கிறார்.

உழவர்களின் இன்னொரு அச்சம் என்னவெனில்

வேளாண் விளைபொருளுக்கு குறைந்த அடிப்படை விலை என்ற பிரிவில் அரசுக் கொள்முதல் அளவு பெருமளவு குறைந்து விடும் என்பது. குறைந்த அளவிலான அடிப்படை விலை குறித்து இந்த 3 சட்டங்களிலும் எதுவும் நேரடியாகவோ மறைமுகமாகவே குறிப்பிடவில்லை என்றாலும், இந்த நடைமுறை பழக்கத்துக்கு வந்து போகப்போக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த அடிப்படை விலையில் அரசுக் கொள்முதலே இல்லாமல் செய்வதற்கான முன்னோடி


என்று இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.

இது தொடர்பாக முதன்மை அமைச்சர் நரேந்திர மோடி அரசு 2014ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் விதத்தைப் பற்றி யோகேந்திர யாதவ்

“ஏற்கனவே குறைந்த அடிப்படை விலைக்கும் கூடுதலாக ஊக்கத் தொகை அளிப்பதை இந்த அரசு எப்படி மாநிலங்களைத் தடுத்த வழிமுறைகளைப் பார்த்தால் புரியும்".

நடுவன் ஆர் எஸ் எஸ் மற்றும் பாசக அமைத்த சாந்தகுமார் குழுவின் கூற்றுப்படி,

"உணவு மானியச் செலவு குறைக்கப்பட வேண்டும். அரசுக் கொள்முதல் குறைக்கப்பட வேண்டும். மேலும் கோதுமை, அரிசி ஆகிய அத்தியாவசிய உணவுபொருட்களை அரசுக் கொள்முதல் செய்வது நீடித்து செயல்பட கூடாது."

இவையெல்லாம் குறைந்த அடிப்படை விலை என்ற உழவர் நலத்திட்டத்திலிருந்து முற்றிலும் அரசு விலகுவதற்கான முன் ஏற்பாடுகளே.

ஏற்கனவே சமையலுக்கான எறி காற்று உருளை மானியம் முற்றாக நீக்கப்பட்டுவிட்டது.

ஆனால், மக்களின் எதிப்பை திசை திருப்பும் விதமாக,  

"குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கும் முறை இருக்கும், அதற்கு உறுதி அளிக்கிறோம்"

என்கிறார் வேளாண் அமைச்சர் தோமர்.

பெரு முதலாளிகளை வாழ வைக்க மற்றும் அவர்களை உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற வைக்க மோடி அரசு எல்லா வகையிலும் செயல் படுகிறது என்பதற்கு இந்த சட்டங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: