பண்டைய தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்கள்

பண்டைய தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்கள்

எமது வட இந்திய நண்பர் ஒருவர் "தமிழர்களுக்கு வகைவகையாக உணவுகளை செய்து உண்ண தெரியாது, அவர்களுக்கு எப்பொழுதும் சாம்பார், இட்லி, தோசை, அரிசி சோறு மற்றும் உறைப்பான வகை உணவுகள் தான்" என்று நக்கலாக என்னிடம் எடுத்துரைத்த நாள் முதல், பண்டைய தமிழர்கள் என்ன உணவை உண்டு வந்திருப்பார்கள் என்கிற ஒரு எண்ண ஓட்டம் மனதில் இருந்துகொண்டே இருந்தது.

தமிழ் இலக்கிய நூல்களில் கட்டாயம் பண்டைய தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்கள் குறித்து குறிப்புகள் இருக்கும் என தமிழ் ஆசிரியர் ஒருவர் சொல்லக் கேட்டு, அவரின் துணைகொண்டு, பல்வேறு தமிழ் சங்க இலக்கிய நூல்களில், நம் முன்னோரின் உணவுப்பழக்கங்கள் குறித்து ஆய்வு செய்யத் துவங்கினோம்.

ஆய்வைத் துவங்கும் முன்பே அவர் சொன்ன ஒரு கூற்று மனதில் ஆழமாக பதிந்தது.  அதாவது, வட இந்தியர்கள், அவர்கள் மீது படையெடுத்து வந்தவர்களின் உணவு பழக்க வழக்கங்களை தமதாக்கிக் கொண்டார்கள்.  அதனால் அவர்களிடம் பல்வேறு வகையான உணவுகளை சமைத்து உண்ணும் பழக்க வழக்கம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.  அதேவேளையில், தமிழர்களைப் பொருத்தவரை, பழந்தமிழர் என்ன வகை உணவுகளை உண்டு வந்தார்களோ, அதையே இன்றளவும் சின்னஞ்சிறு மாறுதல்களை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி உண்டு வருகிறார்கள்.

பண்டைய தமிழகம்

இன்றைய தமிழகத்தை காட்டிலும் பண்டைய தமிழகம் பரந்து விரிந்து காணப் பட்டிருக்க வேண்டும்.  ஐந்து விதமான நிலப்பரப்புகளை தமிழர்கள் தம் கட்டுப்பாட்டில் கொண்டிருந்திருக்கிறார்கள்.  அவை மலைப் பகுதிகளை உள்ளடக்கிய குறிஞ்சி, காடும், காடு சார்ந்த பகுதி முல்லை, விளைநிலங்களை கொண்ட மருதம், வறண்ட பகுதியான பாலை, மற்றும் கடற்கரை பகுதிகளான நெய்தல்.

இந்த ஐந்து நிலப்பரப்புகளும் தனித்தனியான உணவுப் பழக்கங்களைக் கொண்ட தமிழர்களை உள்ளடக்கி இருந்தது என்று சொன்னால் மிகையாகாது.  ஏனெனில் அன்றைய தமிழர்கள் தத்தமது குடிகளுக்கு அருகே கிடைக்கும் உணவு பொருட்களை கொண்டே தம் உணவு பழக்கங்களை அமைத்திருந்தனர்.

சங்க இலக்கியதில் தமிழர் உணவு:

ஔவையாரின் தனிப்பாடல் திரட்டு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.  இந்நூலில் "வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரென வேபுளித்த மோரும் - திறமுடனே புல்வேளுர்ப் பூதன் புரிந்துவிருந் திட்டான்ஈ(து) எல்லா வுலகும் பெறும்" என்கிற ஒரு செய்யுள் இடம்பெற்றுள்ளது.

"வரகரிசிச் சோற்றையும், வழுதுணங்காய் வதக்கலையும், முரமுரென்று புளித்திருந்த மோரையும், புல்வேளுர்ப் பூதன், உறுதியுடனே விரும்பியவனாக எனக்கு விருந்தாகப் படைத்தான்" என்பது அதன் பொருள்.

சங்க நூலான சிறுபாணாற்றுப்படை தொகுப்பில் மருதம் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் வெள்ளை அரிசிச் சோறும், நண்டு இறைச்சியிலிருந்து செய்யப்பட்ட கறி குழம்பும், புடலங்காய் கூட்டும் உண்டு வந்தது குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பொருநராற்றுப்படை  தொகுப்பில் குறிஞ்சியில் வாழ்ந்த மக்கள் கிழங்கும் தேனும் உண்டு வந்ததாக எடுத்துரைக்கிறது.

மலைபடுகாடம் தொகுப்பில் பலாப்பழ கொட்டைகள் கொண்டு செய்த குழம்பு, மாங்காய் மற்றும் புளி கொண்டு செய்த குழம்பு, மேலும் மூங்கில் அரிசி, மோர் குறித்த தகவல்கள் முல்லை பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் உணவாக இடம் பெற்றுள்ளன.

பால் சோறு மற்றும் புளியோதரை குறித்து அகநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கிறது.  மேலும் முல்லை நிலத்தில் காவல் பணியில் ஈடுபட்ட தமிழர்கள் காட்டு பன்றியை கொன்று அவற்றின் இறைச்சியை தீயில் சுட்டு உணவாக உண்டதாக எடுத்துரைக்கிறது.

புறநானூறு, தமிழரின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து கூறும்பொழுது அன்றைய தமிழர்கள் இறைச்சியை முதலில் தயிரில் ஊறவைத்து பின் எடுத்துச் சமைத்தனர் என்று சொல்கிறது.

பெரும்பாணாற்றுப்படை தொகுப்பில் வரகு அரிசி, புளி கூழ், பயறு வகைகள், அவரை வகைகள் குறித்த தகவல்கள், அவற்றை சமைக்கும் முறைகள் குறித்த தகவல்கள் உள்ளன.

மாதுளம் பழம் விதைகளை நெய்யில் வதக்கி அதை ஒரு இனிப்பான உணவாக உண்டு வந்ததாக அகநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கிறது.

வரகு, சாமை, திணை போன்றவற்றில் பல்வேறு வகையான உணவுகளை சமைத்து பண்டைய தமிழர்கள் உண்டு வந்திருக்கிறார்கள் என்கிறது பல வரலாற்றுச் சான்றுகள்.

மீன், எலி மற்றும் இறைச்சி:

தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் வயல் எலியின் இறைச்சியும் பெரும் பங்காற்றியுள்ளது.

நற்றிணை பாடலொன்று, எலியின் இறைச்சியை நெய்யில் சமைத்து உண்பது குறித்த ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளது.

பட்டினப்பாலை பாடலில் ஆமை இறைச்சி மற்றும் உடும்பு இறைச்சியை சமைத்து உண்ணுதல் குறித்த விளக்கங்கள் எடுத்துரைக்கப் பட்டுள்ளன.

புறநானூற்றுப் பாடல், பண்டைய தமிழர்கள் விலாங்கு, கெண்டை, கெளுத்தி, வாளை மற்றும் கணவாய் ஆகிய மீன் வகைகளை தமது அரிசி வயல்களிலிருந்து பிடித்து உண்டு வந்ததாக சொல்கிறது.

பொதுவாக தமிழர்களது உணவில் நண்டு, மீன், கோழி மற்றும் ஆட்டு இறைச்சி இடம் பெற்றிருந்ததை புலவர்களின் பாடல்கள் மற்றும் பண்டைய தமிழர்களின் வழிபாட்டு முறைகளில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.  

பிரியாணி:

காய், கறி என எதுவாக இருந்தாலும் அவற்றை வதக்கி வறுத்து உண்ணுதல் என்பது தமிழர்களின் உணவுப் பழக்கமாக தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது.  மேலும் காய் வகைகளையும் இறைச்சி வகைகளையும் சேர்த்து சமைத்து உண்ணும் பழக்கம் தமிழர்களிடம் இன்றளவும் பரவலாக உள்ளது.

முகலாயர்களின் பிரியாணி தமிழகத்திற்கு வருவதற்கு முன்பே, வெள்ளை அரிசிச் சோற்றுடன் சேர்த்து இறைச்சியையும் சமைத்து உண்ணும் பழக்கம் தமிழர்களிடையே இருந்து வந்துள்ளது என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மதுரை அருகே உள்ள மேலூர் பகுதிகளில் வழிபாட்டு நிகழ்வுகளில் வழங்கப்படும் படையல் உணவு தெளிவாக விளக்குகிறது.

தமிழ் மொழி எப்படி பிறமொழி தாக்கத்திலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளாக சிறந்தோங்கி தன் தனித்தன்மையை தக்க வைத்து வாழ்ந்து வருகிறதோ அதே போன்று தமிழர்கள், தமது உணவு பழக்க வழக்கங்களையும், தம் முன்னோர்களின் உணவு பழக்க வழக்கத்திலிருந்து பெருமளவில் மாறுபடாமல் தக்க வைத்து, தம் பண்பாட்டை காத்து வருகின்றனர் என்பது பெருமைக்குரிய வரலாற்று உண்மை.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: