மோடி Vs மன்மோகன் சிங், இவர்களில் யார் சிறந்த (பிரதமர்) முதன்மை அமைச்சர் ?

மோடி Vs மன்மோகன் சிங், இவர்களில் யார் சிறந்த (பிரதமர்) முதன்மை அமைச்சர் ?

முதன்மை அமைச்சர் மோடிக்கு முன்பு முதன்மை அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் அவர்களை குறித்துச் அரசியல் அடிப்படையில் சொல்ல வேண்டுமென்றால், மக்களால் தேர்தலில் தேர்வு செய்யப்படாதவர், துணிச்சலாக எந்த முடிவையும் தாமாக எடுக்கத் தயங்குபவர், அரசியல் பேச்சுத்திறமை அற்றவர், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி அவர்களால் முதன்மை அமைச்சராக அமர்த்தப்பட்டவர் எனலாம்.

இப்போதைய இந்திய நாட்டின் முதன்மை அமைச்சர் மோடி அவர்களை குறித்துச் சொல்ல வேண்டுமென்றால், அவர் சிறந்த அரசியல்வாதி, ஆளுமைத் தன்மை கொண்டவர், சொல்பேச்சு வித்தகர், துணிவுடன் செயலாற்றுபவர், மக்கள் வாக்களித்ததால் முதன்மை அமைச்சர் ஆனார், என அவர் குறித்த சிறப்புகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

அரசியல்

மோடி, இந்துத்துவா அமைப்புகளில் பணியாற்றி, அதன் மூலம் அரசியல் பாதையில் வளர்ச்சியை கண்டு, குஜராத் முதலமைச்சராக ஆர்எஸ்எஸ் அமைப்பினால் அமர்த்தப்பட்டு, பின்பு இந்துத்துவ அமைப்புகளின் துணை கொண்டு தன் பேச்சுத்திறமை மூலம் மக்களை கவர்ந்து முதன்மை அமைச்சர் ஆனவர்.  

மோடி, மக்களின் பெரும் ஆதரவு பெற்று முதன்மை அமைச்சர் ஆனார்.  அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி.  அவருக்கு ஈடு இணையாக இதுவரை அரசியல் சித்து விளையாட்டுகளில் சிறந்து, அதன்மூலம் மக்களின் செல்வாக்குப் பெற்ற ஒருவர் இந்தியாவின் தலைமை பொறுப்பை ஏற்கவில்லை என சொல்லலாம்.

மன்மோகன் சிங், அமைதியாகப் பேசும் தன்மை கொண்டவர்.  அவருக்கும் அரசியலுக்கும் எட்டாத தொலைவு உண்டு எனலாம்.  மாநகராட்சி பகுதி உறுப்பினராக கூட தாமாக தேர்தலில் நின்று வெற்றி பெறும் தகுதி அற்றவர் என சொல்லலாம். படிக்காத மக்களின் செல்வாக்கு ஏதும் இல்லாதவர்.  தனக்குத் தோன்றியதை, துணிச்சலாக நடைமுறைப்படுத்த துணியாதவர். ஒரு சிறந்த அரசியல் தலைவர் என்பதற்கான எந்த அடிப்படையும் இல்லாதவர்.

கல்வி

மோடி அவர்களை பொறுத்தவரை அவர் முறையாக பள்ளிகளுக்குச் சென்று கற்றார் என்பதற்கான எந்த சான்றும் இல்லை.  அவர் தன் வாழ்நாளின் துவக்க நாட்களில் தொடர்வண்டி நிலையங்களில் தேனீர் விற்றார் என்று சொல்லப்பட்டாலும், அதற்கும் இதுவரை எந்த சான்றும் இல்லை.  அவர் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்பட்டாலும், மனைவி என்று ஒருவர் அடையாளம் காட்டப் பட்டாலும், இதுவரை அந்த பெண்மணியுடன் அவர் வாழ்ந்ததாக சான்றுகள் ஏதும் இல்லை.

மன்மோகன்சிங், பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.  பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி தம் முதல் பணியை துவக்கியிருக்கிறார்.  பின்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, இந்தியாவில் ரிசர்வ் வங்கி ஆளுநராக, நிதித்துறை செயலாளராகவும், திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் என பல்வேறு பொறுப்புகளை திறம்பட எடுத்து செயலாற்றி உள்ளார்.   தனக்கென முறையான குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.

பொருளாதார வல்லமை

மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தை பொருளாதாரத்தில் வளமான மாநிலமாக மாற்றினார் என அவரது சாதனையாக குறித்துச் சொல்லப்படுகிறது.  போராட்டங்கள் எவ்வகையில் இருந்தாலும், அதனை உடைத்தெரிந்து, தனக்கு சரி என பட்டதை செய்தி முடிப்பதில் வல்லவர் மோடி.  அது நர்மதா அணை திட்டமாக இருந்தாலும், தொழிற்சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்துவதாக இருந்தாலும்,  அவர் முன்னெடுப்பதை தடுக்க யாராலும் இயலாது.

மோடி அவர்கள் முதன்மை அமைச்சரான போது இந்திய பொருளாதாரம் உலகளாவிய அளவில் சிறந்த வளர்ச்சி விகிதத்தை கொண்டிருந்தது.  

மோடி அவர்கள் மேற்கொண்ட பணம் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பு இந்திய பொருளாதாரத்தின் மீது மிகப்பெரிய போர் ஒன்றை கொடுத்து சுமார் ரூபாய் மூன்று லட்சம் கோடி அளவிற்கு பொருளாதார இழப்பை இந்திய மக்கள் மீது சுமத்தியது.

அதன்பின் எந்த பொருளாதார மேதையின் அறிவுரையையும் பொருட்படுத்தாமல் ஒரே நாடு ஒரே வரி திட்டம் என்ற பெயரில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தியது பொருளாதாரத்தில் கீழ்நோக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி, குறு மற்றும் சிறு தொழிற்சாலைகளை பேரிடருக்கு உள்ளாக்கியது.

கோவிட் 19 தொற்று ஏற்பட்டபொழுது, கடந்த 2020, மார்ச் திங்களில், இரவோடு இரவாக எந்த மாநில முதலமைச்சரையோ அல்லது பொருளாதார வல்லுநரையோ கலந்தாலோசிக்காமல் கடுமையான முழு முடக்கத்தை நாடு முழுவதும் மோடி அவர்கள் அமல்படுத்தி, மக்களை மணியடிக்க செய்து, விளக்கு பிடிக்க வைத்து, அவர்கள் மீது மலரையும் தூவி, தன் அதிரடி செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தியதால் இந்திய பொருளாதார வளர்ச்சி எதிர்மறை வளர்ச்சியை கண்டு அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இத்தகைய துணிச்சலான அதிரடி நடவடிக்கைகளை மன்மோகன்சிங் அவர்களிடமிருந்து மக்களால் எதிர்பார்க்க இயலாது.  ஏனெனில் அவர் தான்தோன்றித்தனமாக முடிவு எடுப்பதில் துணிச்சல் அற்றவர்.

நரசிம்மராவ் 1991 -ம் ஆண்டு முதன்மை அமைச்சராக பதிவியேற்ற போது,  மன்மோகன்சிங்ந் பொருளாதார வல்லமை கண்டறியப்பட்டு, இந்தியாவின் நிதி அமைச்சராக அமர்த்தப்பட்ட்டார்.  தனக்கு கொடுக்கப்பட்ட பணியில் சிறப்புடன் பணியாற்றி இந்திய பொருளாதாரத்தை வலிமை அடையச் செய்தார்.

அமைதியாகப் பேசும் தன்மை கொண்டவர்.  சொல்பேச்சு வித்தகர் அல்ல.  ஆனால் செயல்களில் வித்தகர்.

ஊழல்கள்

மன்மோகன் சிங், முதல் 5 ஆண்டுகள் முதன்மை அமைச்சராக இருந்த பொழுது அவரது ஆட்சியின் கீழ் இந்திய பொருளாதாரம் சிறந்தோங்கி வளர்ந்ததால் அவர் மீண்டும் ஒருமுறை முதன்மை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

அவரது ஆட்சியின் இரண்டாம் 5 ஆண்டுகளில், அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இப்பொழுது நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்படாத நிலையில், மக்கள் மனதில், அவரது ஆட்சியின் கீழ் ஊழல் மலிந்து இருந்தது என்கிற மன நிலை ஏற்பட்டது.

மோடி எதை ஊழல் என்று குறிப்பிட்டுச் சொன்னாரோ, அதை இப்பொழுது முழு வீச்சாக நடைமுறைப்படுத்தி வருகிறார்.  பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள், கடன் தள்ளுபடிகள், வெளிப்படையாக கணக்கு காட்ட மறுக்கும் மோடி கேர், தனது அம்பானி நண்பர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள், ரஃபேல் ஒப்பந்தத்தில் குளறுபடி, அதானி குழுமத்திற்கு இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களை தாரை வார்த்துக் கொடுப்பது, கொள்முதலில் வெளிப்படையான தன்மை அற்ற நிலை என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

வங்கித்துறை மோசடிகள், 2013 ஆம் ஆண்டில் 28,000 கோடி என்று இருந்த நிலையில் மோடியின் ஆட்சியின் கீழ் ரூபாயை 1.11 லட்சம் கோடிக்கும் (2017 நிலை) மேல் மோசடிகள் நடந்து வருகின்றன.

தனியார் நிறுவனங்களிடமிருந்து, வராக்கடன் என மோடி அரசு 2018ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் தள்ளுபடி செய்தது மட்டும் இரண்டரை இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல். இது முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு கொடுத்த சலுகையாக பார்க்கப்படுகிறது.  அதேவேளையில், உழவர்களுக்கு கொடுத்த கடன் மற்றும் கல்வி கடன், அதிரடியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

அண்டை நாடுகளுடன் நல்லுறவு

பரந்து விரிந்த இந்திய நாட்டை உருவாக்குவது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இந்துத்துவா அடிப்படை சித்தாந்தமாக விளங்கி வருகிறது.  அதாவது, தெற்காசிய மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்படும் பரந்து விரிந்த ஒரு பகுதியை இந்திய நாட்டுடன் இணைப்பது அகண்ட பாரதம் என்கிற ஆர்எஸ்எஸ்-ன் கனவாகும்.

மோடி அவர்கள் தனது முதல் (2014) பதவியேற்பு விழாவில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்சே உள்ளிட்ட தலைவர்களை அழைத்து விருந்தோம்பல் செய்தது இதற்கு முதல் படி என ஆர்எஸ்எஸ் சார்ந்த அரசியல் கட்டுரையாளர் கருத்துரைத்தனர்.

அடுத்து வந்த ஆண்டுகளில், தம் அண்டை நாடுகளுக்கு இந்தியா தனது செயற்கைக் கோள் வளங்களை பகிர்ந்து அளித்து உதவும் என மோடி அவர்கள் நல்லுறவை வளர்க்கும் விதமாக பல நாடுகளுடனான மாநாடுகளில் பேசிவந்தார்.

இன்றைய நிலையில் இவையாவும் பழங்கதையாகி, பெரும்பாலான அண்டை நாடுகளுடன் பகைமை பாராட்டும் நிலையை மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது.

மன்மோகன் சிங் ஆட்சியில், இந்திய ராணுவத்தின் பங்களிப்பு பல நாடுகளில் உதவிக்கரம் நீட்டி வந்தது.  எடுத்துக்காட்டாக, மாலத்தீவுகள், இலங்கை என சொல்லலாம்.   பெருமளவு விளம்பரங்கள் இல்லாவிட்டாலும், அண்டை நாடுகளுடனான உறவு சிறப்பானதாகவே இருந்து வந்தது.

அரசின் திட்டங்கள்

மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை எதிர்க்கட்சியாக இருந்து எதிர்த்து வந்த மோடியின் பாஜக, இன்று மோடி தலைமையிலான ஆட்சியில், முன்னவர்கள் கொண்டு வந்த அதே திட்டங்களை, எவ்வித கருத்து கேட்புமின்றி, நடைமுறைப்படுத்தி வருகிறது.

மானியங்கள் ரத்து, சந்தை விலைக்கு ஏற்ப எரிபொருள் விற்பனை, தனியார்மயமாக்கல், ஜிஎஸ்டி, நீட் தேர்வு என எல்லாம் முன்பிருந்த அரசு எதை செய்ததால் வெளியேற்றப்பட்டதோ, அதையே மோடி அரசு தமது திட்டமாக மாற்றி நடைமுறைப்படுத்தி வருகிறது.

மோடி அரசு முன்னெடுத்த தூய்மை இந்தியா திட்டம், அனைவருக்கும் யோகா பயிற்சி போன்ற திட்டங்கள் விளம்பரமாக துவங்கப்பட்ட நிலையில் அது விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படும் நிலையில் உள்ளது.

மோடி அரசு தனியாரை ஊக்குவிப்பதாக சொல்லப்பட்டாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் புதிதாக கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லை என்பது பொருளாதார வல்லுனர்களை, இந்த அரசின் மீது குறைபட்டுக் கொள்ள வைக்கிறது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: