பெருமை பேசிக் கொள்வதற்கான நேரம் இதுவல்ல!

பெருமை பேசிக் கொள்வதற்கான நேரம் இதுவல்ல!

ஆட்சியாளர்களுக்கு அவர்களது ஆட்சியின் தோல்விகளை எடுத்துச் சொன்னால் கோபம் வருகிறது. இதற்கு மோடி ஒன்றும் விதிவிலக்கல்ல.

வங்காள நாட்டைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பின்தங்கிய நிலையில் உள்ளது என பொருளாதார வல்லுனர்கள் ஒப்பிட்டு எடுத்துச் சொல்லும் பொழுது, கோபம் ஆட்சியாளர்களின் தலைக்கு ஏறி, எடுத்துச் சொல்பவரை பழிவாங்கும் நோக்குடன் செயல்படும் நிலை ஏற்படுகிறது.

மோடி, தனது வானொலி மற்றும் தொலைக்காட்சி பேச்சுகளில், கோவிட்௧9 தீநுண்மி தாக்குதலில் இருந்து மீண்டு இந்தியா திறம்பட செயல்படுகிறது, பொருளாதார வளர்ச்சிப் பாதையில் இந்தியா விரைந்து முன்னேறி செல்கிறது என வலியுறுத்தி சொல்லி வந்தாலும் அவரின் கூற்றுக்கள் பல ஜூம்லா தகவல்களை உள்ளடக்கியதாகவே உள்ளது.

பொருளாதார வல்லுநர்களை பொறுத்தவரை, தவறுகள் செய்யாத ஆட்சியாளர்கள் இந்த உலக வரலாற்றில் இல்லவே இல்லை.  அப்படியிருக்க, செய்த தவறை ஏற்றுக்கொண்டு, அதில் இருந்து திருந்தி சரியான பாதையை மேற்கொள்வதில் குற்றம் ஒன்றும் இல்லை என நம் நாட்டு ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கோவிட் - 19 தீநுண்மி தாக்குதல்

கோவிட் - 19 தீநுண்மி தாக்குதலால் இந்தியாவில் இறந்தோர் விழுக்காடு ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 83 பேர் (1 மில்லியன் - 10 லட்சம்).  

அதேவேளையில், சீனா 3, வங்காளம் 34, வியட்நாம் 0.4, நேபால் 25, பாகிஸ்தான் 30, தாய்லாந்து 0.6, மலேசியா 6, இந்தோனேசியா 46 என ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு இறப்பு விகிதத்தை கொண்டுள்ளன.  

இதன்படி ஒப்பிட்டால், இந்தியாவின் இறப்பு விகிதம், ஆசிய கண்டத்தில் இருப்பதிலேயே மிக மோசமான இந்தோனேசியாவின் இறப்பு விகிதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்காக திகழ்கிறது.

ஆனால் மோடி, இந்தியா திறம்பட கோவிட் - 19 தாக்குதலை கையாண்டதாக பெருமைப்பட்டுக் கொள்கிறார். மேலும் இறப்பு விகிதத்தில் உலகத்திலேயே மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை இந்தியா கொண்டுள்ளது எனவும் தன் பெருமை பாராட்டிக் கொள்கிறார்.

நெருக்கடியில் இந்திய பொருளாதாரம்

2020 - 21 ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் இந்தியா - 10 விழுக்காடு என்கிற வகையில் பின்நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  அதேவேளையில் இந்தியாவின் பொருளாதார போட்டியாளர்களான வியட்நாம், வங்காளம் மற்றும் சீனா சிறப்புடன் முன் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

அனைத்துலக நாணய நிதியம், வெளியிட்ட புள்ளி தரவு தகவலில், வங்காளம் இந்தியாவை விட வேகமாக வளர்வதாக குறிப்பிட்டது எதனால் என்றால், இந்தியா - 10 விழுக்காடு வளர்ச்சியை கொண்டிருக்க, வங்காளம் திறம்பட பொருளாதார வளர்ச்சியை மேற்கொண்டதால் தான்.

இந்தியாவின் முன்னாள் நிதி ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் கூற்றுப்படி, வங்காளம், மொத்த உள்நாட்டு உற்பத்தி என்கிற அடிப்படையில் வளர்ச்சி என்று அனைத்துலக நாணய நிதியம் சொன்னாலும், மக்களின் வாங்கும் திறனை ஒப்பிட்டால், இந்தியா சிறப்புடனே இருக்கிறது, என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், இந்தியாவின் பின்தங்கிய பொருளாதார நிலைக்கு, மக்களிடையே ஒற்றுமை இல்லா நிலையை இந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளதும் ஒரு அடிப்படை என்கிறார்.

உள்நாட்டு மொத்த உற்பத்தி அல்லது மக்களின் வாங்கும் திறன் என எந்த புள்ளி தரவுகளை எடுத்துக் கொண்டாலும், மக்களிடையே நிலவும் அமைதி சூழல் மட்டுமே பொருளாதார வளர்ச்சியை முன் எடுத்துச் சொல்லும் என ஆட்சியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

பெண்களின் பங்களிப்பு

இங்கே சாதி அடிப்படையிலான பிளவு மற்றும் பெண்கள் மீதான தொடரும் தாக்குதல்களால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு 17 விழுக்காடு என்று இருக்கிறது.  அதேவேளையில் வங்காளம், சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் 60 விழுக்காடு வரை பெண் ஊழியர்களின் பங்களிப்பு உள்ளது.

இந்தி பேசும் பெரும்பான்மை மக்கள் கொண்ட வட இந்திய பகுதிகளில், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில், பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு, வெறும் 7 விழுக்காட்டிற்கும் கீழே உள்ளது.  இதற்கு அடிப்படை, அங்கே நிலவும், சாதிய வேறுபாடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுமேயாகும்.

இந்த ஆட்சியாளர்கள், தங்கள் அரசியல் தேவைக்காக சாதிய, மத மற்றும் பாலியல் வேறுபாட்டு அடக்குமுறைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவார்களேயானால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இது நீண்டதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இந்த ஆட்சியாளர்கள் கோவிட் -19 தீநுண்மி தாக்குதலை இந்திய பொருளாதார பின்னடைவிற்கு, நீண்ட நாட்களுக்கு குற்றம் சாட்டிக் கொண்டு இருக்க இயலாது என்பதையும் உணர வேண்டும்!

Share this Post:

தொடர்பான பதிவுகள்: