செய்திகள்
நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு கண்டித்த கணவர் மார்பில் கத்தியால் குத்திய சேலம் மாவட்டம், இடைப்பாடி, மசையன் தெரு பகுதியை சேர்ந்த மனைவி ஒன்றிய கல்விச் சுற்றுலா பட்டியலில் தமிழ்நாட்டில் மாமல்லபுரம், ஏற்காடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, குற்றாலம், தஞ்சாவூா் ஆகிய 6 இடங்கள் இடம்பெற்றுள்ளன மோடி ஒன்றிய அரசின் பெகாசஸ் மோசடி தொடர்பாக வல்லுநர்கள் அடங்கிய வினவல் குழு அமைப்பது குறித்து விரைவில் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கும் பிஎம் கேர்ஸ் அரசின் உடையது அல்ல; ஆர்டிஐ வரம்புக்குள் வராது: டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் தகவல் மகந்த நரேந்திர கிரி மர்ம மரணம்: சிபிஐ விசாரணைக்கு உ.பி. அரசு உத்தரவு ரூ.26 கோடி மோசடி தொடர்பாக கே.எப்.ஜே ஜுவல்லரியின் இயக்குனர்கள் 2 பேர் கைது குழந்தைகளின் கற்றல் பாதிப்பை சரிசெய்ய பள்ளிகளை விரைந்து திறக்க வேண்டும் என்று உலக மக்கள் நல்வாழ்வு நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்


அக்குள் மற்றும் கழுத்து பகுதிகளில் தோல் முடிச்சுக்கள் (Skin Tags), நீக்குவது எப்படி?

அக்குள் மற்றும் கழுத்து பகுதிகளில் தோல் முடிச்சுக்கள் (Skin Tags), நீக்குவது எப்படி?

கழுத்து, தோள் மற்றும் மடிப்பு ஏற்படும் பகுதிகளில் குட்டி குட்டியாக மறு போன்ற தோல் முடிச்சுகள் தோன்றுவது எதனால்?  அவை பின்நாளில் உயிருக்கு அச்சம் ஏற்படுத்துபவையா? அவற்றை போக்குவது எப்படி?

பெரும்பாலான ஆண் மற்றும் பெண் என பாலின வேறுபாடு ஏதுமின்றி, எல்லோருக்கும் தோன்றுவது இந்த மறு போன்ற தோல் முடிச்சுகள்.  தோலின் நிறத்திலேயே தோன்றும் இவை வலி அல்லது பிற இடர்பாடுகளை ஏற்படுத்துவதில்லை.

இத்தகைய தோல் முடிச்சுகள் பொதுவாக தோன்றுவது என்றாலும், வலி அல்லது நீர்க்கசிவு அல்லது அரிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றினால், அல்லது அதன் அளவு நாளுக்குநாள் பெரிதானால், உடனடியாக தோல் மருத்துவரை நாட வேண்டும்.  ஏனெனில் இவை பிற உடல் கோளாறுகளுக்கான வெளிப்பாடாக இருக்கலாம்.

புற்றுநோய் அறிகுறி:


மக்கள் பொதுவாக அச்சப்படுவது, இந்த மறு போன்று தோற்றமளிக்கும் தோல் முடிச்சுகள், பின்னாளில் புற்றுநோய் கட்டிகளாக மாறி விடுமோ என்பதை குறித்து தான்.

உண்மையில், இந்த தோல் முடிச்சுகள் எவ்விதத்திலும் தீங்கு விளைவிப்பவை அல்ல.  அவை புற்றுநோய் ஏற்படுத்துவதுமல்ல அல்லது புற்று நோய்க்கான அறிகுறியும் அல்ல.

ஒன்றன் மீது ஒன்றாக சதையுடன் தோல் மடிந்து கொள்வதால் அவை ஏற்படுகிறது. பல நேரங்களில் ஒரே இடத்தில் பல தோல் முடிச்சுகள் குழுவாக அல்லது ஒரே ஒரு முடிச்சு என தோன்றும். ஒவ்வொரு முடிச்சும் ஒரு கடுகின் அளவு முதல் அரிசி அளவிற்கு இருக்கலாம். அரிதிலும் அரிதாக திராட்சைப் பழம் அளவிற்கு பெரிதாக இருக்கலாம்.  மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில், இந்த தோல் முடிச்சுகள் தமக்கு ஏற்பட்டிருப்பதை கவனித்து இருப்பர்.

தோல் முடிச்சு அறிகுறிகள் :


தோல் முடிச்சுகள் மறு போன்ற தோற்றம் தவிர வேறு எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது.  எரிச்சலோ, அரிப்போ, அல்லது வேறு எவ்வகை அறிகுறியும் வெளிப்படாது.

சிலருக்கு எரிச்சல் அல்லது வலி ஏற்படுவது எதனால் என்றால், அவர்களின் ஆடைகளில் உள்ள கூரான பகுதிகள் அல்லது வெளிப்படும் நூல் பகுதிகள் இந்த முடிச்சுகளை போய் உராய்வது அல்லது தேய்த்து இழுப்பதனால்.

இத்தகைய முடிச்சுகள் இடர்பாடுகளை ஏற்படுத்துகிறது என்றால் மருத்துவர் அறிவுரையின் படி அவற்றை எளிதாக நீக்கலாம்.

மருத்துவர்களின் பார்வையில் தோல் முடிச்சுக்கள்:


பொதுவாக தோல் முடிச்சுக்களை நீக்க மருத்துவர் அறிவுரை வழங்க மாட்டார்.  ஏனெனில் அவை தீங்கு அற்றதும், நீக்குவதற்கான எந்த மருத்துவ தேவையும் இல்லாததாகும்.

எரிச்சலூட்டுவதாக அல்லது தோற்றத்தைக் கெடுப்பதாக இருந்தால், அவற்றை மருத்துவர் உதவியுடன் நீக்கிவிடலாம்.

தோல் முடிச்சுகள் குழந்தை பருவத்தினருக்கு வந்தால் உடனடியாக மருத்துவ அறிவுரையை நாடுவது வேண்டும்.

தோல் முடிச்சுகள் எதனால் ஏற்படுகிறது?


தோல் முடிச்சுகள் நுண்ணுயிர்களால் அல்லது ஒவ்வாமையால் அல்லது பூச்சி கடியினால் ஏற்படுவது அல்ல.

இதுவரை இத்தகைய முடிச்சுகள் எதனால் ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல் சான்று ஏதும் இல்லை. மரபுவழி மற்றும் வாழும் பகுதி சூழ்நிலை ஆகியவற்றால் இவை ஏற்படுவதாக நம்பப்படுகிறது.  இறுக்கமான உடை அணிவதால்,  தோலில் ஏற்படும் உராய்தல் இத்தகைய முடிச்சுக்களை ஏற்பட தூண்டுகிறது என அறியப்படுகிறது.  இயக்குநீர் (ஆர்மோன்) சுரக்கும் அளவில் ஏற்படும் மாற்றங்களும் இந்த முடிச்சுகள் ஏற்பட தூண்டுவதாக தெரிகிறது.

ஒருசிலருக்கு வாழ்நாளில் எப்போவாவது ஒரு சில முடிச்சுகளும், சிலருக்கு நூற்றுக்கணக்கான முடிச்சுகளும் தோன்றுகின்றன.  ஏன் இத்தகைய வேறுபாடு என இதுவரை அறிவியல் சான்றுகள் இல்லை.

தோல் முடிச்சுகள் தோன்ற அடிப்படை :


உடல் பெருத்தல், நீரழிவு மற்றும் கருவுறுதல், ஆகியவை தோல் முடிச்சுகள் ஏற்பட தூண்டுவதாக அறியப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்களின் பார்வையில், இன்சுலின் எதிர்ப்பு கொண்டவர்களும், நீரழிவு பாதிப்பு கொண்டவர்களும் தோல் முடிச்சுகளால் பாதிப்படைகின்றனர்.  பல்வேறு நிலை ஆய்வில், உடல் பருமன் கொண்டவர்கள் தோல் முடிச்சுக்களை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.  உடல் பருமன் கொண்டவர்களை பொறுத்தமட்டில் அவர்களது தோல் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் முடிச்சுகள் ஏற்படுகின்றன.  கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் இயக்குநீர் (ஆர்மோன்) அளவு வேறுபாடு தோல் முடிச்சுகள் ஏற்பட தூண்டுகிறது.

பகுதிக் குடலிய அழற்சி [குரோன் நோய் (Crohn s disease) ] கொண்டவர்களுக்கு தோல் முடிச்சுக்கள் தோன்றுகின்றன.

தோல் முடிச்சை நீக்கினால் பரவுமா?


பொதுவாக முடியை வழித்து எடுத்தால் மீண்டும் மீண்டும் வேகமாக முடி வளரும் என்ற கருத்துக்கு ஒத்த கருத்தினால் ஏற்படும் ஐயம் இது. ஒரு தோல் முடிச்சை நீக்கினால் அது மேற்கொண்டு பல தோல் முடிச்சுக்களை ஏற்படுத்துமா என்றால், இல்லை என்பதுதான் ஒரே பதில்.

மருக்கள் எப்படி பரவாத தன்மையை கொண்டுள்ளன, அதேபோன்று இந்த தோல் முடிச்சுகளும் பரவாதவை.  ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு இந்த தோல் முடிச்சுகள் தொற்றுவதும் இல்லை.

தோல் முடிச்சுக்கு அறிவியல் பெயர்:


தோல் முடிச்சு என்பதற்கு, ஆக்ரோ-கோர்-டோன்ஸ் Acrochordons என்று அறிவியல் பெயர்.  மருத்துவ தொழில்நுட்பத்தில் இந்த தோல் முடிச்சுக்களை புற்றுநோய் ஏற்படுத்தாத கட்டிகள் (non-cancerous tumor) என கருதுகின்றனர்.

எதைக்கொண்டு தோல் முடிச்சுக்களை நீக்கலாம்?


கத்தரிக்கோல், உறைபனி, மெல்லிய இழை கொண்டு இறுகக் கட்டுதல் அல்லது நெருப்பில் காய்ந்த உலோகம் கொண்டு கருக்குதல் என எதை வைத்து வேண்டுமானாலும் இவற்றை நீக்கலாம். இவ்வாறு நீக்கும் பொழுது சில இடங்களில் மட்டும் குருதிக் கசிவு ஏற்படலாம்.

பொதுவாக கருக்குதல் அல்லது உறைய வைத்தல் ஆகியவை தோலின் நிறத்தை மாற்றும்.  ஆகவே அத்தகைய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

கண் இமைகளுக்கு மேல் அல்லது கண் அருகில் தோன்றும் தோல் முடிச்சுக்களை கண் மருத்துவர் துணைகொண்டு நீக்குவது பாதுகாப்பானது.

பல வேளைகளில் தோல் முடிச்சுகள் தாமாகவே உதிர்ந்து விழுந்துவிடும்.  

தோல் முடிச்சுகளை நீக்கிய பின்பும் அத்தகைய முடிச்சுகள் புதிதாக தோன்றலாம்.  அப்படித் தோன்றுவது, நீக்கியதால் ஏற்பட்டதன் பின் விளைவு அல்ல.

இறுக்கமான ஆடையும் தோல் முடிச்சுகளும்:


நாம் ஏற்கனவே முன்பு கூறியது போல, இறுக்கமான ஆடை அணிவது தோல் முடிச்சுகள் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது.  இறுக்கமான ஆடைகள் தோலின் மீது உராய்ந்து தோல் முடிச்சுகள் ஏற்பட வழிவகை செய்கிறது.  கழுத்து மற்றும் கமுக்கூடு பகுதிகளில் ஏற்படுவதற்கு அடிப்படையாக அமைவது, அங்கே நாம் அணிகின்ற துணி நம் தோலின் மீது உராய்வை ஏற்படுத்துவதால்.

பெண்களுக்கு மார்பகத்தின் அடிப்பகுதியில் தோல் முடிச்சுகள் அவர்கள் அணியும் உள்ளாடை உராய்வினால் ஏற்படுகிறது.

வயது மூப்பு :


நடு வயதைத் தாண்டியவர்களுக்கு தோல் சுருக்கங்கள் தோன்றும்.  அத்தகைய தோல் சுருக்கங்கள் தோல் முடிச்சுகள் ஏற்பட ஏதுவாகிறது.  பொதுவாக சிறு வயதினருக்கு தோல் முடிச்சு பாதிப்பு ஏற்படுவது இல்லை.  பச்சிளம் குழந்தைகளுக்கு, தோல் மடங்கும் இடங்களில் பாதிப்பு ஏற்படுத்துகிறது.

தோல் முடிச்சு நிறம் :


தோல் முடிச்சுகள் பொதுவாக ஒருவரின் தோல் நிறத்திற்கு ஒப்ப இருக்கும்.  சிலருக்கு மட்டும் சற்று கருமையாக அல்லது சற்று வெளுப்பாக தோன்றலாம்.

தோல் முடிச்சுகளுக்கு குருதி ஓட்டம் தடைபட்டால் அவை ஊதா நிறமாக தோன்றி பின் கருமையாகி உதிர்ந்துவிடும்.

மருக்களும் தோல் முடிச்சும் ஒன்றா?


மருவும் தோல் முடிச்சுகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறு.  மருக்களை அகற்ற மருத்துவர்கள் வேதிப்பொருள் கலந்த பொருட்களை பயன்படுத்துவர்.  தோல் முடிச்சுக்களின் மீது அத்தகைய வேதிப் பொருட்களை பயன்படுத்துவது, நன்றாக இருக்கும் தோலின் மீது வேதிப்பொருள் பயன்படுத்துவதற்கு ஈடான தாகும்.  வேதிப் பொருட்களைப் பயன்படுத்துவது பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

தோல் முடிச்சுகளை எளிதாக நீக்கும் வழிமுறை :


தாடியை மழிக்கும் போது, தோல் முடிச்சுகளும் அகற்றப்பட்டால் அதனால் எந்த பாதிப்பும் இல்லை.  அப்படி மழித்து கூட தோல் முடிச்சுகளை அகற்றலாம்.

குருதி ஓட்டத்தை தடை செய்யும் வகையில், மெல்லிய இழைகள் கொண்டு முடிச்சுக்களை இறுகக் கட்டுவதால், அவற்றை எளிதாக நீக்கலாம்.

நகங்களுக்கு பயன்படுத்தும் நக மெருகேற்றும் பூச்சிகளை (Nail Polish) கொண்டும் அவற்றை நீக்கலாம்.

மேற்சொன்ன யாவும் பயன்தரும் என்றாலும், முழுமையான பயன் தராது.  மருத்துவரின் அறிவுரைப்படி தோல் முடிச்சுகளை அகற்றுவது தான் பாதுகாப்பானதும், சிறந்த வழியாகவும் இருக்கும்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: