செய்திகள்
அதிமுக பொதுக்குழு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் அடுத்தவாரம் விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு 2 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தணி முருகன் கோயிலில் பரணி கிருத்திகை கோலாகலம் நாளைக்குள் மாணவியின் உடலை பெற்று கொள்ள வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு கேரளாவில் ஆப்ரிக்க வகை பன்றிக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் மாணவியின் உடற்கூறாய்வு முடிவுகளை ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்ய உத்தரவு கோவை ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தற்கொலை


மோசடிகள் நடக்கும் இந்த நேரத்தில், இந்த எச்சரிக்கை பதிவு தேவையாகிறது!

மோசடிகள் நடக்கும் இந்த நேரத்தில், இந்த எச்சரிக்கை பதிவு தேவையாகிறது!

படத்தில் குறிப்பிட்டுள்ள அந்த  பதிவில், citibank.com என்ற இணைய முகவரியை இருவேறு "a" பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பயன்படுத்த இயலுமா?  இயலும் என்றால் எவ்வாறு?

இணைய தள தொழில்நுட்பம்:


முதலில் நாம் இணைய தள தொழில்நுட்ப முன்னேற்றத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

1996 வாக்கில் இணையதளங்கள் துவங்கப்பட்டன.  அப்போது இணைய முகவரிகள் எல்லாம் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு மட்டுமே இயங்கும் வகையில் இருந்தது.  எடுத்துக்காட்டாக, "hosuronline.com".

அதிலும், .com, .org, .net என வட அமெரிக்க பழக்க வழக்கங்களை ஒட்டி இணைய தளப் பெயர் விரிவாக்கம் (extention) கொடுக்கப்பட்டது.

பின்நாளில், பல அரசுகளும், பல மொழி பேசுபவர்களும், பல பெரிய நிறுவனங்களும் தத்தம் மொழிகளில் - பெயர்களில் இணைய முகவரி விரிவாக்கம் வேண்டும் என தீர்மானித்த போது, .sbi என ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு, .in என இந்தியாவிற்கு, .भारत என இந்தியாவின் இந்தி மொழியில், இப்படி பல்வேறு இணைய முகவரி விரிவாக்கங்கள் கொடுக்கப்பட்டன.

விரிவாக்கங்கள் அவரவர் மொழியில் இருக்க, இணைய முகவரியும் அவரவர் மொழிகளில் வேண்டும் என்ற தேவை ஏற்பட்டதன் விளைவாக,  "ஓசூர்ஆன்லைன்.com" "தமிழ்-ஜாதகம்.com" போன்ற இணைய முகவரிகள், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வரத் துவங்கின.

மேலே குறிப்பிட்ட தமிழ் இணைய முகவரிகள் இரண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன 😂

citibank.com என்ற இணைய முகவரியை, வேண்டுமானால் சிட்டிbank.com அல்லது citடிbank.com என்றும் பதிவு செய்யலாம்!

ஆங்கில எழுத்துக்களுக்கு ஒப்பான, அவற்றைப் போன்றே தோற்றமளிக்கும் எழுத்துக்களை பல்வேறு மொழிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.  இந்த வாய்ப்பைத் தான் பல்வேறு மொள்ளமாரி முடிச்சவிக்கிகள் தங்கள் மோசடி செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

Citibank.com என்பதில் உள்ள ஏதாவது ஒரு ஆங்கில எழுத்தை மட்டும், அவற்றைப் போன்றே தோற்றமளிக்கும் எழுத்துக்களைப் பயன்படுத்தும் ரஷ்ய மொழி உள்ளிட்ட சுமார் 100 மொழிகள், ஏதாவது ஒரு மொழியின் எழுத்தை பயன்படுத்தி மோசடியாக இணைய முகவரியை பதியலாம்.  

நீங்கள் இணைப்பில் (link) பார்ப்பதற்கும், உலாவியின் முகவரி பட்டியில் (browser address bar) பார்ப்பதற்கும் citibank.com மற்றும் citibànk.com ஒரே மாதிரியாக தோன்றினாலும், மொழியின் அடிப்படையில் அவை வெவ்வேறு இணைய முகவரிகள்.

குழப்பம் ஏற்படுத்தாதா?


அவரவர் மொழிகளில் இணையதள பெயர்கள் பதிவு செய்கிறார்கள் என்றால், குழப்பம் ஏற்படுத்தாதா என்கிற கேள்வி எழுகிறது!

இந்த கேள்விக்கான விடை, பார்ப்பதற்கு - படிப்பதற்கு அவரவர் மொழிகளில் இணையதள பெயர்கள் உலாவி முகவரிப் பட்டையில் தோன்றினாலும், உண்மையில் பின்னாலிருந்து இயங்குவது, ஆங்கில எழுத்துக்களை கொண்ட சொற்களே!

மொழியிலுள்ள சொல்லையும், ஆங்கில எழுத்து கலவை கொண்ட ஒரு வார்த்தையையும், விவரணையாக்கம் (mapping), அதாவது ஒன்றின் தகவலை மற்றொன்று குறிப்பதாக இணையாக்கம் செய்வதன் மூலம், ஆங்கிலம் தவிர்த்த பிற மொழி எழுத்துக்களை கொண்ட இணைய பெயர்கள் பதிவு முறை மேற்கொள்ளப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, தமிழ்-ஜாதகம்.com என்ற இணைய முகவரி பெயர் உலாவி முகவரிப் பட்டையில் தமிழ் மொழியில் தோன்றினாலும், xn----fweu4ac1de7b1fg9mg.com என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே பெயர் பதியப்படுகிறது.   இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று விவரணையாக்கம் செய்வதால், ஒன்று மற்றொன்றாக காட்சியளிக்கிறது.

எமோஜி:


இப்பொழுது லத்தீன் எழுத்துக்கள் அல்லாத பிற எழுத்துக்கள் கொண்ட இணைய தளப் பெயர்களைத் தாண்டி, தொழில்நுட்பமானது, எமோஜி என்று அழைக்கப்படுகின்ற குட்டி பொம்மை உருவங்கள் கொண்ட இணையதள பெயர்களும் வரத் துவங்கியுள்ளன.  எடுத்துக்காட்டாக, 💗திருமணம் என்றுகூட இணைய தள முகவரி பெயர்களை பதிவு செய்யலாம்.

இப்படிப் பல்வேறு வகைகளில் இணையதள பெயர்களை பதிவு செய்ய அனுமதிப்பதன் மூலம், இணைய தளப் பெயர் தேவைப்படுபவர்கள், அவரவர்களுக்கு விருப்பமான பெயர்களை கொண்டு தங்களின் இணைய இலக்கமுறை இருப்பிடத்தை (digital presence) மேம்படுத்திக் கொள்கின்றனர்.

தொழில் முன்னேற்றத்திற்கு இது வாய்ப்பாக இருந்தாலும், குற்ற நிகழ்வுகளுக்கும் இது அடிப்படையாக அமைந்து விடுகிறது!

இலக்கமுறை (digital) இந்தியா, அனைவருக்கும் இணைய இணைப்பு (internet) போன்ற அரசுகளின் முன்னெடுப்பால், இன்றைக்கு இணைய பயன்பாடு பெருகியுள்ளது.  அதேவேளையில் இந்தியா போன்ற நாடுகளில், பாதுகாப்பு குறித்த தெளிவுகள் மக்களிடையே இல்லை.

மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தியாக அல்லது சமூக வலைதளங்கள் மூலமாக பெறப்படும் இணைப்புகளை (link) தயவுசெய்து சொடுக்கி (click) சென்று எவ்வகை தகவல்களையும் உள்ளிடாதீர்கள்.

பல வேளைகளில், வேறு யாரோ உங்கள் சமூகவலைதள / மின்னஞ்சல் / வங்கி கணக்கை கைப்பற்ற முயல்வதாக கூட செய்திகள் வரலாம்.  

அப்படியான செய்திகள் ஏதாவது வந்தால், இணைப்புகளைச் சொடுக்கி தொடர்வதற்கு பதிலாக, உலாவியின் முகவரிப் பட்டையில் (browser address bar) நீங்கள் உள் நுழைய முயற்சிக்கும் அல்லது பார்க்க விரும்பும் இணைய முகவரியை நீங்களே தட்டச்சு செய்து உள்ளிட்டு செல்லுங்கள்.

நீங்களாக தட்டச்சு (type) செய்து இணைய முகவரியை (website) உள்ளிடும் போது, நீங்கள் வேறு ஒரு மொழியின் எழுத்தை உள்ளிடுவதற்கான வாய்ப்பு (மெனக்கட்டு செய்தால் ஒழிய) இல்லை.

கடைசியாக...

யார் வந்து பாடம் எடுத்தாலும்... அதைத் தாண்டி சிந்தித்து, மொள்ளமாரிகளும் முடிச்சவிக்கிகளும் உங்கள் பணத்தை திருட முயன்று கொண்டே தான் இருப்பார்கள்.  உங்களின் எச்சரிக்கையான செயல்கள் மட்டுமே உங்களை பாதுகாக்கும்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: