காதை தூய்மைப்படுத்த புதிய தொழில்நுட்ப கருவிகள் !

காதை தூய்மைப்படுத்த புதிய தொழில்நுட்ப கருவிகள் !

பழைய நாட்களில், காதினுள் அழுக்கு சேர்ந்து விட்டால், மரத்தடியின் கீழ் அமர்ந்து இருக்கும் நபரை நாடிச் சென்று, காதை தூய்மைப்படுத்திக் கொள்வது வழக்கம்.

அப்படி இல்லை என்றால், வீட்டிலிருக்கும் யாராவது ஒருவரை வைத்து, பெண்கள் பூ குத்திக் கொள்வதற்கு பயன்படுத்தும் குத்தூசி (Hair Pin) கொண்டு, காதினுள் படிந்திருக்கும் அழுக்கை நீக்கி கொள்வர்.

குறவர்கள், காது அழுக்கு நீக்கி என்றே சின்னஞ்சிறு ஊசி போன்ற பொருட்களை விற்பார்கள்.  அதை வாங்கியும் பலபேர் பயன்படுத்திக் கொள்வர்.

இத்தகைய பொருட்கள் கூர்மை தன்மை கொண்டதாக இருந்ததால், காதின் செவிப்பறையை பாதிப்பு ஏற்படுத்திடும் வாய்ப்பு இருந்தது.

இந்தச் சூழலில் வந்ததுதான், இரு முனைகளில் பஞ்சை கொண்ட பட்ஸ் (Ear Buds).  இவற்றிலும் பல குறைகள் இருந்தன.  எடுத்துக்காட்டாக, அழுகை மேலும் உள்ளே தள்ளிவிட்டு விடுவதற்கு வாய்ப்பு இருந்தது.  இவற்றை மேலோட்டமாக மட்டுமே பயன்படுத்த இயலும்.

எவ்வகை பாதிப்புமின்றி, காதினுள் சேர்ந்துள்ள அழுக்கை நீக்க வேண்டுமாயின் மருத்துவரின் உதவியை தான் நாட வேண்டிய சூழல் இருந்து வந்தது.

இவ்வளவு சிக்கல் நிறைந்த, ஆனால் கட்டாயத் தேவை கொண்ட ஒரு மனித இடர்பாடுக்கு என்ன தான் தீர்வு?

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, காதினுள் அழுக்கை எடுப்பதற்கு கூர்மையற்ற ஒரு பொருளாக கருவி இருக்க வேண்டும்.  அதேவேளையில் அழுகை மேலும் உள்ளே தள்ளி விட்டு விடக்கூடாது.  உள்ளே அத்தகைய கருவியை விடும் பொழுது, அங்கே என்ன நடக்கிறது என்பதை நாம் நிகழ்நிலையில் கண்டால் பாதுகாப்பாக இருக்கும் அல்லவா!!!

இவற்றிற்கெல்லாம், ஒரு தீர்வாக வந்துள்ளது தான், புதிய தொழில்நுட்பம் கொண்ட, புகைப்படக் கருவி (Camera) பொருத்தப்பட்ட, காது அழுக்கு நீக்கி.

முனையில் காணொளி புகைப்பட கருவி. தெளிவான படம் தெரிய வேண்டும் என்பதற்காக, 1.3MP க்கு மேலான தெளிவுத்திறன் கொண்ட புகைப்படக்கருவி. கூர்மையாக இருக்க வேண்டும், ஆனால் காதினுள் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, நெகிழும் தன்மை கொண்ட சிலிக்கா அடிப்படையிலான, மென்மையான காது ஸ்பூன்.  காதினுள் வெளிச்சம் தேவை, ஆனால் வெப்பம் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, குளிர்ச்சியான எல்இடி விளக்கு. காதினுள் இருக்கும் ஈரம், கருவியை பாதிப்படைய வைத்து விடக்கூடாது என்பதற்காக IP67 தர தண்ணீர் மற்றும் தூசு புகா தன்மை. புகைப்படக்கருவி படம் பிடிக்கும் காணொளியை காண்பதற்கு, கைபேசியின் திரையை பயன்படுத்தும் வாய்ப்பு.

பெரும்பாலும் இவற்றுக்கான, தனி செயலிகள் எதுவும் பதிவிறக்கம் செய்து நிறுவ தேவையில்லை. அதனால் தனிப்பயன் திருட்டு என்பதற்கான வாய்ப்புகள் இல்லை.  இவை, கொடுக்கப்படும் யூ எஸ் பி (USB) இணைப்பு மூலம், கைபேசி உடன் எளிதாக இணைந்து கொள்கிறது.

இப்படியான கருவிகள் வெரிலக்ஸ் (Verilux), டேஸ்லாங் (Teslong), அக்குமென் கிமேட்டில் (Acumen Schimatle), சோர்பஸ் (ZORBES) என பல நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, சந்தைப்படுத்தப்படுகின்றன.

இவை அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிகழ்நிலை விற்பனை தளங்களில் எளிதாக கிடைக்கின்றன.  விலை ரூபாய் 1000 முதல் இருக்கிறது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: