மின் அதிர்ச்சியிலிருந்து (Electric Shock) குழந்தைகளைக் காப்பது எப்படி?

மின் அதிர்ச்சியிலிருந்து (Electric Shock) குழந்தைகளைக் காப்பது எப்படி?

சின்னஞ் சிறிய தவறு நடந்தால் கூட, வாழ்க்கைக்கு அன்றாட கட்டாயத் தேவையாக அமைந்துள்ள மின்சாரம் என்பது உயிரை பறித்து விடும் அளவிற்கு கொடூரமானதாக மாறிவிடும்.

அவ்வப்பொழுது "மின் கசிவினால் தீப்பிடித்தது" என செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும்,  செய்திகள் வரும். இந்த செய்திகளை படிக்கும் பலர், இது யாருக்கோ, எங்கேயோ நடந்தது, என மட்டும் புரிந்து கொள்கிறார்கள், மின் இணைப்புகளில் தவறு ஏற்பட்டால், இத்தகைய பாதிப்பு தமக்கும் ஏற்படும் என்பதை உணருவதில்லை.

மின் அதிர்ச்சி (Electric Shock):


மின் வடங்களை கண்களால் பார்த்தால், அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இயலாது.  அதற்கென உள்ள கருவிகளைக் கொண்டு ஆராய்ந்தால் மட்டுமே, ஒரு வடத்தில், மின்சாரம் பாய்கிறது என்பதை தெரிந்துகொள்ள இயலும்.  தவறுதலாக நம் உடல் அதன் மீது பட்டுவிட்டால், நம்மீது மின்சாரம் பாய்ந்து உயிருக்கு  அச்சத்தை ஏற்படுத்தும்.

வளர்ந்து விட்ட நாடுகளில், வீட்டிற்கான மின் இணைப்புகள், 110V என்ற மின் அழுத்த அளவில் கொடுக்கப்படுகின்றன.  இத்தகைய மனிதர்கள் மீது பாய்ந்தால் பெரிய அளவிலான, பாதிப்புகளை ஏற்படுத்தாது.  இந்தியாவைப் பொருத்தவரை, 220V - 240V என்ற அளவில் ஒருமுனை மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது.  மும்முனை மின்சார இணைப்பு இருப்பின், இரண்டு முறைகளுக்கான மின்னழுத்த வேறுபாடு 415V.  ஒரு முனை மின் அழுத்த மின் அதிர்ச்சி, கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும்.  பெரும்பாலும் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதில்லை.  அதேவேளையில், 415V மின் அழுத்த மின் அதிர்ச்சி, உயிரை பறிக்கும் அளவிற்கு அச்சுறுத்தலானது.

குழந்தைகளும் விளையாட்டும்:


சிறு வயது குழந்தைகள், பொதுவாக கற்கும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.  ஒன்றை தொடாதே, செய்யாதே என சொன்னால், அதை செய்து பார்த்து - தொட்டு பார்த்து, தாமே அறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள்.

மின் இணைப்புகளில், குறிப்பாக, செரிகி முனையங்களை (Plug Point), தொட வேண்டாம் என பெரியவர்கள் கட்டளையிட்டால், அதனுள் எதையாவது விட்டு, பல நேரங்களில் தங்களது சின்னஞ்சிறு விரல்களை உள்ளே நுழைத்து, மின் அதிர்ச்சி என்றால் என்னவென்று அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

தடுக்கும் முறைகள்:


செரிகி முனையங்களை, நெகிழி தடுப்புகள் கொண்டு தடுக்கப்பட்ட வடிவமைப்புகள் இப்பொழுது தரமான நிறுவனங்கள் மூலம் சந்தைப் படுத்தப்படுகின்றன.  குறிப்பாக, லெக்ரன் (Legrand) - ஆங்கர் (Anchor) போன்ற நிறுவனங்கள் ISI தர முத்திரையுடன் இந்திய சந்தைகளில் கிடைக்கின்றன.

உயர் தரமுள்ள ELCB அல்லது RCD அல்லது RCCB என்றழைக்கப்படுகின்றன மின்கசிவு / மின் அதிர்ச்சி தடுப்பு கருவிகளை கண்டிப்பாக ஒவ்வொரு வீடுகளிலும் பொருத்தவேண்டும்.  இவை மின் கசிவு அல்லது மின் அதிர்ச்சி ஏற்பட்டால், உடனடியாக மின் துண்டிப்பு ஏற்படும்.

தடையில்லா மின் வழங்கல் (UPS) பொருத்திய வீடுகளில், UPS - ல் இருந்து வரும் மின்சாரத்திற்கும் தனியாக, ELCB/RCD/RCCB பொருத்திக் கொள்வது பாதுகாப்பு.

விலை குறைவான ஆட்களை பணியமர்த்தி மின் பணிகளை மேற்கொள்வதை முற்றிலுமாக தவிர்ப்பு, மின்சாரம் தொடர்பில் முறையாக கல்வி கற்ற, புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொண்டுள்ள நபர்களை வைத்து மின் இணைப்பு பணிகளை செய்வது பாதுகாப்பு.

மின் வடங்களை, எந்தச் சூழ்நிலைகளிலும், கதவு இடுக்குகள் வழியாக எடுத்துச் செல்லாதீர்கள்.  நடந்து செல்லும் பாதைகளுக்கு குறுக்காக எடுத்துச் செல்லாதீர்கள்.  மின் விரிவாக்க பெட்டிகளை (Extension Box) பயன்படுத்துவதை தவிர்துவிடுங்கள்.

குளியலறையை பொருத்தவரை, மின் விளக்குகள், காற்றை வெளியேற்றும் விசிறி, மின் கொதிகலன் (Geyser) ஆகியவற்றை, நீர் படாத இடங்களில் அமைத்துக் கொள்வது பாதுகாப்பானது.  பொதுவாக ஈரப்பதம் கொண்ட குளியலறை பகுதிகளில், மின் வடங்கள் செல்லும் மின் குழாய்களுக்குள், எறும்புகள் தமது கூடுகளை அமைக்கும்.  இந்த எறும்புகள், மின் வடங்கள் நெகிழிப் பொருட்களை கடித்து, மின் கசிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.  இந்தச் சூழலில், அதற்கான மின் வடங்களை பயன்படுத்திக் கொள்வது பாதுகாப்பானது.

மின் வடங்கள் ISI தரச்சான்றிதழுடன், நெருப்பு பற்றாத தன்மை கொண்டதாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.

வீட்டுத் தோட்டங்களில், தரை வழியே மின்வடம் எடுத்துச் செல்லப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஆர்மோர்டு வடங்கள் (Armoured Cable) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

முடிந்த வரை மின் இணைப்பிகளை (Switch) குழந்தைகள் கைக்கு எட்டாத வகையில் அமைத்து கொள்வது பாதுகாப்பானது.

குழந்தைகளை தனியாக அல்லது வீட்டு பணியாளரிடம் விட்டுச் செல்வதாக இருந்தால், வீட்டினுள் சுழலும் தன்மை கொண்ட Rotating WiFi CCTV Camera கண்டிப்பாக பொருத்திக்கொள்ள வேண்டும்.  அவ்வப்பொழுது நம் கைபேசியில், குழந்தை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

வீட்டினுள் மின்சாரத்தைப் பகிர்ந்து கொடுக்கும் பொழுது, மின் பயன்பாட்டு தேவைக்கு ஏற்ப, தனித்தனி Ampere Rating உள்ள MCB பொருத்திக் கொள்வது பாதுகாப்பானது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: