செய்திகள்
அயோத்தியில் ராமர் கோவில் நிலம் வாங்க நடந்த முறைகேடு தொடர்பில் உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைமைக்கும் - அனைத்திந்திய பாஜக தலைமைக்கும் மோதல்போக்கான சலசலப்பு ஏற்பட்டுள்ளது... பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வங்கிக் கிளைகள் அனைத்திலும், அனைத்து படிவங்களும் தமிழ் மொழியில் வழங்கப்படும். வேலூர் சிஎம்சியில் மருத்துவப் பணியாளர்கள் 200 பேருக்கு கரோனா தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய உழவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணை ஒமைக்ரானுக்கு தனி தடுப்பூசி


"தமிழ்" என்ற சொல்லின் மூலம் என்ன?

"தமிழ்" என்ற சொல்லின் மூலம் என்ன?

தென்னிந்தியா என்று சொன்னாலே, பிற மாநிலத்தவருக்கும், நாட்டவருக்கும் மனதில் எழும் பெயர் "தமிழ்".  பலருக்கு இந்த சொல் ஆவலை ஏற்படுத்தும், சிலருக்கு மட்டும் பொறாமையை ஏற்படுத்தும். 

பலரை ஈர்க்கும் "தமிழ்" என்ற சொல்லின் மூலம் என்ன?, என்பது குறித்து பலவகை கருத்துக்களையும், ஆராய்ச்சி முனைப்புகளையும் மேற்கொண்டு வந்த நிலையில், பெயர் சொல்லுக்கான விளக்கம் தர இதுவரை எவராலும் இயலுவதில்லை.   

"தமிழ்" என்ற சொல்லுக்கான விளக்கம் கொடுத்து, தான் சொல்வதே சரி என்கிற முயற்சியில் தங்களின் தகுநிலையை முழுமையாக பயன்படுத்தி, பலரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.  தமது விளக்கம் சரி என பிறரை ஏற்றுக் கொள்ள வைத்து விட்டால் அதன் மூலம் இவர்களுக்கு பெயரும் புகழும் மேற்கொண்டு கிடைக்கும் என்பதே அவர்களது ஆவல்.

புலப்படாத விடுகதையாக அமைந்து இருக்கும் "தமிழ்" என்ற சொல்லுக்கான விளக்கம் குறித்து, நாம் இங்கே நம்மால் இயன்றவரை பல கோணங்களில் முயன்று பார்க்கலாம். "தமிழ்" மீது பற்று கொண்ட பலருக்கும் இது ஒரு ஆர்வத்தை தூண்டும் விளக்கமாக அமையும் என பற்றுறுதி கொள்கிறோம். 

“தமிழ்” என்ற சொல்லுக்கான விளக்கம் தேடுவதற்காக, தமிழ் மொழி மீது பற்றினால் வெறி கொண்டோரை அணுகாமல், மொழிகளை அறிவியல் ரீதியில் அணுகும் சிலரது ஆய்வு கட்டுரைகள், அலசி ஆராய்ந்து விளக்கம் தர முயல்வதே முறையாக இருக்கும்.

தமிழ் என்கிற சொல்லுக்கு விளக்கம் தருவது அவ்வளவு எளிதல்ல என்பதை யாம் அறிந்தே இதுகுறித்து விளக்கம் சொல்ல முயல்கிறோம்.

நாம், 4 வகையில் இதை அணுகலாம்: 

1.  வேறு ஒரு சொல் அல்லது சொற்றொடர் திரிந்து தமிழ் என்ற சொல்லாக மருவி இருக்கலாம். 

2.  சொற்பொருளியல் பயன்படுத்தி இந்தச் சொல் பயன்பாட்டிற்கு வந்திருக்கலாம். 

3.  வழிபாட்டு முறைகளை கொண்டு இந்த சொல் வடிவு பெற்றிருக்கலாம். 

4.  மொழியியல், மருளியல் மற்றும் குறிமுறை மூலம் இது தோன்றியிருக்கலாம்.

நாம் மேலே குறிப்பிட்ட முதலிரண்டு வாய்ப்புகளும், சொல் தோன்றி இருப்பதற்கு வாய்ப்பாக இருப்பதாக நாம் எடுத்துக் கொள்ள இயலும்.  ஆனால் கடைசி இரண்டு, "தமிழ்" என்ற சொல் தோன்றுவதற்கு பொருந்தாது, ஏனெனில் மொழி பேசுபவர்களின் பண்பாடு அவற்றைக் கருத்தில் கொள்வதற்கு தேவை அற்றவையாக மாற்றுகிறது.  முதலில் உள்ள இரண்டும், அறிவியல் சிந்தனையை அடிப்படையாக கொண்டதாக விளங்குகிறது.

பற்பல நாடுகளில், பல மொழிகளுக்கான பெயர் விளக்கம், எப்படி மேற்கொள்ளப்பட்டது என்பதை அறிவியல் ரீதியாக அணுகாமல், அது தொடர்பில் அறிவியல் அறிவு அடிப்படைக் இல்லாமல், நாம் இங்கே சொல்லுக்கான மூலம் தேடுவது பயனற்றதாக அமையும்.

வடமொழி ஆதரவு மனநிலை:

சுப்பிரமணிய தீட்சிதர், தனது “பிரயோகவிவேகம்” என்கிற நூலில், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும், சமற்கிருதம் என்கிற குடையின்கீழ் கொண்டு வந்து, "தமிழ்" என்கிற சொல் "திராவிடம்" என்கிற சொல்லில் இருந்து மருவியதாக விளக்குகிறார்.  வட மொழி பேசுபவர்கள், தமிழை "திராவிடா" என்று அழைத்ததாகவும், "திராவிடா" என்ற சொல் பின்னாளில் மருவி "திராமிழா" என்றும், பின்னர் "தமிழ்" என்றும் மருவியதாக குறிப்பிட முயல்கிறார். 

அதைத்தொடர்ந்து முனைவர் கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்களும் தென்னிந்திய வரலாறு எழுதும் பொழுது, அதே முயற்சியை மேற்கொள்கிறார். 

இவர்களின் கூற்று ஓரளவு சரி என்கிற மனநிலையை நம்முள் ஏற்படுத்தினாலும், ஏன் "தமிழ்" என்ற சொல் முதலில் தோன்றி பின்னர் வட மொழி பேசுபவர்களால் "திராவிடா" என்று மருவி இருக்கக்கூடாது? என்கிற கேள்வியையும் உடனடியாக நம் மனதில் தோற்றுவிக்கிறது.   மேலும், திராவிட என்கிற சொல்லில் இருந்து தமிழ் என்ற சொல் மருவி வந்தது என்றால், "ரா" என்கிற உச்சரிப்பு எவ்வாறு மருவ இயலும் அல்லது தோன்றியிருக்க முடியும்?.

இத்தகைய எதிர் கருத்துக்களை நாம் முன் வைக்கும் பொழுது, வடமொழி ஆதரவு மனநிலை கொண்டவர்களால் பதில் சொல்ல இயலுவதில்லை.

சிலர் இதற்கு விளக்கமாக, "துருக்கி" என்ற சொல், "துருஸ்கா" என்ற சொல்லில் இருந்து மருவி தோன்றியுள்ளது என்று எடுத்துக்கூறி தமது கருத்தை உறுதி செய்ய முயல்கின்றனர். 

வட மொழி பேசுபவர்கள், தமிழ் மொழி பேசுபவர்களை தொடர்பு கொள்வதற்கு முன்பாகவே, பிற நாட்டவர் பலர் தமிழர்களுடன் தொழிலில் இருந்து வந்துள்ளனர் என்கிறது வரலாற்று அகழாய்வு சான்றுகள். 

அப்படியானால், தமிழ் - தமிழர் என்போருக்கு, கடல் கடந்து தமிழரிடம் தொழில்முனைந்தோர் யாராகினும் பெயர் சூட்டி இருக்கலாம்.

மேலும் திராவிடா என்கிற சொல்லுக்கு சமற்கிருதத்தில் எவ்வகையிலும் பொருள் கூற அவர்களால் இயலுவதில்லை.  ஆகவே, திராவிடா என்கிற சொல்லே, சமற்கிருத மொழிச் சொல்லாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை.  சமற்கிருத மொழி பல்வேறு பிற மொழிகளில் இருந்து சொற்களை கடன்பெற்று வந்து, இன்று செத்துப் போன நிலையில் உள்ளது என்பது சான்று.  திராவிடா என்கிற சொல்லையும் இவர்கள் பிறமொழியில் இருந்து கடனாக பெற்றிருப்பார்கள் என்கிற கருத்து முதன்மையாக வருகிறது. 

முனைவர் போப்:

முனைவர் போப், தனது ஆய்வு கட்டுரைகளில், "தமிழ்" என்கிற சொல் "தென் மொழி" என்கிற சொல்லில் இருந்து மருவி தோன்றிற்று என தனது விளக்கத்தை வைக்கிறார்.   ஏனெனில் நாம் சமற்கிருதத்தை "வட மொழி" என்கிற பெயர் கொண்டு அழைக்கிறோம்.

தென் மொழி என்கிற சொல் தமிழ் என்கிற சொல்லாக மருவி தோன்றியது என நாம் ஏற்றுக் கொள்ளலாம்.  ஆனால் தென்மொழி என்று சொன்னாள், வேறு யாரோ தமிழ் மொழியை அத்தகைய சொல் கொண்டு அழைத்திருக்க வேண்டும் என்பதுதான் போப் அவர்களின் கருத்து.  அதாவது, தமிழ் பேசுபவர்கள் தாமே தமிழ் மொழிக்கு தென் மொழி என்று பெயர் சூட்டி இருக்க மாட்டார்கள் என்பது அதன் பொருள். 

இந்தக் கருத்தை நாம் மேற்கொண்டு ஆய்ந்தோம் ஆகின், "வடமொழி - தென்மொழி" ஆகிய சொற்கள் ஒரே அளவிலான ஊழியில் தோன்றி இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.  இருந்தாலும், வடமொழி என்கிற சொல் முதலில் தோன்றி இருக்க வேண்டும். 

இவற்றை நாம் கருத்தில் கொள்வதற்கு முன்னால், பிற தென்னக மொழிகளுக்கு எவ்வாறான பெயர்கள் இருந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.  தென்மொழி என்பது தூய்மையான தமிழ்ச் சொல்.  தென்மொழி என்ற சொல்லில் இருந்து தான், தமிழ் என்கிற சொல் மருவி தோன்றியது என்றால், தமிழர்கள் தம் மொழிக்கு தாமே பெயர் சூட்டிக் கொண்டனர் என பொருள்படுகிறது.

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், தம் மொழிக்கு தாமே பெயர் சூட்ட வேண்டிய தேவை எங்ஙனம் தோன்றியிருக்க வேண்டும்? வடமொழி என்கிற சொல்லிற்கு முன்பாகவே தென்மொழி என்கிற சொல், அப்படியானால் வழக்கில் இருந்திருக்க வேண்டும். 

சங்ககாலப் பாடல்கள், தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால் உள்ள பகுதிகளை வடபுலம் என குறிப்பிடுகின்றன. சேர - சோழ - பாண்டிய ஆட்சியர்களின்  ஆட்சியின் பொழுது, பாண்டிய அரசருக்கு தென்னவன் (தென்புல அரசன்) என்ற பெயர் விளங்கி வந்துள்ளது.  ஆனால், பாண்டிய அரசாட்சிக்கு உட்பட்ட பகுதி எந்த மொழியிலும் தென்புலம் என்று அழைக்கப்படவில்லை.  அதற்கு மாறாக, தென்புலம் என்றால் "உயிர்களை பிரித்து எடுத்துச் செல்லும் எமனின் ஆட்சிப்பகுதி" என்ற பொருளில் வழங்கி வந்துள்ளது.

சொற்பொருளியல்:

இதுவரை நாம் ஒரு சொல் மற்றொன்றாக திரிந்திருக்கும் என்கிற கோணத்தில் பார்த்தோம்.  இப்பொழுது, குறிப்பு முறையில் தமிழ் என்கிற சொல் எப்படி தோன்றியிருக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்யலாம். 

சபாபதி நாவலர் எழுதிய “திராவிட-பிரகாசிகா” என்கிற நூலில் "தமிழ்" என்பது "இனிமை" என்று பொருள் என எடுத்துரைக்கிறார். 

அவரின் பாடலில்,  இதுகுறித்து 

" தமிழ் தழீஇய சாயலவர்" 

" தமிழ் பாட்டிசைக்கும் தாமரையே" 

ஆகிய சொற்றொடர்களை பின்நாளில் வந்த தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் தமிழ் குறித்து எடுத்துக் கூறும் பொழுது குறிப்பிடுகின்றனர்.   இதை தவிர வேறு எதுவும் குறிப்பிடும்படியாக விளக்கங்கள் இல்லை.

ஆகவே இவற்றை, தமிழ் புலவர் ஒருவர் தன் பாடலுக்கு இனிமை சேர்ப்பதற்காக இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.  மேலும் அவரவருக்கு, அவரவர் தம் தாய்மொழி இனிமையானது.

தமிழ் என்கிற சொல் இனிமை என்கிற சொல்லில் பொருள்படுகிறது என புலவர்கள் பாடுவதற்கு முன்பே, அதாவது, எழுத்து வடிவம் மொழி பெறுவதற்கு முன்பே, அந்த மொழியைப் பேசிய மக்கள் அந்த மொழிக்கு என இந்தப் பொருள்படும் பெயரை சூட்டி இருக்கவேண்டும். தம் மொழிக்கு தாமே இப்படியான ஒரு வழக்கில் பயன்படும் சொல்லை பெயராக சூட்டி இருக்க வாய்ப்பில்லை. 

"தமிழ் வரலாறு" என்ற நூலை எழுதிய பூப்பலா பிள்ளை அவர்கள், தமிழ் என்ற சொல்லின் பொருள் அழகு என குறிப்பிடுகிறார்.  இவரின் கூற்றின்படி, தமிழ் மொழி இயற்கையிலேயே அழகு உடையது.  

வீரசோழியம் எழுதிய தாமோதரம்பிள்ளை, "தமி" என்கிற சொல்லில் இருந்து தமிழ் என்ற சொல் தோன்றியது என்கிறார். "தமி" என்ற சொல், "தனித்துவம் வாய்ந்தது" என பொருள்படுகிறது.  அதாவது ஒப்பீடு இல்லாதது, ஒப்பற்றது. 

அப்படியானால் "ழ்" என்ற எழுத்து எவ்வாறு "தமி" என்ற சொல்லுடன் இணைந்தது என்பதற்கு விளக்கமாக, "இமிழ், உமிழ், குமிழ்" போன்ற சொற்களை எடுத்துக்காட்டாக முன்வைக்கிறார்.  இப்படியான ஒரு பெயரை தம் மொழிக்கு தமிழர்கள் சூட்டி இருப்பார்களேயாயின், அவர்கள் தமிழுக்கு பெயர் சூட்டுவதற்கு முன்பே, பிறமொழிகள் பலவற்றை ஆய்ந்து, அந்த மொழிகளில் இருந்து தமிழ் மொழி தனித்துவம் கொண்டதாக விளங்குகிறது என அறிந்து, அதற்கு பெயர் சூட்டி இருக்கவேண்டும்.  இப்படியான ஒரு செயலை எந்த மொழி பேசுபவரும் செய்வதற்கான வாய்ப்பு இல்லை.

இவை எதற்கும் வாய்ப்பு இல்லை என்றால் வேறு ஏதாவதாக இருக்கும்?  ஒளி என்ற சொல்லுக்கு "தாமம்" என்ற ஒரு சொல் வழக்கில் இருந்துள்ளது.  தாமம் என்ற சொல் மருவி இருக்கலாம்.  அப்படியானால், "ழ்" எங்கிருந்து வந்தது?.  அதற்கு கார்த்திகேய முதலியார் விளக்கம் சொல்கிறார்.  "சுல்" என்றால் ஞாயிறு என்று பொருள். இன்றளவும் "சுள்" என்று வெயில் அடிக்கிறது என நாம் பயன்படுத்துகிறோம். ஆகவே இந்த இரு சொற்களும் சேர்ந்து தமிழ் என்ற சொல் வந்திருக்கலாம் என சில தமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர்.

புலவர்கள் அவர்கள் விருப்பப்படி, தமிழ் என்ற சொல்லுக்கான பொருளை எடுத்துக்கூற முயல்வதை எல்லாம் நாம் பொருட்டாக எடுத்துக்கொண்டால், நாம் அறிவியல் பார்வையற்ற ஒரு முடிவிற்கு வர ஏதுவாகிவிடும்.  

ஒன்று தெளிவாகிறது, தமிழ் என்ற சொல் ஒரு சொற்பொருளியல் மூலம் தோன்றியது என எடுத்துக்கொள்ள இயலாது.  

வழிபாட்டு முறை:

ஆன்மீகப் பார்வை கொண்டிருப்பவர்கள் எல்லாவற்றையும் ஆன்மீக பார்வை கொண்டே அணுகுவர்.  ஆன்மீகப் பார்வை கொண்டவர்கள் ஒன்றைத் தொடர்ந்து மறுத்தும் மறந்தும் விடுகின்றனர்.  அதாவது, ஆன்மீகப் பார்வை என்பது சமூகத்தில் தொடர்ந்து மாற்றத்தை கொண்டிருப்பது. வாழ்க்கை முறை மாற மாற ஆன்மீக அணுகலும் - பார்வையும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதே உண்மை நிலை. 

ஆன்மீகப் பார்வை கொண்டவர்களில் ஒரு பிரிவினர், “தமிழ்” என்கிற சொல்லின் முதல் எழுத்து "த கடவுளை குறிப்பதாகவும், "ம" என்கிற இரண்டாம் எழுத்து மானிடர்களின் தன்மையை குறிப்பதாகும் கூறுகின்றனர்.

சைவ நெறியை பின்பற்றுபவர்கள், தமிழ் என்ற சொல் ஐந்து வகை ஓசையை உள்ளடக்கியது, அதாவது "த்+அ+ம்+இ+ழ்" என்கின்றனர்.  இதற்கு வடமொழி "பஞ்சாட்சரம்" என்ற தத்துவத்தை முன்வைக்கின்றனர்.

வைணவர்களும் பிற நெறிகளைப் பின்பற்றுபவர்களும் அவரவர் விருப்பத்திற்கு இப்படியான தத்தமது  ஆன்மீக தொடர்பு ஏற்படுத்தி விளக்கங்களை கொடுக்க முயல்கிறார்கள்.

மொழியியல்:

மொழியியல் வல்லுனர்கள், தமிழ் என்ற சொல் எப்படி தோன்றியிருக்க வேண்டும் என சில விளக்கங்களைத் தருகின்றனர். 

அவர்களின் பார்வையில், அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, அத்தை, மாமா, அம்மம்மா (பாட்டி), அப்பப்பா (தாத்தா) என்கிற சொற்கள், "அ" என்கிற உச்சரிக்க எளிதான ஓசையில் துவங்குகிறது.  ஆகவே தமிழ் என்கிற சொல்லும் "த = த்+அ" என்கிற உச்சரிப்பில் தோன்றும் வகையில் அமையப் பெற்று இருக்கலாம்.

"த" என்கிற எழுத்து, தமிழ் நெறியில் உயரிய மதிப்பு கொண்டது.  அதை தகரவித்தை என்று அழைக்கின்றனர்.  


வகரவித்தைக் காசை மனங்கொள்ளா சுத்த 

தகரவித்தை கற்றார் தயவு.   (குறள் எண் 658) 


"த" என்கிற "தகரவித்தை" க்கான பொருள் இதுவரை முழுமையாக விளக்கப்படவில்லை. 

"த" என்கிற எழுத்து, அமுத எழுத்து என்று அறியப்படுகிறது. 

"தமிழ்" என்கிற பெயருக்கு "த" என்ற எழுத்தை முதல் எழுத்தாக வைத்திருக்கலாம். 

உயிரினம் என்றால், பல்கிப் பெருக ஆண் மற்றும் பெண் என்கிற இரண்டு வேறுபட்ட பாலினம் தேவை. ஆகவே "தமிழ்" என்கிற சொல், இரண்டு பாகத்தையும் குறிப்பதாக இருக்கலாம். 

தமிழ் என்கிற பெயர், இயற்கை எழுத்து மற்றும் "ழ்" என்கிற செயற்கை எழுத்து, ஆகியவற்றின் கலவையாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது. 

எழுத்துக்களின் தன்மையை மட்டும் பார்ப்பதை தவிர்த்து விட்டு வேறு வகையாக சிந்தனையை செலுத்தினால், தமிழ் என்கிற மொழி ஒற்றை குறியீட்டுச் சொற்கள் பெருமளவில் கொண்ட மொழி.  தமிழ் என்கிற சொல்லும் ஒற்றை குறியீட்டுச் சொல் ஆகும்.  ஆகவே ஒற்றை குறியீடுகளைக் கொண்ட மொழிக்கு, ஒற்றை குறியீடு என்கிற பொருள்படும்படி "தமிழ்" என்கிற ஒற்றை குறியீடு சொல் பெயராக அமைந்திருக்கலாம்.

இப்படியாக பெயர் சூட்டப்பட்டு இருக்குமேயானால், மொழி அறிஞர்கள் ஒன்றாகக்கூடி இத்தகைய முடிவுகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.  அதற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏதும் நம்மிடம் இல்லை.

அடுத்ததாக நாம் முயல்வது, த = வல்லோசை, மி = மெல்லோசை, ழ் = இடியோசை, என மூன்று வகை ஓசைகளை ஒன்றிணைத்த சொல்லாக பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

தமிழில் 3 என்கிற எண்ணிற்கு மதிப்பு கொடுக்கப்படுகிறது.  எடுத்துக்காட்டாக, மூவுலகம், முத்தமிழ், முப்பொருள், முக்குணம்.  முன் ஊழிகளில், புவி முழுவதும் பரவியிருந்த அறிவார்ந்த மக்கள் மூன்று என்ற எண்ணிற்கு தனித்துவம் கொடுத்து வந்துள்ளனர்.  கற்பனை, மாயை, ஏதோ ஒரு சொல்லாடல் என தோராயமான மேற்சொன்ன எடுத்துக்காட்டுகளைக் கொண்டு ஒரு முடிவிற்கு வர இயலாது.  இவை எதற்கும் வாய்ப்பு இல்லை என்றால் வேறு எதுவாக இருக்கும்?  

இனத்திற்குத்தான் முதலில் பெயர் கிடைத்திருக்க வேண்டும்:

எப்படிப் பார்த்தாலும், மொழியைப் பேசும் இனத்திற்குத்தான் முதலில் பெயர் கிடைத்திருக்க வேண்டும். பேசுகின்ற மொழி அதிலிருந்து அந்த பெயரை பெற்றிருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஃபின், போல், ஆங்கல், ஐரிஷ், டேன்ஸ், ஃபிராங்ஸ் என அடுக்கிக் கொண்டே போகலாம்.  இந்தியாவைப் பொருத்தவரை, கன்னட மொழி பேசுபவர்கள், கன்னரீஸ் (Canera) பகுதியில் வாழ்பவர்கள்.  மராத்தி மொழி பேசுபவர்கள், மராட்டா பகுதியைச் சேர்ந்தவர்கள்.  ஆனால் தமிழ் என்கிற சொல்லுக்கு இது பொருந்துவதாக தோன்றவில்லை.  தமிழ்நாடு அல்லது தமிழகம் என்ற நாட்டுப் பகுதி இன்றைய அரசாட்சி முறைகளால் குறிக்கப்படுகின்றன.  தமிழ் என்ற மொழி, சேர சோழ பாண்டிய நாடுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், மற்றும் அந்த அரசாட்சியில் வென்றெடுத்த பகுதிகளில் பேசப்பட்டு வந்த மொழி. 


சங்ககால இலக்கியங்களில் தமிழ் என்ற சொல்:


தமிழ் என்ற சொல் சங்க காலம் தொட்டே, தமிழ் மொழி இலக்கியங்களிலும் பாடல்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 

1. சங்ககாலப் புலவர் குடபுலவியனார், தமது புறம் 19 - 2 இல் 
" தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து" 

2. சங்ககாலப் புலவர் நக்கீரர், தமது அகம் 227 இல் 
".... வாய்வாட் 
டமிழகப் படுத்த விமிழிசை முரசின்
வருநர் வரையாப் பெருநா ளிருக்கைத்
தூங்கல் பாடிய வோங்குபெரு நல்லிசைப்
பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர் தழும்பன்
கடிமதில் வரைப்பி னூணூ ரும்பர்" 

என தமிழ் இனத்தைச் சேர்ந்த, தமிழ் படை போர் வீரர்கள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.

1.  கருவூர் கதப்பிள்ளை சாத்தனார் தமது புறம் 168 - 18 இல் 
" வையக வரைப்பிற் றமிழகங் கேட்ப"

2.  வெள்ளைக்குடி நாகனார், தமது புறம் 35 : 3- 4 இல் 
" மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க்  கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்"

3.  மாமூலனார் தமது அகம் 31 - ல்
"தமிழ்கெழு மூவர் காக்கு
மொழிபெயர் தே எத்த பன்மலை"

என தமிழ் இனத்தவர், குடியேறிய பகுதிகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.

மேற்சொன்ன குறிப்புகளிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், தமிழ் என்கிற இனம் தோன்றி பல நூறு ஆண்டுகள் கழித்து அவர்கள் பேசும் மொழிக்கு தமிழ் என்கிற பெயர் கிடைத்திருக்க வேண்டும். 

அதாவது, தமிழ் என்பது ஒரு இனத்தின் பெயராக இருந்து, அந்த இனம் பேசும் மொழிக்கு தமிழ் என்ற பெயர் கிடைத்திருக்க வேண்டும். 

எப்படியாகினும், தமிழ் என்கிற இனத்திற்கு தமிழ் என்கிற சொல் எங்கிருந்து கிடைத்தது? 

 “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி” 

என்பதற்கு இணங்க, வரலாறு காலங்களுக்கு முன்பாக தோன்றியது தமிழினம்.  அப்படியானால் தமிழ் என்கிற இனத்திற்கு, வரலாற்று நாட்களுக்கு முன்பாகவே, நம் அறிவிற்கு எல்லாம் புலப்படாத மூலத்தின் மூலமாக பெயர் சூட்டப்பட்டு இருக்கவேண்டும். 

ஆகவே, தமிழ் என்கிற சொல்லுக்கான மூலத்தை ஆராய வேண்டுமாயின், வரலாற்றுக்கு முந்திய ஊழியின் வரலாறு நாம் அறிந்திருக்க வேண்டும்.

பல பல்கலைக்கழக ஆராய்ச்சி கட்டுரை மூலங்களை அடிப்படையாக கொண்டு, புரிந்துகொள்வதற்கும் - படிப்பதற்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக எழுதியது.

அ சூசை பிரகாஷ்

 
ஓசூர்ஆன்லைன்.comShare this Post:

தொடர்பான பதிவுகள்: