வருமான வரித்துறையில் இருந்து விளக்கம் கேட்டு ஓலை வந்தால் என்ன செய்ய வேண்டும்?

வருமான வரித்துறையில் இருந்து விளக்கம் கேட்டு ஓலை வந்தால் என்ன செய்ய வேண்டும்?

குடிமக்கள் பல்வேறு வகையான வரிகளை நாட்டிற்காக நாளது பொழுதும் கட்டி வந்தாலும், வீட்டை - நிலத்தை விற்றால் அல்லது வாங்கினால், நகை வாங்கினால் அல்லது விற்றால், வங்கியில் பணம் போட்டால் அல்லது எடுத்தால், இப்படி எதைச் செய்தாலும், வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் இருப்பதாக வருமான வரித்துறையினர் கருதினால், செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தச் சொல்லி, என கேட்டு ஓலை அனுப்புவது என்பது வருமானவரித்துறையினரின் அன்றாட வழக்கம். வருமான வரித்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய ஓலைகள், நிரந்தர கணக்கு எண் (PAN) பதியும்போது கொடுக்கப்பட்ட முகவரிக்கு, தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பப்படுகின்றனர்.   வருமான வரி கட்ட நிகழ்நிலை தளத்தை பயன்படுத்தும் போது, அந்த இணையப்பக்கத்திலும் எச்சரிக்கை செய்திகள் கொடுக்கப்படுகின்றன. பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் ஓலை அனுப்பப்படுகிறது.

சரி, ஓலை வந்துவிட்டது... என்ன செய்ய வேண்டும்?


வருமான வரித்துறையினர் விளக்கம் கேட்டு ஓலை அனுப்பும்போதே, அந்த ஓலைக்கான பதிலை எவ்வளவு நாட்களுக்குள் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பார்கள்.  இங்கே நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட ஓலை உட்பொருளில் நமக்கு தொடர்பில்லை என்றாலும், தொடர்பில்லை என்ற விளக்கத்தை சொல்லி கண்டிப்பாக பதில் அனுப்ப வேண்டும்.  பதில் அனுப்ப தவறினால், பல்வேறு சட்ட சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் நிலை ஏற்படலாம்.

விளக்கம் கேட்டு பெறப்பட்ட ஓலைக்கு பதில் அனுப்பாத நிலையில், வருமான வரித்துறையினர் நம்மீது தண்டத் தொகை பெறுவதற்கான ஆணையை அனுப்பலாம்.  வரி ஏதேனும் கட்டாமல் விட்டிருந்தால், பதில் கொடுக்காத நிலையில் அதற்கு அவர்கள் வட்டிக்கு மேல் வட்டி கணக்கிட்டு வாங்கலாம்.  பதில் அளிக்கவில்லை என்பது தவறு என்பதால் அதற்கு ஒரு தண்டத்தொகை எனவும், முறையாக ஆவணங்களை கொடுக்கவில்லை என ஒரு தண்டத்தொகை எனவும், வரியை செலுத்தவில்லை என ஒரு தண்டத்தொகை எனவும், பல்வேறு வழிகளில் நாம் சேமித்து வைத்திருக்கும் பணத்தை எடுத்து கொள்வதற்கு வருமான வரித்துறையினர் பல்வேறு வகைகளில் முயற்சிகளை மேற்கொள்வர்.

பதில் அனுப்பும் பொழுது, ஏதாவது பதில் அனுப்பினால் போதும் என்ற மனநிலையை தவிர்த்துவிட்டு, கேட்கப்பட்ட அனைத்து விளக்கங்களும் தெளிவான நேரடி பதில்களை கொடுப்பது சிறந்தது.

பதில் கொடுக்கும்பொழுது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் கொடுத்தால் சிறப்பு.  தேவையற்ற கருத்துக்களை பதிவிட்டு, சிக்கல்களை மேலும் வளர்த்துக் கொள்ளுதல் கூடாது.  

" நான் மன உளைச்சலில் இருக்கிறேன்! நான் பணம் முடக்கத்தில் இருக்கிறேன்! நான் நொடிப்பில் இருக்கிறேன்! செலவினங்கள் பெருமளவு உள்ளதால் என்னால் வரி கட்டுவதற்கு இயலாது! "

போன்ற உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிலாக அனுப்புவது என்றென்றும் கூடாது.

உடனடியாக பதில் கொடுக்க இயலவில்லை என்றால், பதில் கொடுப்பதற்காக நேரம் நீட்டிப்பு கேட்டு, பதில் அனுப்பலாம்.  பதில் ஏதும் கொடுக்காமல் இருப்பது, பின்வரும் நாட்களில் பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும்.

நீங்கள் பதில் அனுப்பி, வருமானவரி அலுவலகர், பதிலை ஏற்றுக் கொள்ளாமல், மேல் நடவடிக்கை மேற்கொண்டால், நீங்கள் தீர்வு பெறும் பொருட்டு, உங்கள் தரப்பு கருத்துக்களை மேல்முறையீடு, அதற்கான உயர் அலுவலரை கடிதம் மூலம் தொடர்பு கொள்ளலாம்.  நேரடியாக பார்த்து வாய்வழி விளக்கம் கொடுப்பது என்றென்றும் பலன் தராது, ஏனெனில் அவை சட்டப்படி ஆவணமாக்கப்படுவதில்லை.

விளக்கம் கேட்டு ஓலை வந்தால், நீங்கள் உங்களின் கணக்காளர் அல்லது பட்டயக் கணக்காளர் போன்ற தொழில்முறை வல்லுநர்களின் அறிவுரையை கேட்டு பதில் அனுப்புவது சிறப்பு.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: