வருமானவரித்துறை "ரெய்டு" என்றால் என்ன?

வருமானவரித்துறை "ரெய்டு" என்றால் என்ன?

வருமானவரித்துறையினர், குறிப்பிட்ட நபருக்கு உரிமையான இடங்களில் "ரெய்டு" நடத்துகின்றனர் என, பல்வேறு ஊடகச் செய்திகளை காணலாம்.  இந்த ரெய்டு என்றால் என்ன?  வருமானவரித்துறை ரெய்டின் போது என்ன நடக்கும்? எதற்காக வருமானவரித்துறை ரெய்டு நடத்துகிறது?

பொதுவாக, வருமானவரித்துறையினருக்கு ஏதாவது ஐயம் ஏற்பட்டால், அவர்கள் விளக்க ஓலை அனுப்பி, அதன்மூலம் விளக்கங்கள் பெறுவர்.  ஒரு நபரின் சொத்து மதிப்பு அவர் வருமானவரித்துறையினருக்கு காட்டும் வருமானத்தின் அளவைவிட பெரிய அளவில் கூடுதலாக இருக்கிறது என்கிற தகவல் கிடைக்கப்பெற்றால் அல்லது கண்டறியப்பட்டால் அவர்கள் இவ்வாறான திடீர் ஆய்வு மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு என தனியான புலனாய்வுப் பிரிவு செயல்படுகிறது.  அவர்கள் தரும் தகவலின்படி இத்தகைய ரெய்டுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வருமானவரித்துறையினரை பொருத்தவரை, அவர்களின் இந்த "ரெய்டு" என்பதற்கு சட்டப்படி "தேடுதல்" என்ற சொல்லே பொருந்தும். இதை "ஆய்வு" என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

வருமானவரிச் சட்டம் 132:


வருமானவரிச் சட்டம் 132, தேடுதல் மற்றும் பறிமுதல் செய்யும் உரிமையை வருமானவரித் துறை அலுவலருக்கு வழங்குகிறது.  நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி, ஒரு நபர் வருமான வரி கணக்கு வைத்து வருமான வரியைத் தொடர்ந்து கட்டி வந்தாலும், அவர் கணக்கில் காட்டும் வருமானத்திற்கு முரணாக பெரிய அளவில் சொத்துக்கள் வாங்கி வைத்திருக்கிறார் அல்லது விலை மதிப்பான பொருட்களை வைத்திருக்கிறார் அல்லது பணமாகவே பதிக்கிறார் போன்ற தகவல்கள் கிடைக்கப்பெற்றால், அப்போது இத்தகைய திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ரெய்டு துவங்குவதற்கு முன்:


வருமான வரித் துறை, புலனாய்வுப் பிரிவு இணை இயக்குநர் / கூடுதல் இயக்குநர், ஆய்விற்கான தகவல்களுடன் ஒரு கோரிக்கையை இயக்குநர் (அ) பொது இயக்குனர் முன்பு, முறையாக கொடுப்பார். கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், இயக்குநர் (அ) பொது இயக்குனர், ஆய்விற்கு ஒப்புதல் அளிப்பார்.

எத்தனை இடங்களில், எத்தனை நபர்களைக் கொண்டு, என்னென்ன முன்னேற்பாடுகளுடன் ஆய்வு நடைபெற வேண்டும் என்பதை தொடர்புடைய இணை இயக்குநர்/ கூடுதல் இயக்குநர் முடிவெடுப்பார். நேரத்தின் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது சில மாற்றங்களை செய்துகொள்வார்.

எந்த நாளில், எத்தனை மணிக்கு, எவ்வெந்த இடங்களில் ஆய்வு தொடங்கும் என்று துல்லியமாகத் திட்டமிட்டு ஆய்வு / தேடுதல் / ரெய்டு மேற்கொள்ளப்படும்.

தேடுதல் ஆணை:


வருமான வரித்துறையினர் தேடுதல் என்றால், வரி கட்டுபவர் இன் இடங்களுக்குள் திரைப்படங்களில் காட்டப்படுவது போல அத்துமீறி உள்நுழைந்து தேடுவார்கள் என்பது அல்ல.  ஒரு இடத்திற்குள் நுழைவதற்கு முன், தேடுதல் ஆணையை, அதன் உரிமையாளர் அல்லது பொறுப்பாளர் அல்லது அங்கு இருப்பவர்கள் காட்டி, ஒப்பம் பெற்று, அதன்பின்பே தேடுதல் வேலையை துவங்குவர்.

பொதுவாக, வருமான வரி செலுத்துபவரின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் இத்தகைய கெடுதல்கள் நடைபெறும்.  இதற்காக பல குழுக்கள் இருக்கும்.  குழுவிலுள்ள யாருக்கும் எதைத் தேடுகிறோம் என்பது தெரியாது.  ஏன் தேடுகிறோம் என்பதும் தெரியாது. இந்த தேடுதலுக்கு தலைமை ஏற்று நடத்தும் கூடுதல் இயக்குனர் அல்லது இணை இயக்குனர் அளவிலான அலுவலருக்கு மட்டுமே " என்ன தேடப்படுகிறது? எதற்காக தேவைப்படுகிறது? " என்பது குறித்த தகவல் தெரியும்.

தேடுதலின் போது என்ன நடக்கும்?

தேடுதல் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அதேவேளையில் வரி செலுத்துபவர் இடம் முதல்கட்ட அறிக்கை பெறுவார்கள். ஆய்வின்போது கிடைக்கப்பெற்ற பணம், விலை உயர்ந்த பொருட்கள், ஆவணங்கள் ஆகியவற்றின் தகவல்களை குறித்து கூடுதல் விளக்கம் கேட்டு பெறுவார்கள். விளக்கங்கள் ஆவணப்படுத்தப்படும். விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்றால், அந்த பொருட்கள் இடைநிலையில் பறிமுதல் செய்யப்படும்.

ஆய்வு முடிந்த பின் வரி செலுத்துபவர் விளக்கம் தருவதற்கு நேர நீட்டிப்பு பெற்று, விளக்கம் பதிவு செய்யலாம்.  அலுவலருக்கு இப்படி வரி கட்டுபவர் கொடுத்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்று கருதினார் , அலுவலர் வரிஏய்ப்பு ஆணை வெளியிடுவார்.  வரி கட்டுபவர் இருக்கு அதில் முரண்பாடு இருக்கும் என்றால், மேல்முறையீடு செய்யலாம்.

வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டாலும், ஆய்வின்போது கைது நடவடிக்கைகள் என எதுவும் இருப்பதில்லை.

தேர்தல் நேர ரெய்டுகள்!

தேர்தல் நேர வருமான வரித்துறை ரெய்டு என்பது, தகவலின் உண்மைத் தன்மையை முழுமையாக ஆய்வு செய்யாமல் மேற்கொள்ளப்படுவதாகும்.  பெரும்பாலும் அந்த ரெய்டுகள், செய்தி பரபரப்பிற்காக மட்டுமே என,  வரலாற்று உண்மை எடுத்துரைக்கிறது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: