மதுரை திருப்புவனம் அருகே கண்மாய்க்குள் மறைந்திருக்கும் வரலாறு

மதுரை திருப்புவனம் அருகே கண்மாய்க்குள் மறைந்திருக்கும் வரலாறு

மதுரை திருப்புவனம் அருகே கண்மாய்க்குள் மறைந்திருக்கும் வரலாறு பூமிக்குள் புதைந்திருக்கும் பாண்டியர் ஊழி கோயில்: அகழாய்வு செய்ய ஆய்வாளர்கள் வலியுறுத்தல்

மதுரையை கண்ணகி எரித்தாள்.  அப்போது மதுரையை கண்ணகி எரித்த பின் மதுரையின் அரசனும் மக்களும் மேற்கு நோக்கி நகர்ந்து மற்றொரு பேருரை (பெரிய ஊர்) அமைத்து அங்கு வாழத் துவங்கினர் என்கிறது வரலாறு.  அப்படி புதிதாக அமைக்கப்பட்ட ஊர் தான், இப்போதைய மதுரை.

எரிக்கப்பட்ட பழைய மதுரை குறித்து பழம்பெரும் நூல்கள் பலவற்றில் குறிப்புகள் பாடல்களாக இடம் பெற்று நமக்கு, நமது வரலாற்றை எடுத்துரைக்கின்றன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மணலூர் கண்மாய் கரையின் அருகே பழங்கால சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்தது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைப் பதிவாளர் காளைராசன் தலைமையிலான குழுவினர் மணலூர் கண்மாயில் ஆய்வு செய்தனர். இதில் கண்மாயில் பழங்கால நந்தி சிலையின் மேற்புற பகுதி மண்ணில் புதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. இரண்டு அடி அகலம், நான்கு அடி உயரம், ஆறு அடி நீளம் கொண்ட நந்தி சிலை சற்று வேறுபாடான அமைப்பை உடையதாக உள்ளது.

இதுகுறித்து காளைராசன் கூறுகையில், ‘‘மதுரையை கண்ணகி எரித்தப் பின் பாண்டிய மன்னர்கள், நாட்டு மக்களுடன் மேற்கு நோக்கி நகர்ந்து இப்போதுள்ள மதுரை நகரை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் வழிபட்ட கோயிலின் நந்தியாக இது இருக்கலாம். இதை உறுதி செய்யும் விதமாக நந்தி சிலையை சுற்றிலும் 40 அடி நீள அகலத்தில் கருங்கற்களால் ஆன சுற்றுச்சுவரும் உள்ளது. இங்கு மண்ணுக்குள் கோயில் புதைந்திருக்க வாய்ப்புள்ளது.

ஒன்றிய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராம கிருட்டிணன், இந்த சிவாலயத்தை நடுப்படுத்தி, இதன் அருகில் குடியிருப்புகள் இருந்திருக்க வேண்டும் என கருதி, இதில் இருந்து 500 மீட்டர் தொலைவில் முதலாம் கட்ட அகழாய்வை மேற்கொண்டார். இந்த நந்தி சிலை, முதலாம் கட்ட அகழாய்வு நடந்த இடம், அம்மன் கோயில், அய்யனார் கோயில் ஆகியவை ஒரே நேர்கோட்டில் உள்ளன. எனவே தொல்லியல் துறையினர் இந்த இடத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

தமிழக தொல்லியல் துறை 8ம் கட்ட அகழாய்வை மணலூரில் இன்னும் தொடங்கவில்லை. எனவே தொல்லியல் துறை மணலூர் கண்மாய் பகுதியில் அகழாய்வை மேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: