8-வது ஆண்டாக டெல்டாவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத சூழல்

8-வது ஆண்டாக டெல்டாவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத சூழல்

இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவைக்கு அணையின் தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது.

சூன் 12-ஆம் நாளுக்குள் தமிழகத்துக்கான தண்ணீரை தர வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை நடுவன் அரசும், கருநாடக அரசும் செயல்படுத்தவில்லை.

இதனால், 8-ஆவது ஆண்டாக உழவர்கள் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் காரிக்கிழமை (சூன் 15) காலை நிலவரப்படி 45.32 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 14.99 கன அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்தானது வெறும் 535 கன அடியாக உள்ளது.

இத்தகைய சூழலில், குடிநீருக்காக அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் வரத்து இல்லாத இந்த நிலையில், குடிநீருக்காக தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட வேண்டிய நிலை இருப்பதாலும் நிகழாண்டும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளது.

டெல்டா மாவட்டங்களின் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை சூன் 12-ஆம் நாள் திறக்கப்படுவது வழக்கம்.

இறுதியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மட்டுமே உரிய நேரத்திற்கு முன்னதாக சூன் 6-ஆம் நாளே தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் பின்னர் தொடர்ந்து 8 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படாத சூழலே உள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறந்தால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மட்டும் 2.75 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். இவை தவிர, திருச்சி, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 1.25 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். கடந்த 7 ஆண்டுகளாக இதில் 40 விழுக்காடு மட்டுமே வாய்ப்பாகி வருகிறது.

இதுதொடர்பாக, தமிழக அனைத்து உழவர்கள் கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ரா. பாண்டியன் கூறியது:

கேரளம் மற்றும் கருநாடகத்தில் தென்மேற்கு பருவமழையானது ஒருகிழமை முன்னதாகவே தொடங்கிவிட்டது. இப்போது நல்ல மழை பெய்து வருகிறது.

காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் நிகழாண்டு சூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்படும்; 7 ஆண்டுகளக்குப் பிறகு குறுவை சாகுபடி மேற்கொள்ளலாம் என நம்பியிருந்த உழவர்களுக்கு கருநாடகத்தின் பிடிவாதமும், நடுவன் அரசின் அலட்சிய போக்கும், மேட்டூர் அணையை வரண்ட நிலமாக மாற்றியுள்ளது.

நீதிமன்ற ஆணைகள் எதிஅயும் பின்பற்றமாட்டோம், காவிரி ஆணைய ஆனையையும் மதிக்கமாட்டோம் என கருநாடக அரசும், அதற்கு துணையாக நடுவன் அரசும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: