மனம் இருந்தால் எதற்கும் வழி உண்டு... பிலிப்பைன்ஸ் பாசிக் ஆற்றின் கதை!

மனம் இருந்தால் எதற்கும் வழி உண்டு... பிலிப்பைன்ஸ் பாசிக் ஆற்றின் கதை!

மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்தாலே நன்கு விளங்கும், ஒரு ஆறு முழுமையாக மாசு படுத்தப்பட்டு, அதன் ஓரங்களில் மனிதர்கள் "சேரி" என்கிற பெயரில் குடியிருப்பு ஏற்படுத்தி ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பது.

இப்படி மாசடைந்த நிலையில் காட்சியளிப்பது பாசிக் ஆறு.  இது பிலிப்பைன்ஸ் நாட்டில் அதன் தலைநகரான மணிலாவை கடந்து செல்கிறது.   மணிலா விரிகுடா முதல் லாகுன் டே விரிகுடா வரை இணைத்து, சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த ஆறு ஓடி வந்தது.  இந்த ஆறு மக்கள் தொகை பெருமளவு அடர்த்தியாக உள்ள மணிலா நகரை கடப்பதால், மனிதர்கள் பொறுப்பற்ற வகையில் அந்த ஆற்றில் குப்பை கூளங்களை கொட்டத் தொடங்கினர்.  அதன் விளைவாக இந்த ஆறு மனிதர்களுக்கு பயனற்ற நிலையிலும், பகுதி முழுவதையும் மாசு ஏற்படுத்தும் ஒரு நிலைக்கும் உள்ளானது. 1990ல், பாசிக் ஆற்றை, "மடிந்து விட்ட ஆறு", அதாவது இந்த ஆற்றின் நீரை பயன்படுத்துவதோ அல்லது இந்த ஆற்றின் உள்ளே உயிர்கள் வாழ்வது வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டு வாக்கில் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பிலிப்பினோ அரசு ஆகியவை சேர்ந்து இந்த ஆற்றை மீட்டெடுக்கும் பணிகளை மேற்கொள்ளத் துவங்கினர்.

அரசுகளும், அரசுகளுக்கு உதவுபவர்கள் முயற்சிகள் மேற்கொண்டால் மட்டும் பலன் கிடைத்துவிடாது என்பதை உணர்ந்த பிலிப்பினோ அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி, மக்கள் இயக்கம் ஏற்படுத்தி, மக்களும் இந்த ஆற்றை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட ஊக்கப்படுத்தினர்.

1990களில், மடிந்து விட்ட ஆறு என்கிற நிலையிலிருந்த பாசிக் ஆறு, 2010 வாக்கில், புதுப்பொலிவுடன் ஓடத்துவங்கியது. இதற்காக, ஆசிய நகரங்களில் ஓடும் ஆறுகளில் தூய்மையான ஆறு என்கிற பட்டத்தையும் இது வென்றது.

2021 மே நிலைமையில்,  மீண்டும் இந்த ஆறு மாசடையத் துவங்கி இருப்பதாக வருந்தத்தக்க செய்திகள் வருகின்றன.  உலக அளவில், கடலில் சேரும் நெகிழி கழிவுகள் பெரும்பாலானவை - சுமார் 7.5 விழுக்காடு, இந்த ஆற்றில் இருந்து கடலுக்குள் வெளியிடப்படுகின்றன என்கிற அதிர்ச்சித் தகவலும் கிடைக்கின்றன.   சுமார் 200 டன் நெகிழி கழிவுகள் நாளொன்றுக்கு இந்த ஆற்றில் கொட்டப் படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது.

மனிதன் நினைத்தால் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எந்த சூழ்நிலைக்கும் மாற்றலாம் என்பது இதிலிருந்து நமக்கு விளங்குகிறது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: