மாற்றத்தைக் கொண்டு வருமா ராகுல் காந்தியின் பயணம்?

மாற்றத்தைக் கொண்டு வருமா ராகுல் காந்தியின் பயணம்?

இந்திய நாட்டின் தென்பகுதி முனையாக கருதப்படும், தமிழ் நாடு மாநிலம் கன்னியாகுமரியிலிருந்து, இந்திய ஒற்றுமை நடைபயணம் (பாரத் சோடோ யாத்ரா), ராகுல் காந்தி துவங்கியபோது, பெரும்பாலானவர்கள், எழுச்சி ஏற்படுத்துவதற்கான ராகுல் காந்தியின் முன்னெடுப்பாக கருதவில்லை.  அது ஏதோ ஆர்வக் கோளாறினால் ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணம் என்றே பலராலும் பார்க்கப்பட்டது.

பப்பு, முதிர்ச்சியற்றவர், விளையாட்டுப் பிள்ளை, என்று பொய்யர்களால், மீண்டும் மீண்டும் அடையாளப்படுத்தப்பட்ட ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணம் என்ற நெடும் பயணத்தை எவ்வாறு மேற்கொள்ள இருக்கிறார் என்கிற ஏழனமான பார்வை அரசியல் வட்டாரத்தில் நிலவியது.

நடைபயணத்தை கன்னியாகுமரியில் தமிழ் நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்த நிகழ்வு, கூட்டம் சேர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சி திமுகவின் துணையை நாடியது போன்ற ஒரு தோற்றத்தை எதிர்க்கட்சிகளால் தோற்றுவித்து கொடுக்கப்பட்டது.

நடை பயணம் துவங்கி ஒரு சில நாட்கள் பெரும்பாலான ஊடகங்கள் அது தொடர்பில் செய்தி வெளியிடுவதை தவிர்த்து வந்தது. குறிப்பாக GODI ஊடகங்கள், எதிர்மறைச் செய்திகள் வெளியிடுவதற்கு கூட ராகுல் காந்தி நடைபயணம் தகுதியற்றதாக கருதி அமைதி காத்தனர்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம், கன்னியாகுமரியில் துவங்கப்பட்ட பொழுது, கன்னியாகுமரி மாவட்டம், காங்கிரஸ்-இன் செல்வாக்கு உள்ள பகுதி, அதனால் மக்கள் கூடுகிறார்கள் என்று அரசியல் பார்வையாளர்கள் சொன்னார்கள்.  அடுத்ததாக கேரள மாநிலத்தில் நடை பயணம் தொடர்ந்த பொழுது, அங்கே கூடிய கூட்டம், நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிடும் என கருதினர்.  துவக்கத்தில் பத்தாயிரம் மக்கள் கூடினார்கள் என்றால், அடுத்தடுத்த நாட்களில் மக்கள் கூட்டம் பெருகி, நாள்தோறும் இரண்டிலிருந்து மூன்று லட்சம் மக்கள் நடைபயணத்தில் பங்கு எடுத்ததாக, செய்திகள் வரத் துவங்கியது.

இது ஆர்எஸ்எஸ் பாஜக இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.  அன்று முதல், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் குறித்து, போலியான, தவறான, கீழ்த்தரமான கருத்துக்களை பதிவிட துவங்கினர்.  இது மக்களிடையே எதிர்வினை ஆற்றி, ராகுல்காந்தியின் நடை பயணத்திற்கு மேலும் வலு சேர்த்தது என்று சொன்னால் அது தவறாகாது.

GODI செய்தி நிறுவனங்கள், தங்கள் பங்கிற்கு ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் பிரிவினையை திணிக்க, தங்களால் ஆன எல்லாவகை முயற்சிகளையும் - செய்தி வெளியிடுவதன் வாயிலாக, தொடர்ந்து நாளது பொழுதும் தங்களது முதலாளிகளுக்கு நம்பிக்கைக்கு உகந்த வேலையாக செய்து வருகின்றனர்.

பாஜக-ஆர்எஸ்எஸ் vs  ராகுல் காந்தி:

இந்தியாவில் கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கும்பல்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வகை இந்திய அளவிலான பயணங்களும், இந்திய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசியல் செல்வாக்குப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.

பாஜக-ஆர்எஸ்எஸ் முன்னெடுத்த பயணங்கள், உடைப்பது, நொறுக்குவது, கொல்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.  அவை மோட்டார் வண்டிகளில் பகை கூச்சலுடன் மேற்கொள்ளப்பட்டன. ஒரு சாதிய பிரிவினருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, அவர்களின் கருத்து -  சித்தாந்தத்திற்கு ஏற்ப, இந்திய மக்களை அடிமை படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டன.

அரசியல் தலைவர்கள் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை அரசியலாக பார்க்கும் நிலையில், அவர் நடை பயணம் மேற்கொள்ளும் இடங்களிலெல்லாம், ராகுல் காந்தியை ஒரு மாற்றத்திற்கான தலைமையாக மக்கள் கருதி கூட்டம் கூட்டமாக தாமாகவே முன்வந்து நடை பயணத்திற்கு வலு சேர்த்து வருகின்றனர்.

நாட்டின் வளர்ச்சிக்கு, மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அரசியல் பிழைப்பவர்கள் தேவையற்றவர்கள் என்கிற உண்மையை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர் என்றே இந்த கூடுகிற கூட்டம் எடுத்துரைக்கிறது.

பாஜக-ஆர்எஸ்எஸ் அச்சம்:

ராகுல் காந்தியின் மீதான அச்சத்தின் விளைவாக, அவரின் ஒற்றுமை நடைபயணத்தை மக்களிடமிருந்து திசை திருப்புவதற்காக, இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடைகள் என்கிற செய்தி பாஜக ஆர்எஸ்எஸ் ஆட்சியாளர்களால் பரப்பப்பட்டது.  அதன் தாக்கம், மக்களிடம் ராகுல் காந்தியின் செல்வாக்கு உயர்வதை தடுக்க இயலவில்லை.

அச்சம் எந்த அளவிற்கு தலைக்கு ஏறி உள்ளது என்றால், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு போலி செய்தி என ராகுல் காந்தி குறித்து கடந்த செய்திகளை ஆர்எஸ்எஸ் பாஜக சார்பில் ஊடகங்களும், அவர்களின் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதனால், பாஜக ஆர்எஸ்எஸ் கும்பலின் அச்சம், அவர்களின் கடந்த நாட்களில் மேற்கொள்ளும் செயல்கள் மூலம் வெளிப்படுகிறது.  அந்த கும்பல் இப்போது இஸ்லாமியர்களிடையே தூதுவிட்டு, அவர்களை தம்மிடம் பேசுவதற்கு அழைக்க முயற்சி செய்து வருகிறது.  சில இடங்களில் பேச்சுவார்த்தைகளும் நடந்தேறி வருகின்றன.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம், அரசை எதிர்த்து என்ற நிலையை மேற்கொள்ளாமல், ஒற்றுமையே தேவை என்கிற குறிக்கோளுடன் மேற்கொள்ளப்படுகிறது.  ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல், ராகுல்காந்தியின் நடை பயணத்திற்கு எதிர்வினை மட்டுமே ஆற்றும் நிலையில் உள்ளது.  ராகுல் காந்தி ஆக்கத்திற்கான முன்னெடுப்பு மேற்கொள்கிறார் என்றால், அதற்கு தேவையற்ற தரம் தாழ்ந்த பரப்புரைகள் மூலம் எதிர்வினை ஆற்றி வருகிறது பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல்.

முதலாளிகளின் கூட்டாளி மோடி:

இந்திய மக்களின் சங்கி அறிவு தவிர்த்த அனைத்து பொதுமக்களும், மோடி ஆர்எஸ்எஸ் பாஜக அரசு, அம்பானி-அதானியின் செல்வத்தை கூட்டுவதற்கான அரசு என்று ராகுல் காந்தியுடன் இணைந்த சிந்தனை கொண்டவர்களாக திகழ்கிறார்கள்.  இது ஆர்எஸ்எஸ் பாஜக சங்கி கும்பல்கள் இடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது.  

இது மக்கள் நடைபயணம்:

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இந்திய அளவிலான அரசியல் பயணங்கள், எடுத்துக்காட்டாக கன்வர் யாத்திரை, அமர்நாத் யாத்திரை, நர்மதா யாத்திரை, அயோத்தியா யாத்திரை,  எல்லாம், ஒரு குறிப்பிட்ட அமைப்பால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டும் மேற்கொள்ளப்பட்டது.  அவற்றில் பங்கெடுத்தவர்கள் எல்லாம் அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் மட்டுமே.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் இதற்கு முற்றிலும் மாற்றாக, இந்திய மக்கள் தாமாக, தங்களின் தேவையை உணர்ந்து பங்கெடுக்கும் நடைபயணமாக திகழ்ந்து வருகிறது.

தேவை இக்கணம்

உரிமைக்காக குரல் கொடுப்பவர்களின் குரல்வளை நெரிக்கப்படுவது ஆர்எஸ்எஸ் பாஜக-வின் அடிப்படை செயலாக நிகழ்ந்து வருகிறது.  இங்கொன்றும் அங்கொன்றுமாக குரல்கொடுக்கும் தன்னார்வலர் உரிமைக் குரல்கள், பொய் குற்றச்சாட்டுகளாலும், அரசு இயந்திரத்தை தவறான நோக்கத்தில் இயக்குவதன் மூலமும் நசுக்கப்பட்டு வருகிறது.

உரிமம் பெற்ற பெரும்பாலான ஊடகங்கள் GODI ஊடகங்களாக செயல்படுவதால், சமூக ஊடகங்களில் தரம் தாழ்ந்த கருத்துக்களை ஆர்எஸ்எஸ் பாஜக தலைவர்கள் வெளியிடுவதால், மக்களின் உண்மையான தேவைகளும் சிந்தனைகளும், கடந்த 8 ஆண்டுகளாக மறைக்கப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் பாஜக ஆகியவற்றின் இந்த மன நிலையை எதிர்துப் போராட வேண்டும் என்றால், அது மக்களிடையேயான எழுச்சியாக இருக்கவேண்டும் என்பதை நன்குணர்ந்த ராகுல் காந்தி, தனது இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் மூலம், மக்களின் மாற்றத்திற்கான  மன எழுச்சியாக, ஒற்றுமை நடை பயணத்தின் மூலம் வெளிக்கொண்டு வருகிறார்.

சேர்த்த கூட்டம் அல்ல இது தானாக சேர்ந்த கூட்டம்:


லட்சக்கணக்கான மக்கள் நாள் தோறும் நடைபயணத்தில் பங்கெடுப்பது என்பது, அதுவும் தொடர்ந்து 30 நாட்களுக்கு மேலாக மக்களை திரளாக கூட்டுவது என்பது, அரசியல் கட்சிகளின் பணபலத்தால் ஆகாது.
ராகுல்காந்தியின் நடை பயணத்திற்காக கூடும் கூட்டம் மக்கள் தாமாக முன்வந்து, ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கூடுகிற கூட்டம்.  

இந்தக் கூட்டம் பணத்திற்காக கூடுகிற கூட்டம் அல்ல,  மாற்றத்தை முன்மொழிகிற கூட்டம் இது. இந்தக் கூட்டம் புளிச்சாதம் / பிரியாணிக்காக கூடுகிற கூட்டம் அல்ல.  வஞ்சகர்களை ஆட்சியிலிருந்து நீக்குவதற்காக மக்கள் தாமாக கூடுகிற கூட்டம்.

சிறுவர்கள், சிறுமிகள், பெரியவர்கள், வயது முதிர்ந்தவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், ஏழை - எளியவர்கள், பணக்காரர்கள் - செல்வந்தர்கள் என அனைத்து தரப்பு மக்களும், கூட்டத்தில் முண்டியடித்து, ராகுல் காந்தியை கட்டித்தழுவி, தமது வாழ்வில் மாற்றம் ஏற்பட்டதாக உணர்ந்து, ஆனந்தக் கண்ணீர் வடித்து, வாழ்த்துச் சொல்லி நடைபயணத்தில் பங்கெடுக்கும் காட்சிகள் நம்மை ராகுல் காந்தியின் நடைபயணம் ஒவ்வொரு நொடிப்பொழுதும் வெற்றியடைந்து வருவதாகவே உணரவைக்கிறது.

மக்களின் இந்த மாற்றத்திற்கான எழுச்சி ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலை அச்சத்தின் குழிக்குள் தள்ளி செல்கிறது.  சங்கி அமைப்புகள், தங்களது வழக்கமான கீழ்த்தரமான செயல்களை செய்யத் துவங்கிவிட்டனர். ஆனால் அவர்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றனர்.

மதநல்லிணக்கம் அல்ல குறிக்கோள்:

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம், தெள்ளத்தெளிவாக நமக்கு புரிய வைப்பது என்னவென்றால், இது ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தினரை பாதுகாப்பதற்கான நடைபயணமாக இந்திய பொதுமக்கள் கருதவில்லை.  ராகுல் காந்தியின் நடைபயணம், அதைத் தமது நோக்கமாகக் கொண்டதாகவும் இல்லை.

இந்திய மக்களை, ஒருவருக்கு ஒருவர் எதிராக பிளவுபடுத்தி அரசியல் சூழ்ச்சி மேற்கொள்ளும் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலிடம் இருந்து, இந்திய மக்களை விடுவித்து, இந்திய மக்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கான நிகழ்வாக இந்திய பொதுமக்கள் ராகுல்காந்தியின் நடைபயணத்தை கருதுகின்றனர் என்பது கூடுகிற கூட்டம் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

ராகுல் காந்தி சொல்லும் கருத்துக்கள், ஜாதி பிரிவினை இல்லாத சமூகம், ஏழை செல்வந்தர் வேறுபாடற்ற சமூகம், அனைத்து தரப்பினருக்கும் வேலைவாய்ப்பில் உரிமை, தமது அடையாளங்களை நிலைநிறுத்திக்கொள்ள இனங்களுக்கு உரிமை, மத நல்லிணக்கம், பொருளாதார மேன்மை என மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களை கொண்டதாக இருப்பதால், நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ராகுல் காந்திக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக நடைபயணத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.

ராகுல் காந்தியின் பேச்சு:

மக்களிடம் மோடி பாஜக ஆர்எஸ்எஸ் அரசின் வரி விதிப்பு குறித்தும், பணம் செல்லாது என்பதால் ஏற்பட்ட துன்பம் குறித்தும், நோய்த்தொற்று ஏற்பட்ட பொழுது மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கியது குறித்தும், வேலைவாய்ப்பின்மை குறித்தும், குறிப்பிட்ட நண்பர்களுக்காக மட்டுமே ஒட்டுமொத்த இந்தியர்களையும் நசுக்குவது குறித்தும், பொருளாதார சீரழிவு குறித்தும் தெளிவான விதத்தில் ராகுல் காந்தி பேசி வருகிறார்.

நடை பயணத்தால் விளைவு:


பாஜக ஆர்எஸ்எஸ் ஆதரவு மனநிலை கொண்ட பலர், நடைபயணம் மேற் கொள்ளப்பட்ட சில நாட்களிலேயே ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்களை எடுத்துச் சொல்வதை நம்மால் உணர முடிகிறது.  போலியான செய்திகள் மூலம் நாம் ஏமாற்றப்படுகிறோம் என வெளிப்படையாக பல முன்னாள் சங்கிகள் கருத்துச் சொல்வது வியப்பை ஏற்படுத்துகிறது.  இந்தியர்களுக்கு எதிராக இந்தியர்கள் என்கிற நிலையை மேற்கொண்டு பொருளாதார சீரழிவில் இந்தியாவை தள்ளியுள்ளது இந்த ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சி என்பதை பொதுமக்கள் தெளிவாக உணரத் துவங்கிவிட்டனர்.

வெல்லட்டும் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம்.

கட்டுரை ஆசிரியர்: அ சூ பிரகாஷ் - HosurOnline.com


Share this Post:

தொடர்பான பதிவுகள்: