23,000 வடமாநில ஊழியர்களை விரட்டி விடுங்கள்

23,000 வடமாநில ஊழியர்களை விரட்டி விடுங்கள்

மொழிப்பிரச்னை மற்றும் குற்ற நிகழ்வுகளை தவிர்க்கும் வகையில் தமது ஊருக்குச் செல்லக் காத்திருக்கும்  சுமார் 23,000 வட மாநில தொடர்வண்டி ஊழியர்களுக்கு  நடுவன் அரசானது பணிமாறுதல் வழங்குவதுடன், அந்தக் வெற்று பணியிடங்களில் 37,000 தமிழர்களைப் பணியமர்த்த வேண்டும் எனவும் தொடர்வண்டி தொழிற் கூட்டமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தி மொழி கட்டாயம் மற்றும் நடுவன் அரசு நிறுவனங்களில் தொடர்பு மொழியாக இந்தி, ஆங்கிலம் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விரும்பத்தகாத பிரச்னைகள் தொடர்கின்றன.

இதில் பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் இதையொட்டிய பாதிப்புகளும், எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன.  

இதுபோன்ற தேவையற்ற சூழல்களைத் தவிர்க்க நடுவன் அரசு முன் வருவதுடன் அவற்றுக்கு நிரந்தர தீர்வு காண்பதும் பெரும் தேவையானது.

குறிப்பாக, கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்றுவிப்பது அவரவர் விருப்பத்தின்படிதான் இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றக்கூடாது. அதேபோல தொடர்வணி உள்ளிட்ட நடுவன் அரசு நிறுவனங்களில் நிலவும்  சில தேவையற்ற சூழல் பிற மாநிலத்தவர்களை விட தாய் மண்ணில் பணியாற்றும் தமிழர்களைத் தான்  வெகுவாகப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனலாம்.

தொடர்வண்டி துறையில் தமிழகத்தின் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள தெற்கு ரயில்வேயில் அதாவது குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளப் பகுதிகளில்  மொத்தம் 82,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 23,000 பேர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.  

தெற்கு ரயில்வேயில் மட்டும் தற்போதைய நிலவரப்படி   20,000  பணியிடங்கள் வெற்றாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி திங்கள் தேர்வு செய்யப்பட்ட வட மாநிலத்தவர்கள் 1,600 பேர் இன்னும் தெற்கு ரயில்வேயில் பணியில் சேரவில்லை.  இவர்கள் தங்களின் தாய்மொழியான இந்தியில் தேர்வெழுதி எளிதாக வெற்றி பெற்றவர்கள் என்பதும், ஆங்கில அறிவு கடுகளவும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அலுவலர்கள் நிலையில் உள்ளோருக்கு ஆங்கிலம் புரிகிறது. ஆனால் தமிழகத்தில் பிற நிலைகளில் தடர்வண்டி பணிகளில் பணியாற்றும் பெரும்பாலானோருக்கு  மொழி புரிதலின்றி குழப்பமும் , தொல்லைகளும் தொடர்கிறது.

அண்மையில், மதுரை கோட்டத்தில் திருமங்கலம் அருகே ஒரு ரயில் விபத்து ஏற்பட இருந்ததற்கு மொழி புரிதல் இல்லாததே அடிப்படை எனக் கண்டறியப்பட்டது.

அதாவது  அங்கு பணியிலிருந்த வட மாநிலத்தவருக்கு இந்தி தவிர தமிழையோ அல்லது ஆங்கிலத்தையோ சரிவரப் பயன்படுத்த இயலவில்லை.  

எனவே மொழியை பிரச்னைக்கு காரணம் என  அறிந்து, பணியிடங்களில்  ஊழியர்களின் தொடர்பு மொழி பற்றிய நிலைப்பாடு எடுப்பதில் நிர்வாகம் குழப்பிக் கொண்டது.  இதன் வெளிப்பாடுதான் இந்தியை கட்டாயமாக்க முயன்றது.

இதற்கு பலமான எதிர்ப்பு மற்றும் எச்சரிக்கைகள் எழுந்ததையடுத்து, தொடர்பு மொழி குறித்த உத்தரவைத் திரும்பப் பெற நேர்ந்தது.

மொழி, அது தொடர்பாக எழும் தொல்லைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் ரயில்வே தொழிற் கூட்டமைப்புகளும் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.  

இதுகுறித்து தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலர் மனோகரன் கூறியது: வட மாநிலங்களைச் சேர்ந்த  ரயில்வே ஊழியர்களில் சுமார்  9,000 பேர் தங்களது சொந்த மாநிலங்களில் உள்ள  பகுதிகளுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து  பணி  மாறுதலுக்காக விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர். பணியில் சேர்ந்து 5 ஆண்டு நிறைவு செய்தால் மட்டுமே மாறுதலுக்கு  விண்ணப்பிக்க முடியும் என்பது ரயில்வே விதி.

எனவே மேலும் பல  ஆயிரம் வட மாநில ரயில்வே ஊழியர்கள் மாறுதலுக்கு பதிய முடியாமல் இங்கிருந்தபடியே  வேறு வேலைகளுக்கு  முயற்சி செய்து வருகின்றனர்.  பதிவு மூப்பு அடிப்படையில் வடமாநிலங்களில் உள்ள அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும் ஆண்டுக்கு சுமார்  1,000 வட இந்தியர்களுக்கு இங்கிருந்து இட மாறுதல் கிடைக்கிறது . நிலைய அதிகாரிகள், டிக்கெட் பரிசோதகர்கள், என்ஜின் ஓட்டுநர்கள், கடைநிலை ஊழியர்கள் என பல பிரிவுகளுக்கு தொடர்ந்து இவர்கள் தேர்வாகி வருவதால் வட மாநிலத்தவர்கள் எண்ணிக்கை  படிப்படியாக தமிழக, கேரளப் பகுதிகளில் அதிகரித்துதான் வருகிறது.

மற்ற மாநிலங்களுக்கு இட மாறுதலுக்குப் பதிவு செய்ய 5 ஆண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும். சிறப்பு விலக்கு வழங்கி இங்குள்ள 23,000 வட மாநிலத்தவர்களுக்கு விருப்ப இடமாறுதலை அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு உடனே  வழங்க வேண்டும்.  இதனால் உருவாகும் 23,000 பணியிடங்கள் உள்பட காலியாக  உள்ள 20,000 பணியிடங்கள் சேர்த்து, தெற்கு ரயில்வேயில்  43,000 பணியிடங்களுக்கு தமிழக, கேரள பகுதியில் உள்ளவர்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.  குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த  37,000  இளைஞர்களை ரயில்வே துறை, தெற்கு ரயில்வேயில் பணியமர்த்த வேண்டும் என்றார் அவர். 

Share this Post:

தொடர்பான பதிவுகள்: