ராசராச சோழன் இந்துவா? இல்லையா?

ராசராச சோழன் இந்துவா?  இல்லையா?

இன்றைக்கு மக்களிடையே எத்தனையோ இடர்பாடுகள் இருக்க, அவற்றை எல்லாம் தம் மனதில் இருந்து மறந்து, பேசுபொருள் ஆகியிருப்பது திரைப்பட இயக்குனர் மணிமாறனின் கூற்றான "ராசராச சோழன் இந்து அல்ல" என்கிற கருத்து.

தமிழ்நாட்டில் மதங்கள்:

2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது சைவசித்தாந்தம். சைவ சித்தாந்தத்தைப் பின்பற்றியவர்கள், தமது கடவுளுக்கு என்று எந்த பெயரையும் சூட்டி வைத்திருக்கவில்லை என்கின்றன தமிழ்நாட்டின் வரலாற்று ஆர்வலர்களின் குறிப்புகள்.  சைவசித்தாந்ததுடன் தமிழ் மண்ணில் வாழ்ந்தது ஆசீவகம் மற்றும் வைணவம். இந்த மூன்று பிரிவுகள் இடையே கருத்து மோதல்கள் இருந்தாலும், பகையாக இருக்கவில்லை.

கிபி 2ம் நூற்றாண்டு வாக்கில் ஆரிய வேத பிராமணர்கள் தமிழ்நாட்டில் வந்தேறியதாக வரலாற்று குறிப்பு சொல்கிறது.  இவர்களின் மதம் வேதம் தழுவியதாக இருந்தது.  இவர்கள் தமிழ் மண்ணில் வந்தேறிய நாள் முதல், தங்களின் வேத மத வழிபாடுகளை தாங்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததாக குறிப்புகள் சொல்கின்றன.  தங்களின் சமற்கிருத மொழியை உயர்வானது என அன்றைய நாட்களிலேயே கூறி வந்துள்ளனர்.  

இது பிற இறை தத்துவம் கொண்டவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, 3-ம் நூற்றாண்டு இறுதிவரை மோதல் போக்கு பிற இறைத் தத்துவவியலாளர்களுக்கும் - பிராமணர்களுக்கும் இடையே நிலவி வந்துள்ளது.  வேத பிராமணர்களை சைவம் மற்றும் வைணவம் பின்பற்றுபவர்கள் தங்களது எதிரிகளாகவே கருதி வந்துள்ளனர்.

அதற்கு அடுத்ததாக கன்னடர்களின் களப்பிரர் ஆட்சி தமிழ் மண்ணில் ஏழாம் நூற்றாண்டு வரை கோலோச்சி இருந்துள்ளது.  களப்பிரர்ளால் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது சமணம்.  சமணமும் - பௌத்தமும் சமற்கிருத வேதம் சார்ந்த மறை தத்துவத்தில் தோன்றிய மாற்று தத்துவம் என்று சொன்னால் தவறாகாது.

களப்பிரர்கள் தங்களது தாய்மொழியான கன்னடத்தை காட்டிலும், தமிழ்நாட்டில் தாங்கள் ஊடுருவிய போது, முதலில் போற்றி வந்தது சமற்கிருத மொழியையே.  மதுரைப் பகுதியில் அவர்கள், தங்களது தலைநகரை அமைத்துக் கொண்டிருந்தனர் என்கிறது கிடைக்கப் பெறுகின்ற வரலாற்று ஆவணங்கள்.

களப்பிரர்கள் சமற்கிருதத்தைப் போற்றினாலும், தமிழ் மண்ணில் தமிழர்களிடையே தங்களது மறையை பரப்புவதற்கு, சமற்கிருதம் பயன்படவில்லை என்பதை அறிந்து, மதுரையில் தமிழ் கூட்டமைப்பு (சங்கம்) ஏற்படுத்தினர் (இது தமிழ் மொழி வளர்ச்சிக்கான கூட்டமைப்பு அல்ல...  இது சமணம் சார்ந்தது).

களப்பிரர்கள் பிராமணர்களை கடுமையாக நடத்தினர்.  பிராமணர்கள் தமிழ் மன்னர்களிடம் இருந்து பெற்ற நிலபுலன்களை பறித்துக் கொண்டனர் என்கின்றன சில வரலாற்று ஏடுகள். இந்த நிலை ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.

சைவ - வைணவ - வேத ஒற்றுமை:

இதற்கிடையே, சைவ மற்றும் வைணவ சித்தாந்தங்களை கொண்டவர்கள், வடநாட்டினரிடம், கருத்துக்களை கொடுத்து வாங்கி, அதன் விளைவாக, சைவர்களுக்கு சிவன், வைணவர்களின் விண்ணவன் = விண்ணு = விஷ்ணு தோன்றினர். தென்னகத்தின் மறை தத்துவங்கள், வடநாட்டின் பகுதிகளிலும், அவர்களது மறை தத்துவத்துடன் ஒன்றென கலந்து பரவி வந்தது.  எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டின் சிவன் வடநாட்டினரின் ருத்திரன் உடன் இணைந்தார்.  கௌமார்களின் முருகன், சிவனின் மகனாக வடிவெடுத்தார்.

சமணம் மற்றும் பௌத்த சித்தாந்த வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில், சைவர்கள் பக்திமார்க்கம் என்கிற ஒரு அமைப்பை 7ம் நூற்றாண்டு வாக்கில்் தோற்றுவித்து, தமிழர்களின் பெண் காவல் தெய்வங்களை, தங்களது கடவுளுக்கு மணமுடித்து, தங்களது சித்தாந்தத்தை மக்களின் சிந்தனைக்கும் வாழ்வியலுக்கு ஏற்ப மாற்றி அமைத்தனர்.  அதனால் சைவ சித்தாந்தத்தின் மீது மக்களுக்கு ஈடுபாடு பெருகியது.  இதை உணர்ந்த,  வைணவர்களும் பக்தி மார்க்கத்துடன் இணைந்து, தங்களது மறைபரப்பு செயல்களை மேற்கொண்டனர். களப்பிரர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட வேத பிராமணர்கள், இவர்களுடன் தங்களையும் இணைத்துக் கொண்டாலும் தங்களுக்கு என ஒரு இடத்தை தக்க வைப்பதில் முனைப்புடன் தொடர்ந்து செயல்பட்டனர்.  

ராசராசசோழன்:

அருண்மொழிவர்மன் என்கின்ற முதலாம் ராசராசசோழன் ஆட்சி செய்தது கிபி 985 முதல் கிபி 1014 வரை.  இந்த ஊழியில், தமிழ் மண்ணைப் பொறுத்தவரை,  சைவ - வைணவ - வேத ஒற்றுமை நிலவியதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சைவ - வைணவ - வேத மறையைப் பின்பற்றுபவர்களுக்கு இடையே, பழக்கவழக்கங்களில் பெரிய அளவிலான வேறுபாடு இல்லை.  தமிழகத்தின் பொதுமக்களைப் பொறுத்தவரை, கடவுளைத் தொழுவதில் அவர்கள் வேற்றுமையை பார்க்கவில்லை.  அவர்கள் எல்லா மறை தத்துவ போதனைகளையும் ஏற்றுக் கொண்டவர்களாகவே வாழ்ந்துவந்தனர்.  அதனால் கிருத்துவ மிஷினரிகள், தமிழ்நாட்டில் நிலவிய வழிபாட்டு முறையை, இந்து என்கிற ஒற்றை பெயர்கொண்டு அழைத்ததில் வியப்பேதுமில்லை.

இதனடிப்படையில் பார்த்தால், முதலாம் ராசராச சோழனை, இந்து என்று குறிப்பிடுவதில் எவ்வித குற்றமும் இல்லை.

மாற்றுக்கருத்து:

யூதர்களுக்கும், கிருத்துவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும், கடவுள் யார் என்றால், ஆபிரகாமின் கடவுள் என்று பொதுவான ஒரு கடவுளை கொண்டதாக இருக்கிறது.

சில இடங்களில், இந்த மூன்று மதங்களையும் குறிப்பிடும் பொழுது  Abrahamic Religions, அதாவது ஆபிரகாமின் கடவுளைப் பொதுவாக கொண்ட மதப் பிரிவுகள் என்று குறிப்பிடுவார்கள்.

மூன்று பிரிவுகளும் ஒரே கடவுளை கொண்டவை என்றாலும், மூன்றும் வெவ்வேறு இனங்களால் போற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டன.  அதனால் அவற்றின் தனித்தன்மை வெளிப்படையாக விளங்குகிறது. மூன்றின் கடவுள் ஒன்று என்றாலும், மூன்றும் தனித்தனியானவை.

மேற்சொன்ன கருத்தை ஒப்பிட்டு சைவ சமண வேத சமயங்களை நோக்கினால், அவை ஒற்றுமையுடன் மக்களால் பின்பற்றப்பட்டாலும், மூன்றும் தனித்தனியான சமயங்கள் தான்.

இந்தப் பார்வையில் ராசராச சோழனை நிறுத்திப் பார்த்தால், ராசராச சோழன் சைவ சித்தாந்தத்தை மட்டுமே பின்பற்றியவர்.  ஆகவே அவரை சைவர் என்று குறிப்பிடுவதே முறையாக இருக்கும்.


இந்து என்கிற பொதுப் பெயர் எங்கிருந்து வந்தது?

பிரிட்டிஷ் சட்ட வல்லுநரான சர் வில்லியம் ஜோன்ஸ், சட்ட வல்லுநராக மட்டுமல்லாது, சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் லண்டனில் பணியாற்றி வந்துள்ளார்.

அவர் லத்தின், கிரேக்கம், இப்ரு, அரபிக் மற்றும் பெர்சியன் ஆகிய மொழிகளில் கற்றுத் தேர்ந்தவர்.  அவர் சீனம் உட்பட 28 மொழிகளை நன்கு அறிந்தவர்.

1783ம் ஆண்டு, அப்போது இந்தியாவின் தலைமை நீதிமன்றமாக கொல்கத்தா நீதிமன்றம் விளங்கியது, அதன் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.  அவர் 1786ஆம் ஆண்டு ஆசிய கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்த பொழுது, சமற்கிருதத்திற்கும், லத்தீன் கிரேக்க மொழிகளுக்கு இடையேயான ஒற்றுமை குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டார்.  அவர்தான், பிராமணர்கள், ஆரிய வந்தேறிகள் என்கிற கூற்றை முதன் முதலில் முன்மொழிந்தவர்.  அதை இன்றளவும் "சர் வில்லியம் ஜோன்ஸ் ஆய்வறிக்கை - Sir William Jones Thesis" என்று போற்றி புகழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவில் வாழுகின்ற இசுலாமியர்களுக்கும், கிருத்தவர் அல்லாத பிற இந்திய இனத்தவருக்கும் சொத்துக்களைப் பிரித்துக் கொள்வதில் முறையான சட்டங்கள் இல்லை என்பதை உணர்ந்து, 1792 -ல், முகமதியர் வாரிசு சட்டம் இயற்றினார்.  தொடர்ந்து 1794 இல், கிறித்தவர் - இசுலாமியர் அல்லாத பிற இந்திய இனங்கள் அனைத்திற்கும் ஒன்றாக "இந்து சட்டம்" வெளியிட்டார்.  இந்த இந்து சட்டம், வேத பிராமணர்களின் சமற்கிருத தர்ம (மனு தர்மம்) கொள்கைகளின் அடிப்படையில் அமையப்பெற்றதாகும்.  ஏனெனில், வெள்ளைக்காரர்களுடன் பகையை பாராட்டாது நட்பை பாராட்டிய சமூகமாக பிராமண சமூகம் திகழ்ந்து வந்தது.

இந்த சட்ட வரைவுகள், ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு, இந்திய மக்களை இந்து என்கிற ஒற்றைப் பார்வையில் சட்டத்தின்முன் பார்ப்பதற்கு ஏதுவாக இருந்தது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: