திருமணம் தொடர்பான குற்றங்கள் (sec 493 to 498A)

திருமணம் தொடர்பான குற்றங்கள் (sec 493 to 498A)

IPCயின் தலைப்புப் பகுப்பு (Chapter) 20 திருமணம் தொடர்பான குற்றங்களைக் கையாள்கிறது. இந்த குற்றங்கள் அனைத்தும் திருமண நிறுவகம் என்ற வரையறைக்குள் வருகிறது. தலைப்புப் பகுப்பு 20-A-ல் ஒரு பிரிவு மட்டுமே s.498A கணவர் அல்லது உறவினர்கள் தங்களது வரதட்சணை பொருள் பேராசை கொண்டு ஈட்ட, மனைவியை மற்றும் அவரது பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் கொடுமையை கையாள்வதில் IPC -யில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது (Second amendment act,1983).

இந்த தலைப்பு வகுப்பின் கீழ் பின்வரும் தலையாய குற்றங்கள் உள்ளன:

1. போலியான அல்லது செல்லாத திருமணம் (section 493 and 496).
2. பலதார திருமணம் (section 494 and 495).
3. கள்ள உறவு (section 497)
4. குற்றவியல் கைவிட்டு விட்டுப் போகுதல் (Criminal Elopement) - விருப்பத்திற்கு மாறான உறவு வைத்தல் (seduction)  (section498)
5. கணவர் அல்லது கணவரின் உறவினர்களால் கொடுமை (section 498A)

பிரிவு 493- சட்டப்படியான திருமணத்தின் நம்பிக்கையைத் தூண்டி ஒருவருடன் சேர்ந்து வாழுதல்.

தன்னுடன் சட்டப்படியான திருமணம் செய்து கொள்ளாத எந்தவொரு பெண்ணும் தன்னை சட்டப்படியாக திருமணம் செய்து கொண்டதாக நம்புவதற்கும், அந்த நம்பிக்கையில் அவருடன் சேர்ந்து வாழ்தல் அல்லது உடலுறவு கொள்வதற்கும் வஞ்சகத்தின் மூலம் ஈடுபடுதல் குற்றமாகும். குற்ற செயலில் ஈடுபட்டவருக்கு பத்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறை தண்டனையுடன், தண்டத் தொகையும் விதிக்கப்படுவார். இது பிடியாணையின்றிக் கைதுசெய்ய இயலாத குற்றம் (Non-Cognizable) மற்றும் பிணையில் வெளிவர முடியாதது.

பிரிவு 496- திருமண சடங்கு சட்டப்படியான திருமணம் முறையில் இல்லாமல் மோசடியாக நடந்தது

நேர்மையற்ற முறையில் அல்லது மோசடி நோக்கத்துடன் திருமண சடங்கை நிறைவேற்றியதாகவும், அவர் சட்டப்படியான திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை அறிந்தால், ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறை தண்டனையுடன் தந்த தொகையும் விதிக்கப்படும். இது பிடியாணையின்றிக் கைதுசெய்ய இயலாத குற்றம் (Non-Cognizable) மற்றும் பிணையில் வெளிவர முடியாதது.

மேற் சொன்ன இரண்டு பிரிவுகளிலும், பெண், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்தவர் தன்னை சட்டப்படியாக திருமணம் செய்து கொண்டதாக முழுமையாக ஏற்றுக் கொண்ட நிலையில், ஆண் முழுமையாக தான் சேர்ந்து வாழும் பெண்ணை ஏமாற்றுகிறோம் என்பதை அறிந்திருக்கும் நிலையில் இருக்கிறார்.

பிரிவு 494 கணவர் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் பொழுது மீண்டும் திருமணம் செய்தல் - இருதுணை மணம் (Bigamy)

கணவர் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் பொழுது, வேறு ஒருவரை திருமணம் செய்தால், அத்தகைய திருமணம் செல்லாததாக கருதப்படும். ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய அளவிற்கு சிறைத்தண்டனையும் கண்டத் தொகையும் விதிக்கப்படும்.

சட்ட விலக்கு: முதல் திருமணம் செல்லாது என்று நீதிமன்றத்தால் கருதப்படும் வரையறைக்குள்ள திருமணம் முடித்தவர்களுக்கு இது பொருந்தாது. கணவர் அல்லது மனைவி வாழும்போது, கணவர் வேறு ஒருவரை மணந்து, ஏழு ஆண்டுகளுக்கு தொடர்ந்து மனைவி இருக்கும் இடம் அறியாமல் இருந்திருந்தால், அல்லது தொடர்பில் இல்லாமல் இருந்திருந்தால், அல்லது உயிருடன் இருக்கிறார் என்பதற்கான தடயங்கள் இல்லாமல் இருந்திருந்தால், அல்லது மனைவிக்கு தகவல் தெரிந்தும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார் என்றால் இந்த பிரிவு பொருந்தாது.

பிரிவு 495 அடுத்தடுத்த திருமண ஒப்பந்தம் செய்யப்பட்ட நபரிடமிருந்து முந்தைய திருமணத்தை மறைப்பது குற்றம்.

அடிப்படையாக கருத்தில் கொள்ளத்தக்கவை:

1. முதலாவது திருமணம் தொடர்கின்ற நிலை.
2. இரண்டாவது திருமணம் சட்டப்படி நடந்து இருக்க வேண்டும்.
3. முதல் கணவர் அல்லது மனைவி உயிருடன் இருப்பதால் இரண்டாவது திருமணம் செல்லாது.
4. ஏற்கனவே திருமணம் ஆனதை மறைப்பது அல்லது சொல்லாமல் விடுவது.

ஏற்கனவே திருமணம் ஆனதை மறைப்பது அல்லது சொல்லாமல் விடுவது என்பது, முதலாவது திருமணம் உண்மை என்கிற நிலையில், 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கத்தக்க சிறை தண்டனையுடன் தண்டத் தொகையும் தண்டனையாக வழங்கப்படும்.

பிரிவு 497 - கள்ள உறவு

கள்ள உறவு என்பது திருமணமான நபர் தனது வாழ்க்கைத் துணையைத் தவிர வேறு ஒருவருடன் மேற்கொள்ளும் உடலுறவு ஆகும். சட்டத்தின் கீழ் கள்ள உறவு என்பது ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ளாத இரண்டு நபர்களுக்கிடையேயான தொடர்புடைய உடல் தொடர்பு என்று வரையறுக்கப்படுகிறது. கள்ள உறவு என்பது ஏமாற்றுதல் அல்லது திருமணத்திற்கு புறம்பான செயல் என்றும் அழைக்கப்படுகிறது. இது உறுதியான ஒரு திருமண உறவின் அடிப்படை மீறல் குற்றமாகும். மேலும் இது கிட்டத்தட்ட அனைத்து மதங்களாலும் குற்றமாக கருதப்படுகிறது.

பிரிவு 497 இன் படி, மற்றொரு ஆணின் மனைவி என்று தனக்குத் தெரிந்த அல்லது நம்புவதற்கு ஏற்புடைய ஒரு நபருடன் உடலுறவு கொண்ட எவரும், அந்த பெண்ணின் கணவரின் ஒப்புதல் இல்லாமல், அத்தகைய உடலுறவு பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு ஈடானது அல்ல. இது கள்ள உறவு குற்றத்தின் கீழ் குற்றவாளி. இத்தகைய குற்றம் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறை தண்டனை அல்லது தண்டத்தொகை அல்லது இரண்டும் விதிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், குற்றத்தில் பங்காளியாக செயல்பட்ட பெண் தண்டிக்கப்பட மாட்டார்.

இந்தப் பிரிவின் அடிப்படை:

1. திருமணமான பெண்ணுக்கும் அவரது கணவர் அல்லாத ஆணுக்கும் இடையிலான உடலுறவு.
2. பெண் திருமணம் செய்திருக்க வேண்டும். அவர் மற்றொரு ஆணின் மனைவியாக இருந்திருக்க வேண்டும்.  கணவர் அல்லாத வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வேண்டும்.
3. அத்தகைய உடலுறவு என்பது பெண்ணின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும். அதாவது பாலியல் வன்கொடுமையாக இருக்கக் கூடாது.
4. திருமணமான பெண்ணுடன் உடலுறவு கொள்வது அவரது கணவரின் ஒப்புதல் அல்லது இணக்கம் இல்லாமல் நடக்க வேண்டும்.

பிரிவு 498 திருமணமான ஒரு பெண்ணை குற்றவியல் நோக்கத்துடன் தூண்டுதல் அல்லது தூக்கிச்/கடத்தி செல்வது அல்லது தடுத்து/அடைத்து வைத்தல்

வேறு எந்த ஆணின் மனைவியாக இருக்கும் பெண்ணை, அவர் ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணம் ஆனவர் என்பதை நன்கறிந்தும், அந்த நபரிடமிருந்து, அல்லது அந்த நபரின் சார்பாக அவளைப் பராமரிக்கும் எந்தவொரு நபரிடமிருந்தும், அவர் எந்தவொரு நபருடனும் சட்டத்திற்கு எதிராக உடலுறவு கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், அல்லது அத்தகைய நோக்கம் கொண்டு எந்தவொரு பெண்ணையும் மறைத்து அல்லது தடுத்து வைத்தால், இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய அளவிற்கு சிறைத்தண்டனை அல்லது  தண்டத்தொகை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இந்தப் பிரிவின் அடிப்படை:

1. திருமணமான பெண்ணை கடத்துதல் அல்லது கவர்ந்து இழுத்தல்.
2. திருமணமான பெண்ணாக இருக்க வேண்டும்.
3. திருமணமான பெண்ணை கவர்ந்திழுக்கும் அல்லது எடுத்துச் செல்லும் நபர், அவள் வேறொரு ஆணின் மனைவி என்பதை அறிந்திருக்க வேண்டும்.
4. கணவர் அல்லது அவரது கணவர் சார்பாக அவளை கவனித்துக்கொண்ட நபரின் கட்டுப்பாட்டிலிருந்து தூக்கிச் செல்லப்படுகிறார்.
5. சட்டத்திற்கு எதிராக உடலுறவு கொள்ளும் நோக்கம்.
6. அத்தகைய எந்தவொரு பெண்ணையும் மறைத்து வைத்தல் அல்லது தடுத்து வைத்தல்.

பிரிவு 498 ஏ-கணவர் அல்லது கணவரின் உறவினர்களால் கொடுமை:

ஒரு பெண்ணின் கணவர் அல்லது கணவரின் உறவினராகவோ இருக்கும் எவரும், அத்தகைய பெண்ணை கொடுமைக்கு ஆளாக்கினால், மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் தண்டத் தொகையும் விதிக்கப்படும்.

இந்தப் பிரிவின் கீழ் கொடுமை என்பது பின்வருமாறு:

i.  தற்கொலைக்கு தூண்டக்கூடிய அல்லது பெண் கொடூரமாக காயம் ஏற்படுத்திக் கொள்ளத் தக்க அல்லது உடல் மற்றும் மனம் அடிப்படையிலான பாதிப்பை ஏற்படுத்த தக்க அல்லது  உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய செயல்களை கணவர் அல்லது கணவரது வீட்டார் வேண்டுமென்றே மேற்கொள்ளுதல்  அல்லது
     
ii. கொடுமைப்படுத்துதல், அத்தகைய கொடுமைப்படுத்துதல் குறிப்பாக சட்டத்திற்கு எதிரான பொருளுதவி வேண்டுதல், செல்வங்களைக் கொண்டு வர கட்டாயப்படுத்துதல், அவ்வாறு இயலாத சூழலில் அவரை வஞ்சித்தல்.

கொடுமைக்கு எதிராக ஒரு பெண்ணின் நலனைப் பாதுகாப்பதற்காக இந்திய தண்டனைச் சட்டம், 1860, 1983 இல் திருத்தப்பட்டது மற்றும் S.498A and S.304B சேர்க்கப்பட்டது.

இது முறையே கணவர் மற்றும் அவரது உறவினர்களால் ஒரு பெண்ணுக்கு "திருமணக் கொடுமை" மற்றும் "வரதட்சணை மரணம்" ஆகியவற்றைக் கையாள்கிறது. பிரிவு 113 பி இந்திய சாட்சியச் சட்டம், 1872 இல் சேர்க்கப்பட்டது. அதில் பெண் இறப்பதற்கு சற்று முன்பு வரதட்சணை கோரியது தொடர்பாக ஒருவரால் கொடுமை அல்லது துன்புறுத்தலுக்கு ஆளானதாக உறுதி செய்யப்பட்டால், அந்த பெண்ணை துன்புறுத்திய நபர் பெண்ணின் மரணத்திற்கு அடிப்படையாக இருந்தார் என்று கருதப்படும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: