இந்திய திருமண சட்டங்களின்படி, பொதுவாக 33 உறவு முறைகள் திருமணத்திற்கு பொருந்தாத உறவு முறைகள் என தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய சிறப்பு திருமண சட்டத்தின் படி மேற் சொன்ன 33 உறவு முறைகள் மட்டுமல்லாது மேற்கொண்டு நான்கு திருமண உறவு முறைகளையும் குறிப்பிடுகிறது. அதன்படி மொத்தம் 37 உறவுமுறைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்திய இந்து திருமண சட்டம், பிராமணர்களின் 4 வேத (4 Vedas) போதனைகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில், சனாதன தர்மம், மனு சுமிர்த்தி மற்றும் Yajnavalkya சுமிர்த்தி அடிப்படையிலான கருத்தியல்களும் இந்திய திருமண சட்டங்களில் உள்ளடங்கியவையாக உள்ளது.
பலமுறை நீதியரசர்களும் தங்களது தீர்ப்புகளில் நான்கு வேதங்கள் மற்றும் இந்து தர்மங்களை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்குகின்றனர்.
பிராமண வேத இந்து தர்மத்தின் படி கீழ்காணும் உறவு முறைகள் திருமணத்திற்கு ஏற்புடையவை அல்ல:
ஆண்களுக்கான ஏற்புடையதல்லாத பெண் உறவு முறைகள்:
1. தனக்கு வாரிசு என்ற முறையில் வரும் பெண்
2. தனது தந்தையின் மனைவி
3. தனது தாத்தாவின் மனைவி
4. தனது தாத்தாவின் தந்தையின் மனைவி
5. உடன் பிறந்தவரின் மனைவி
6. தந்தையின் உடன் பிறந்தவரின் மனைவி
7. தனது அம்மாவுடன் பிறந்தவரின் மனைவி
8. தனது தாத்தாவின் உடன் பிறந்தவரின் மனைவி
9. தனது பாட்டியின் உடன் பிறந்தவரின் மனைவி
10. உடன் பிறந்தவள்
11. உடன்பிறந்த அண்ணன்/தம்பி மகள்
12. உடன்பிறந்தவளின் மகள்
13. தந்தையின் உடன் பிறந்தவள்
14. தாயின் உடன்பிறந்தவள்
15. தந்தையின் உடன் பிறந்தவளின் மகள்
16. தந்தையின் உடன் பிறந்தவரின் மகள்
17. தாயின் உடன் பிறந்தவரின் மகள்
18. தாயின் பிறந்தவளின் மகள்
பெண்களுக்கான ஏற்புடையதல்லாத ஆண் உறவு முறைகள்:
1. தந்தை
2. தந்தையின் தந்தை
3. அம்மாவின் கணவர்
4. அம்மாவின் அம்மாவின் கணவர்
5. உடன் பிறந்தவர்
6. தந்தையுடன் பிறந்தவர்
7. தாயுடன் பிறந்தவர்
8. உடன் பிறந்தவனின் மகன்
9. உடன் பிறந்தவளின் மகன்
10. தந்தையின் உடன் பிறந்தவரின் மகன்
11. தந்தையின் உடன் பிறந்தவளின் மகன்
12. தாயின் உடன் பிறந்தவரின் மகன்
13. தாயின் உடன் பிறந்தவளின் மகன்
இது தவிர,
1. முறையற்ற (Illegitimate), தனது குருதி உறவுமுறைக்குள் பிறந்தவர்களும், மேற் சொன்ன உறவு முறை கோட்பாட்டில் வந்தால், அது தடை செய்யப்பட்ட உறவு முறையாக கருதப்படுகிறது.
2. வளர்ப்பு முறை (Adoption) உறவு முறைகளும், மேற் சொன்ன உறவுமுறை கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. அவையும் தடை செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.
இவற்றை வட மாநிலங்களில் சபிண்டா என்று வடமொழியில் அழைக்கின்றனர். பிண்டா என்றால், உடல் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் ஒன்றானவர் என Vijnaneswara-வின்
சுமிர்த்தி வரையறுக்கிறது. சபிண்டா (Sa+Pinda) முறைப்படி, தந்தை வழியில் ஐந்து தலைமுறைகளும், தாய் வழியில் மூன்று தலைமுறைகளும் குருதி உறவுகள் என்று வரையறுக்கிறது.
வடநாடுகளில் பொதுவாக கருதப்படும் இந்த நடைமுறைகள், தென்னிந்தியாவில் சட்டப்படியானதாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. தென்னிந்தியாவின் மதராஸ் சட்ட பள்ளி (Madras Law School) கூற்றுப்படி, கீழ்காணும் உறவு முறைகள் மட்டுமே திருமணத்திற்கு ஏற்புடையவை அல்ல:
1. மகனின் மகள்
2. மகளின் மகள்
3. உடன் பிறந்தவள்
4. தந்தையின் உடன் பிறந்தவள்
5. உடன்பிறந்தவனின் மகள்
6. உடன் பிறந்தவளின் மகள் (தாய்மாமன் திருமணமும் தமிழ்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது)
இந்து திருமண சட்டம் பொதுவானதாக கருதப்பட்டாலும், சமூகங்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப பல வகையிலும், பல்வேறு விதமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக:
எடுத்துக்காட்டு 1:
பாலுசாமி ரெட்டியார் Minor By Guardian vs பாலகிருஷ்ண ரெட்டியார் Minor மற்றும் பிறர் on 23 April, 1956 வழக்கு மற்றும் அதன் தீர்ப்பு.
இந்த வழக்கு அடிப்படையில் சொத்து வாரிசுரிமை தொடர்பானது. வழக்காடியவர்கள், வாரிசுரிமைக்கு முறையற்ற பிறந்தவர்களுக்கு உரிமை அல்ல என்கிற வகையில், செய்து கொண்ட திருமணம் செல்லாது என நீதிமன்றத்தில் வழக்காடினர்.
இந்த வழக்கில், ராமசாமி ரெட்டியார், 4 மனைவிகளுடன் வாழ்ந்து இறந்து போகிறார். அவர் விட்டுச் சென்ற சொத்திற்கு வாரிசாக நான்கு மனைவிகளும் அவர்களின் வாரிசுகளும் உரிமை கொண்டாடும் நிலையில், முதல் மூன்று மனைவி மற்றும் அவரது வாரிசுகள் மட்டுமே உண்மையான வாரிசுகள் என்றும், நாலாவது மனைவி மற்றும் அவரது வாரிசுகள் சொத்தில் பங்கு பெற தகுதியற்றவர்கள் என வழக்காடுகின்றனர்.
இந்த வழக்கில், திருநெல்வேலியில் ரெட்டியார் சமூகத்தில் இருந்த சமூக பழக்கவழக்கங்களை தனக்கு வாய்ப்பாக நான்காவது மனைவி எடுத்து வைக்கிறார். அதாவது, ஒருவர் தனது மகளின் மகளை திருமணம் முடித்துக் கொள்வது திருநெல்வேலி ரெட்டியார் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை என்பதற்கு சான்றுகள் எடுத்து வைக்கப்பட்டன.
மேற் சொன்ன சமூக பழக்க வழக்கத்தை, தங்களது சமூகத்தில் இருந்தது என்பதற்கு சான்றாக "Castes and Tribes of Southern India" by E. Thurston, Volume III, 1909 -ன் பக்கங்கள் 239 மற்றும் 240 மேற்கோள் காட்டப்பட்டது.
அதில் முனைவர் ஷார்ட்ட், திருநெல்வேலி ரெட்டியார் சமூகத்தினர் சுமார 16 அல்லது 20 வயதுடைய பெண்ணிற்கு ஐந்து அல்லது ஆறு வயதுடைய சிறுவனை மணம் முடித்து வைப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்படி திருமணம் ஆன பெண், அந்த சிறுவனுடன் குடும்பம் நடத்தாமல், அவன் சார்ந்திருக்கும் குடும்பத்தின் ஆணுடன், குறிப்பாக சிறுவனின் தாய்மாமன் அல்லது தந்தை அல்லது தாத்தா முறை கொண்ட அவருடன் குடும்பம் நடத்தி பிள்ளைகளையும் பெற்றெடுக்கிறாள் என்று குறிப்பிட்டுள்ளார். அத்தகைய குழந்தைகள், சிறுவனை தனது தந்தையாக எடுத்துக் கொள்கின்றனர்.
சிறுவன் தனது திருமண வயதை எட்டியவுடன், தனது மனைவி, வயது முதிர்ந்தவளாகவும், ஏற்கனவே குழந்தைகளுக்கு தாயாகவும் இருப்பதை கருதி, அவனும் இதே போன்று மற்றொரு சிறுவனின் மனைவியுடன் குடும்பம் நடத்தி பிழை பெற்றுக் கொள்கிறான்.
மேற்ச்சொன்ன சான்றுகளை கருத்தில் கொண்ட நீதிமன்றம், முனைவர் ஷார்ட்ட் எப்பொழுது, எந்த ஊரில், எந்த குடும்பத்தில், எத்தனை குடும்பங்களில் இவை பின்பற்றப்பட்டன என்று குறிப்பிடாததால், இதை இந்த வழக்கிற்கு ஒரு சான்றாக ஏற்றுக் கொள்ள இயலாது என முடிவெடுத்தனர்.
இந்த நடைமுறைகளை, நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தும் விதமாக, 70 வயது உடைய காமாக்கம்மாள் என்பவர் தனது தாத்தாவிற்கு மணமுடிக்கப்பட்டதை நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினார். குறுக்கு வினவலின் போது, இத்தகைய நடைமுறைகள் 70 குடும்பங்கள் கொண்ட தனது ஊரில், தனது குடும்பத்தில் மட்டுமே நடந்துள்ளது என்றும், அருகில் உள்ள ஊர்களில், இத்தகைய நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று உள்ளது என்றும் கூறினார். ஆகவே நீதிமன்றம், இந்த பழக்கவழக்கங்கள் பொதுவானது அல்ல என்கிற முடிவிற்கு வந்தது.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், பொதுவானதாக அல்லாத, ஒழுக்கத்திற்கு மாற்றானதாக, நிலவும் எந்த ஒரு பழக்க வழக்கமும் சட்டப்படி ஏற்றுக்கொள்ள தக்கதாக முடியாது என தீர்ப்பளித்து, ராமசாமி ரெட்டியாரின் 4வது திருமணம் செல்லாது என தீர்ப்பளித்தது.
எடுத்துக்காட்டில் 2:
பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தில் சகுந்தலா தேவி vs அமர்நாத் செப்டம்பர் 30, 1981 வழக்கில்
அமர்நாத், சகுந்தலா தேவி தனக்கு தாய் மாமன் மகள் என்றும், அது இந்து திருமண சட்டம் நடைமுறைகளுக்கு எதிராக உள்ளது என்றும், ஆகவே திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடுத்தார்.
வழக்கை வினைவிய நீதிமன்றம் Jhang மாவட்டத்தின் குடியினர், குறிப்பாக உழவு சார்ந்த பணிகளில் ஈடுபடுபவர்கள், இந்துக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டாலும், அவர்களின் பழக்க வழக்கத்தில் தாய்மாமன் மகன் அல்லது மகளை திருமணம் முடிக்கும் பழக்கம் தோன்றுதொட்டு இருந்து வந்தது என்பதை அறிந்து கொண்டது. இத்தகைய பழக்க வழக்கங்கள் மேல் சாதி இந்துக்களிடம் அதே மாவட்டத்தில் இல்லாத நிலையிலும், குறிப்பிட்ட பிரிவினர் இடையே தொன்று தொட்டு இருக்கும் பழக்கம், ஏற்புடையது என நீதிமன்றம் கருதியது.
மேலும், திருமணம் 1973ல் நடைபெற்ற நிலையில், வழக்கை தொடுத்த அமர்நாத் 5 ஆண்டுகள் கழித்து 1978ல் தனக்கு நடைபெற்ற திருமணம் செல்லாது என நீதிமன்றத்தை நாடியுள்ளதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டது. மாமன் மகள் என்று தெரிந்தே மணமுடித்த ஒருவர், உடனடியாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், மனைவியின் உடல்நலம் குறித்த அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கை தொடுத்துள்ளார் என்று நீதிமன்றம் கருதி, வழக்கை தள்ளுபடி செய்து, தொன்று தொட்டு நடைபெறும் திருமண நடைமுறைகள், செல்லுபடி ஆகும் எனத் தீர்ப்பளித்தது.
முடிவுரை:
இந்து திருமண சட்டம், சில உறவு முறைகளை திருமணத்திற்கு ஏற்புடையது அல்ல என வரையறை படுத்தி இருந்தாலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் வாழும் மக்கள், அல்லது சில குறிப்பிட்ட பிரிவு மக்கள், தொன்று தொட்டு பின்பற்றும் நடைமுறைகள் திருமண உறவு முறைகளுக்கு ஏற்புடையது. அதே வேளையில், இத்தகைய பழக்கவழக்கங்கள், வரலாற்று எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.