இந்திய நாடு என்பது பல்வேறு சடங்கு முறைகளையும், பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கிய நாடு. இந்தியாவில் பெரும்பாலும் சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, ஒவ்வொரு சமூக பிரிவு மக்களின் பழக்க வழக்கங்களை பொறுத்து சட்டத்தின் பார்வையும் அதன் செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது.
வெவ்வேறு மொழி, வெவ்வேறு இனம், வெவ்வேறு பழக்க வழக்கங்களையும், வெவ்வேறு வழிபாட்டு முறைகளையும், வெவ்வேறு சடங்கு வழிமுறைகளையும் என இந்தியாவின் ஒவ்வொரு பகுதி மக்களும் வெவ்வேறாக அடையாளங்களை கொண்டிருந்தாலும், ஆங்கிலேயர்கள், மதம் என்கிற அடிப்படையில், கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், பௌத்தர், ஜெயினர் ஆகியோரை தவிர்த்து மற்ற அனைவரையும் "இந்து" க்கள் என்கிற ஒற்றை அடையாளத்தின் கீழ் அடையாளப்படுத்தினர்.
ஆங்கிலேயர்களின் இந்த அடையாளப்படுத்திய செயல், இன்றளவும் இந்திய அரசியலிலும், சட்டங்கள் வகுப்பதிலும் பெருமளவு உதவி புரிந்து வருகிறது என்று சொன்னால் மிகை ஆகாது.
இந்திய நாடு தன்னாட்சி பெறுவதற்கு முன், 1920 ஆம் ஆண்டு வாக்கிலேயே, இந்திய மக்களுக்கான பொதுவான ஒரு உரிமையியல் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
1955 - 1956 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில், கிறிஸ்தவர் இஸ்லாமியர் அல்லாத பிற வழிபாட்டு முறைகள் பின்பற்றும் அனைவரையும் இந்துக்கள் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் வகுத்து, நான்கு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்து திருமண சட்டம் 1955, இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் 1956, இந்து வாரிசுரிமை சட்டம் 1956 மற்றும் இந்து குழந்தைகள் மற்றும் பாதுகாவலர் சட்டம், 1956 என நான்கு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்து திருமண சட்டம் 1955 பல சிறப்புகளை கொண்டிருந்தாலும், பெண்களுக்கு எதிரான திருமண வன்முறைகளை எதிர்கொள்ள போதுமானதாக இல்லை. இதனால் இந்து திருமண சட்டம் 1955 பல்வேறு சீர்திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. குறிப்பாக, 1976 -ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறை, திருமணம் முறிவிற்கு வழிவகை செய்யும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டது.
திருமண வன்முறை மற்றும் கொடுமை:
திருமணத்தில் வன்முறை என்பது, எளிதாக அடையாளம் காண தக்கதாக இருக்கும். ஆனால் கொடுமை என்பதை வரையறுப்பது எளிதானதல்ல. 19 ஆம் நூற்றாண்டில், கொடுமை என்பதை உடல் ரீதியானதாக மட்டுமே நீதிமன்றங்கள் கருதினர்.
கொடுமை என்பதை எந்த வரையறைக்குள்ளும் கொண்டுவர இயலாது என ஸகல் vs திருப்பாதி வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து கூறியது. மேலும், கொடுமைகளை பட்டியலிட முயன்றால் அது ஒரு பொழுதும் நிறைவு பெற இயலாது எனவும் கூறியது.
பொதுவாக கொடுமை என்பதை, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, உடல் அடிப்படையிலான துன்புறுத்தல், மன ரீதியான துன்புறுத்தல் மற்றும் பாலியல் உறவு அடிப்படையிலான துன்புறுத்தல் எனலாம்.
ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு விதமான பழக்கவழக்கங்களை, சொல்லாடல்களை, சூழ்நிலைகளை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை கொண்டிருப்பதால், கொடுமை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட நிலை அமைகிறது.
ஆகவே கொடுமை என்கிற சொல் ஒவ்வொரு சூழ்நிலைக்கும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் ஏற்ப அதன் உட்பொருளை மாற்றிக் கொண்டே இருக்கும். கணவர் மனைவியை தாக்குவது, அல்லது மனைவி கணவரை தாக்குவது மட்டும் கொடுமை அல்ல. மனைவி தனது குழந்தைகளை தூண்டி கணவரை தாக்குவது, கணவர் தமது குழந்தைகளை தூண்டி மனைவியை தாக்குவது, மனைவி தனது குழந்தைகளை தூண்டி கணவரை கடும் சொற்களால் சாட வைப்பது, கணவர் தனது குழந்தைகளை தூண்டி மனைவியை கடுஞ்சொற்களால் சாட தூண்டுவது என அனைத்தும் கொடுமை என திருமண சட்டத்தில் பார்க்கப்படுகிறது.
மன ரீதியான கொடுமை:
உடல் ரீதியான கொடுமையில், பெண்கள் பெருமளவு பாதுகாக்கப்பட்டாலும், மனம் ரீதியான கொடுமை என்கிற வரையறைக்குள் பெண்களுக்கு ஏராளமான எதிர் நிலை நிலைபாடுகள் உள்ளன.
எடுத்துக்காட்டாக உச்ச நீதிமன்றம் CIVIL APPEAL NOS.4731-4732 OF 2010, தனது மனைவியை கணவர் ஒழுக்கமற்ற பெற்றோருக்கு பிறந்தவர் என்று கடுஞ்சொல்லை பயன்படுத்தினால் அது மனரீதியான கொடுமை.
மனைவி தனது உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக கணவரை பார்த்து கூறினால் அது கணவருக்கு எதிரான மன ரீதியான கொடுமை என நீதிமன்றம் கருதுகிறது. எடுத்துக்காட்டாக விஷ்ணு தத் சர்மா vs மஞ்சு சர்மா 2009 வழக்கு.
உறவினர்களை/ நண்பர்களை சந்திக்க விடாமல் தடுப்பது மன ரீதியான கொடுமை பட்டியலில் இடம் பெறுகிறது.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அலைக்கழிப்பது மனரீதியான கொடுமை என கருதப்படுகிறது.
கணவன் மனைவியை அவரது பெற்றோரிடமிருந்து பொருள் அல்லது செல்வம் பெற்று வர வற்புறுத்துவது கொடுமை.
பாலியல் துன்புறுத்தலை பொருத்தவரை, விருப்பம் இல்லாத நிலையில், கட்டாயப்படுத்தி உறவு கொள்வது, இயற்கைக்கு மாறான முறைகளை பின்பற்ற கட்டாயப்படுத்துவது, உறவுக்கு ஒத்துழைப்பு நல்காமல் இருப்பது கொடுமை என வரையறுக்கின்றன. இயற்கைக்கும், தேவைக்கும் மாறாக, நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடுவது கொடுமை என நீதிமன்றம் கூறுகிறது. திருமண உறவில் உடலுறவு என்பது ஒரு அங்கம் என இந்திய நீதிமன்றங்கள் தங்களது தீர்ப்புகளில் குறிப்பிட்டு, அதை மனரீதியான கொடுமை என வரையறுக்கின்றன.
மருத்துவ அடிப்படை எதுவுமில்லாமல், உடலுறவுக்கு ஒத்துழைப்பு நல்காமல் இருப்பது திருமண கொடுமையாக நீதிமன்றம் கருதுகிறது.
நாள்தோறும் சிறு சிறு சண்டை வளர்ப்பது கொடுமையாக சட்ட வல்லுனர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
பொதுவெளியில் தாழ்மைப்படுத்துவது, பொதுவெளியில் கடுஞ்சொற்களை பயன்படுத்துவது, கொடுமையாக கருதப்படுகிறது.
கணவனுக்குத் தெரியாமல் மனைவி கருக்கலைப்பில் ஈடுபடுவது, மனைவிக்கு அறிவிக்காமல் கருக்கலைப்பை செய்து வைப்பது ஆகியவை கடுமையான கொடுமையாக கருதப்படுகிறது.
குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை என கணவன் அல்லது மனைவி தாமாக முன்னறிவிப்பது கொடுமையாக கருதப்படுகிறது.
பிரிந்து சென்ற மனைவி, கணவன் அழைத்தும் கணவனுடன் சேர்ந்து வாழாமல் தவிர்ப்பது கொடுமையாக கருதப்படுகிறது. கணவன் பிரிந்து சென்று மனைவியுடன் வாழ மறுப்பதும் கொடுமையாக கருதப்படுகிறது.
திருமணத்திற்கு புறம்பான உறவை கொண்டிருப்பது - கள்ளக்காதல் - கள்ள உறவு - கொடுமையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
உடல் ரீதியானம் வன்முறைகளுக்கு தடயங்கள் வெளிப்படையாக இருக்கும். மன ரீதியான கொடுமைகளுக்கு சான்றுகள் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. நீதிமன்றத்தில் மனரீதியான கொடுமையை விளக்கி உறுதி செய்வது எப்படி?
நீங்கள் வாய் வழியில் அல்லது எழுத்து வடிவில் மன ரீதியான கொடுமையை விளக்கினாலே போதுமானது. இருப்பினும் அத்தகைய கொடுமைகள் நிகழ்ந்ததற்கு சான்றாக
1. காணொளி அல்லது உரையாடல் ஒலிப்பதிவுகளை திரட்டலாம்.
2. மனரீதியான கொடுமைகளை விளைவிக்கும் நபருக்கு எதிராக மூன்றாம் நபர் சாட்சியங்களை ஏற்படுத்தலாம்.
3. கள்ள உறவு இருப்பது உறுதியானால், அதற்கான சாட்சியங்களை திரட்டுவது.
மனரீதியான கொடுமைகளும் நீதிமன்ற தீர்ப்புகளும் சில:
1. நவீன் கோலி Vs. நீது கோலி வழக்கில், உச்ச நீதிமன்றம் திருமணத்தில் கொடுமை தீவிரமானது மற்றும் குறிப்பிடத்தக்கது என்று வரையறுத்தது. ஒரு வாழ்க்கைத் துணை மனக் கொடுமைக்கு ஆளானால், அவர்கள் மற்ற வாழ்க்கைத் துணையுடன் தொடர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது என்று அவர்கள் முடிவு செய்தனர். மனக் கொடுமைகளில் அவமதிப்புகள், வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணையின் மன அமைதியை சீர்குலைக்கும் தாக்குதல் மொழியைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
2. வி. பகத் Vs டி. பகத் வழக்கில், பிரிவு 13 (1) (ஐஏ) இன் கீழ் மனக் கொடுமை என்பது ஒரு தரப்பினருக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் நடத்தையைக் குறிக்கிறது, இதனால் அவர்கள் தொடர்ந்து ஒன்றாக வாழ்வது வாய்ப்பு இல்லை.
3. சாவித்ரி பாண்டே vs பிரேம் சந்திர பாண்டே வழக்கில், உச்ச நீதிமன்றம் மனக் கொடுமையை ஒரு வாழ்க்கைத் துணையின் நடத்தை மற்ற வாழ்க்கைத் துணையின் திருமண வாழ்க்கையில் உணர்ச்சி வலி அல்லது பயத்தை ஏற்படுத்துவதாக வரையறுத்தது.
4. சமார் கோஷ் Vs ஜெயா கோஷ் வழக்கில், திருமணத்தில் மனக் கொடுமைக்கு ஒரு நிலையான தரத்தை நிறுவுவதற்கான சவாலை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. இருப்பினும், திருமண வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான பட்டியலாக கருதப்படாத பல்வேறு எடுத்துக்காட்டுகளை முன்னிலைப்படுத்துவதன் மூலம் நீதிமன்றம் ஒரு விரிவான விளக்கத்தை வழங்கியது, இது ஒரு வாழ்க்கைத் துணைக்கு மனக் கொடுமையை ஏற்படுத்துவதாகக் கருதப்படலாம்.
கொடுமைகளில் எல்லா கொடுமையும் ஒரு நபருக்கு நடைபெற்று இருந்தால் மட்டுமே திருமணம் முறிவு நீதிமன்றத்தால் வழங்கப்படும் என்பதில்லை. ஏதாவது ஒரு கொடுமை உறுதிப்படுத்தப்பட்டாலும் நீதிமன்றம் திருமணம் முறிவிற்கு வழி வகுத்து தீர்ப்பு வழங்கும்.