இந்திய திருமண சட்டங்களின்படி சடங்கு மறுப்பு திருமணங்கள் செல்லுபடி ஆகுமா?

இந்திய திருமண சட்டங்களின்படி சடங்கு மறுப்பு திருமணங்கள் செல்லுபடி ஆகுமா?

சடங்குகள் மறுப்பு திருமணம் அல்லது சுயமரியாதை திருமணங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஆபத்து சூழ்ந்துள்ளதா என்றால் "இல்லை" என ஒற்றை வார்த்தையில் கூறுகின்றனர் சட்ட வல்லுநர்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே, திருமண சட்டங்கள் குறித்து அவ்வப்போது உச்ச நீதிமன்றம் திருமண முறிவு குறித்தான வழக்குகளில் தங்களது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து வருகிறது.  ஒவ்வொரு முறை அத்தகைய கருத்துக்களை பதிவு செய்யும் பொழுதும், பிராமண வேத அடிப்படையிலான இந்து திருமண சட்டம் குறித்தும், சனாதன தர்மம் போன்ற பிராமண அடிப்படை கருத்துக்கள் குறித்தும் பொதுவான இந்துக்களுக்கான பழக்கவழக்கங்களாக கருதி நீதிமன்றம் கருத்துச் சொல்லி வருகிறது.  

நீதிமன்ற கருத்தை மேம்போக்காக புரிந்து கொண்டால், பிராமண வேத சட்ட நடைமுறைகளின் படி நடைபெறும் திருமணங்கள் மட்டுமே இந்திய பொது மக்களுக்கு பொருந்துவதாக இருக்கும்.

அது உண்மையா என ஆழமாக ஆராய்ந்தால், நீதிமன்ற தீர்ப்புகள் சூழ்நிலைக்கு ஏற்ப கருத்துரைக்கப்படுகின்றன என்பது புரியும்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை, பெரும்பாலான திருமணங்களில் நெருப்பை சுற்றி வரும் பழக்க வழக்கங்கள் இல்லை.  சில ஜாதி இனங்களில், தாலி கட்டும் பழக்கமும் இல்லை.  இத்தகைய சூழல்களில் சட்டம் என்ன சொல்கிறது என பார்க்கலாம்.

சாதி மறுப்பு மற்றும் சடங்கு மறுப்பு திருமணம்:

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கான நலச்சங்கத்தின் செயலாளருமான ரமேஷ் பெரியார் "கடந்த இரண்டாண்டுகளில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தன் அலுவலகத்தில் மிக எளிய முறையில், சிக்கனமாக சுமார் 1,500 சுயமரியாதை திருமணங்களை வைத்துள்ளேன்" என கூறுகிறார் அவர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் சுயமரியாதை திருமணங்களுக்கோ, சிறப்புத் திருமணங்களுக்கோ (வெவ்வேறு சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களிடையே நடைபெறும் திருமணங்களை ஏற்புடையதாக்கும் சட்டம்) பாதிப்பு இல்லை என்கிறார் அவர்.

“இந்து திருமணச் சட்டத்திற்கும் சுயமரியாதை திருமண சட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்து திருமண சட்டம் பிரிவு 7-ல் குறிப்பிட்டுள்ளதை பின்பற்ற வேண்டும் என்றுதான் நீதியரசர் பி.வி. நாகரத்னா கூறியுள்ளார். அந்த பிரிவின்படி, இந்து திருமணம் என்றால் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு வரையறை இருக்கிறது. இந்து திருமணத்தில் பிரிவு 7-ன் படி குறிப்பிட்ட சடங்குகளை பின்பற்றினால் மட்டுமே அந்த திருமணம் செல்லும், இல்லையென்றால் செல்லாது என்று தீர்ப்பில் கூறியிருக்கின்றனர்” என்கிறார்.

இந்து திருமணச் சட்டம் 1955 பிரிவு (7)-ல் இந்து திருமண சடங்குகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, “இந்து திருமணமானது ஏதேனும் ஒரு தரப்பினரின் (கணவர் அல்லது மனைவி) வழக்கமான சடங்குகளுக்கு ஏற்ப நடத்தப்படலாம்” என்கிறது. மேலும், பிரிவு 7-ன் உட்பிரிவு (2)-ன் படி, சடங்குகளை அத்தம்பதி செய்யும்போது அத்திருமணம் முழுமை பெறுவதாகவும் இருவருக்குள்ளும் பிணைப்பு ஏற்படுவதாகவும் கூறுகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் சமூகத்திற்கும் திருமண சடங்குகள் வேறுபடும். எனவே, “அந்தந்த இடங்களுக்கோ, சாதிக்கோ, இனங்களுக்கோ என இருக்கும் நடைமுறைகள், சடங்குகளை பின்பற்றியிருக்க வேண்டும் என இந்த சட்டம் கூறுகிறது" என்கிறார் ரமேஷ் பெரியார்.

தமிழ்நாடு அரசு 1967-ம் ஆண்டில் நிறைவேற்றிய சட்டதிருத்தம் இந்த இந்து திருமணச் சட்டத்தில் உட்பிரிவாக 7(அ)-ல் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த தீர்ப்பு சுயமரியாதை திருமணங்களுக்கு பொருந்தாது என்கிறார் ரமேஷ் பெரியார்.

இப்போது என்று இல்லாமல், பல சூழ்நிலைகளில் சுயமரியாதை திருமணங்களை கேள்விக்குட்படுத்தும் தீர்ப்புகளும் கருத்துகளும் எழுந்தாலும், அதனை வலுவாக எதிர்கொண்டு உறுதியுடன் இருக்கும் வகையில் அச்சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

“சுயமரியாதை திருமணத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. 2023-ல் கூட உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருந்தது. 2014-ம் ஆண்டில் வழக்கறிஞர்கள் செய்துவைக்கும் சுயமரியாதை திருமணங்கள் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், அந்த தீர்ப்பை 2023, ஆகஸ்ட் திங்களில் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். மேலும், சுயமரியாதை திருமணங்களையோ, சிறப்பு திருமணங்களையோ மிகவும் பகட்டாக செய்ய முடியாது, அதை கமுக்கமாக செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது" என்றார் அவர்.

சுயமரியாதை திருமணங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு மட்டுமே பொருந்தும்:


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கருத்து கூறுகையில், “சுயமரியாதை திருமணத்திற்கான தமிழ்நாட்டின் சட்டத்திருத்தம் செல்லும் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய திருமணங்கள் சடங்குகளுடன் நடந்தாலும் சடங்குகள் இல்லாமல் நடந்தாலும் செல்லும் என்கிற பிரிவு இருக்கிறது" என்றார்.

சுயமரியாதை திருமணங்கள் செல்லாது எனக்கூறி தாக்கல் செய்த வழக்கில், அத்திருமணங்கள் செல்லும் என 2001-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: