குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல், சட்டம் , 2005

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல், சட்டம் , 2005

ஒரு பெண் அவளது திருமண வீட்டில் வசிக்கும் உரிமையை இச்சட்டம் உறுதி செய்கிறது. "வன்முறையற்ற வீட்டில்" வாழ பெண்ணுக்கு பாதுகாப்பு அளித்திட கூடிய சிறப்பு அம்சத்சை குறிப்பிட விதிகளின் கீழ் இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்தச் சட்டத்தில் உரிமைச் சார்ந்த மற்றும் குற்றம் சார்ந்த விதிகள் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் 60 நாட்களுக்குள் உடனடியாக உரிமைச் சார்ந்த தீர்வுகளைப் பெற முடியும். பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னுடன் குடும்ப உறவில் ஈடுபடும் எந்த ஆண் குற்றவாளி மீதும் இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். கணவன் அவரின் உறவினர்களையும் மற்றும் ஆண் துணைவன் ஆகியோரையும் வழக்கில் பிரதிவாதிகளாக சேர்த்து தீர்வு காணலாம்..

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

    பிரிவு 17ன் கீழ் வசிக்கும் உரிமையை உறுதி செய்கிறது.

    பொருளாதார வன்முறையை அங்கீகரிப்பதன் மூலம் பொருளாதார நிவாரணத்தை உறுதி செய்கிறது.

    வாய்மொழி மற்றும் உணர்ச்சி வன்முறையை அங்கீகரிக்கிறது.

    குழந்தையின் தற்காலிக பொறுப்பை வழங்குகிறது.

    வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் தீர்ப்புகள்.

    ஒரே வழக்கில் பல தீர்ப்புகள்.

    தரப்பினரிடையே மற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் இச்சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படலாம்.

    மனுதாரர் மற்றும் பிரதிவாதி இருவரும் மேல்முறையீடு செய்யலாம்.

குடும்ப வன்முறைச் சட்டம், 2005 இலிருந்து பெண்களின் பாதுகாப்பின் கீழ் பின்வரும் தீர்வுகள் கிடைக்கின்றன

பிரிவு 18 -- பாதுகாப்பு ஆணை

பிரிவு 19 -- திருமணமான வீட்டில் வசிப்பதற்கான ஆணை

பிரிவு 20 -- தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் பராமரிப்பு உள்ளிட்ட பண ஆணைகள்

பிரிவு 21 -- குழந்தைகளின் தற்காலிக பாதுகாப்பு

பிரிவு 22 -- அவளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடு ஆணை

பாதுகாப்பு அலுவலர்கள்

குடும்ப வன்முறைச் சட்டம், 2005-ன் கீழ், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அல்லது குடும்ப வன்முறையில் ஈடுபட்ட மற்றும் மனுதாரருடன் குடும்ப உறவில் இருக்கும் ஆண்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய, அரசால் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் நீதிமன்றத்தை அணுகி சட்ட உதவிகளை பெறவும், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் உரிய நிவாரணம் பெறவும் பாதுகாப்பு அலுவலர் உதவி செய்கின்றனர்.

மேலும், நீதிமன்றத்தின் உத்தரவுகளை காவல்துறையின் உதவியுடன் சம்மந்தப்பட்ட இடங்களில் நிறைவேற்றுகிறார்கள். பாதிக்கப்பட்ட நபர் முதன்மை நீதிமன்றத்தில் அல்லது சேவை வழங்குபவரிடம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் மனுவை தாக்கல் செய்வதற்கான வழிவகை இச்சட்டத்தில் உள்ளது.

சேவை வழங்குபவர்கள்

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005 இன் கீழ், அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் சேவை வழங்குபவர்களாக நியமிக்கப்பட்டுள்ளன. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் நிவாரணம் கிடைப்பதில் அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைத்து, செயல்படுகின்றன.

சேவை வழங்குநர்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் வன்முறை நடைப்பெற்ற அறிக்கையைத் தாக்கல் செய்யவும், அவர்களின் குழந்தைகளுடன் குறுகிய கால தங்கும் இல்லங்களில் தங்குவதற்கும், அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும், தேவைப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் உதவுகின்றன.

அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நிலையான வருமானம் ஆகியவற்றைப் பெற உதவும் வகையில் அவர்களுக்கு தொழில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: