கத்தோலிக்க கிறிஸ்தவர் முறைப்படி நடந்த திருமணங்களுக்கு, திருமணம் முறிவு அவர்களது சட்டப்படி இல்லை

கத்தோலிக்க கிறிஸ்தவர் முறைப்படி நடந்த திருமணங்களுக்கு, திருமணம் முறிவு அவர்களது சட்டப்படி இல்லை

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையின்படி, திருமணம் என்பது, கடவுள் இரு உள்ளங்களை இணைத்து வைத்த செயல்.  கடவுள் இணைத்து வைத்ததை பிரிப்பதற்கு மனிதர்களுக்கு உரிமை இல்லை என்கிற கோட்பாட்டை கொண்டது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பின்பற்றும் Canon Law - அதாவது திருச்சபை சட்டம்!

உலகளாவிய அளவில், மனிதர்கள் சார்ந்து இருக்கும் மதங்களின் எண்ணிக்கையின்படி, கிறிஸ்துவம் முதலிடத்தில் உள்ளது.  அதில் பெரும் பகுதி பிரிவினர் பின்பற்றும் பிரிவு, கத்தோலிக்க கிறிஸ்தவம்.

ஏராளமான மக்கள் பின்பற்றும் ஒரு மத நம்பிக்கையில், திருமணங்களில் மன வேறுபாடு ஏற்படாமல் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.  அப்படி மன வேறுபாடு ஏற்பட்டவர்கள், தங்களது திருமண உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தால், கத்தோலிக்க கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்களுக்கு என்ன வழி இருக்கிறது?

மன வேறுபாடு ஏற்பட்டு, திருமணத்தை முறித்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தவர்கள், முதலில் அந்தந்த நாடுகளின் சட்டப்படி நீதிமன்றத்தை நாடி, திருமண முறிவை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், நீதிமன்றத்தின் மூலம் திருமணம் முறிவு செய்த தீர்ப்பின் நகலை, கத்தோலிக்க கிறிஸ்தவர் திருச்சபை அமைப்பில் தனியாக திருச்சபை சட்ட விதிகளின் கீழ் விண்ணப்பித்து, தமக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமணம் செல்லாத திருமணம் என, சாட்சியங்களுடன் உறுதி செய்ய வேண்டும்.
 
நீதிமன்றம் நடைமுறைப்படி முறித்துக் கொள்ளப்பட்ட திருமணச் சான்றுகளை வைத்துக்கொண்டு, மீண்டும் கத்தோலிக்க முறைப்படி, கத்தோலிக்க ஆலயங்களில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இயலாது.

அதாவது, கடவுள் இணைத்ததை மனிதனுக்கு பிரிப்பதற்கு உரிமை இல்லை.  இணைத்து வைத்ததே, திருச்சபை வகுத்துள்ள சட்ட விதிகளின் கீழ் செல்லாது என்று திருச்சபை முடிவெடுத்தால், மீண்டும் கத்தோலிக்க முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம்.  அதாவது, இரண்டாவது திருமணத்திற்கு அனுமதி இல்லை, அதே வேளையில், நடத்தி வைக்கப்பட்ட திருமணமே செல்லாது என்பதால், மீண்டும் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது!

எந்தெந்த சூழலில், நடத்தி வைக்கப்பட்ட திருமணம் செல்லாததாக கருதப்படும்?

1.  கணவர் அல்லது மனைவி, பாலியல் உறவிற்கு தகுதி இல்லாதவராக இருந்தால். இங்கே, Impotency மட்டுமே குறைபாடாக கருதப்படும்.  Sterile நிலை குறைபாடு இல்லை.
2.  கணவர் அல்லது மனைவி, குழந்தைகளை ஈன்றெடுக்க மறுத்தால்.  மருத்துவ அடிப்படையில், குழந்தைகள் ஈன்றெடுக்க இயலாத சூழலை (Sterile), "மறுத்தல்" என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.
3.  கணவர் அல்லது மனைவி, திருமணம் ஒப்பந்தம் செய்யும்பொழுது, ஒப்பந்தத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து இருந்தால்.
4.  திருமணத்திற்கு முன்பே, தீர்த்துக் கொள்ள இயலாத நோய் அல்லது குறைபாடு இருந்து, அதை திருமணத்தின் போது மறைத்திருந்தால்.
5.  தனது வருமானம், தனது வேலை, தனது சொத்துக்கள் குறித்து பொய்யான கட்டமைப்பை செய்து திருமணத்தை நடத்தி இருந்தால்.
6.  ஏற்கனவே கத்தோலிக்க முறையில் அல்லது வேறு ஏதாவது சடங்கு முறையில் திருமணம் நடைபெற்று, அதை மறைத்து இருந்தால்.
7.  வலுக்கட்டாயமான திருமணம் நடைபெற்று இருந்தால்.
8.  நெருங்கிய உறவினர் என்பதை திருச்சபையிடம் மறைத்து, திருமணத்தை நடத்தி இருந்தால்.
9.  மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால்.
10. திருச்சபை கண்ணோட்டத்தில், இனி இணையர்களால் சேர்ந்து வாழ இயலாது என்கிற சூழல் அறியப்படும் நிலையில்.

நடத்தி வைக்கப்பட்ட திருமணம் செல்லாது என தீர்ப்பளிக்க பல சட்ட வழிமுறைகள் இருப்பினும், திருச்சபை, அவ்வளவு எளிதாக, நடத்தி வைக்கப்பட்ட திருமணம் செல்லாது என ஏற்றுக் கொள்வது இல்லை.

நீதிமன்றங்கள் மூலம் சட்டப்படியான திருமணம் முறிவு பெற்றவர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவத்தை பின்பற்றுவதற்கு எவ்விதத்திலும் தடையில்லை.  ஆனால், இரண்டாவது திருமணம், கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி நடத்தி வைக்கப்பட மாட்டாது. கத்தோலிக்க திருச்சபையால், திருச்சபை நடத்தி வைத்த திருமணம் செல்லாது என்று உறுதி செய்தால் மட்டுமே, வேறு ஒருவரை கத்தோலிக்க முறைப்படி திருமணம் செய்ய இயலும்.

திருமணத்தை முறித்துக் கொள்வதற்கு, கத்தோலிக்க கிறிஸ்தவம் எளிய நடைமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை ஒரு புறம் இருக்க, போப் மற்றும் அவருக்கு கீழ் பணி புரியும் உயர்மட்ட பாதிரிமார்கள், செல்லத் தகாத திருமணம் என்று தீர்ப்பளிக்கப்படுவது ஆண்டுதோறும் பெருகி வருகிறது என வருத்தம் தெரிவிப்பதுடன், செல்ல தகாத திருமணம் சட்ட நடைமுறைகளை கடுமையாக்க வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: