நடுவன் அரசின் உயர் சாதி பிரிவினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு

நடுவன் அரசின் உயர் சாதி பிரிவினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு

நடுவன் அரசின் உயர் சாதி பிரிவினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு: கலந்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் - முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடுவன் அரசு உயர் சாதி பிரிவில் உள்ளவர்களில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10  விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற நடைமுறையை அரிமுகப்படுத்தியது.

தமிழக அரசு இது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் நேற்று சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை 02.07.2019 நடைபெற்ற கலந்துரையாடலில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த இட ஒதுக்கீடு குறித்து பேசினார்.

முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து கலந்து பேசி முடிவெடுக்க அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு இதுதொடர்பான கலந்துரையாடலை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பினார்.

இந்த கலந்துரையாடலின் தகவர்ல்:

மு.க.ஸ்டாலின்: முன்னேறிய வகுப்பினருக்காக அவசர, அவசரமாக அரசமைப்பு சட்டத்துக்குப் புறம்பாக 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடுவன் அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு அதனைச் செயல்படுத்தினால் மருத்துவப் படிப்பில் 25 விழுக்காடுகள் இடங்களைக் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்ற செய்தியும் வந்து கொண்டிருக்கிறது.

25 விழுக்காடு என்ற தூண்டிலை நடுவன் அரசு நம் மீது வீசி அதில் நாம் சிக்கிக் கொள்கின்றோமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. தன்நலத்தோடு முன்வந்து  தந்திரமான அறிவிப்பை நடுவன் அரசு வெளியிட்டிருக்கிறது.

இடங்கள் கூடும் என்று ஏமாற்றி சமூகநீதியையே முதலில் நீர்த்துப் போகச்செய்து, அடுத்தகட்டமாக, அதைச் சாகடிக்கும் சூழ்ச்சியை நடுவன் அரசு இப்பொழுது கடைப்பிடிக்கிறது.

எனவே, 25 விழுக்காடு கவர்ச்சி வலையில் நாம் விழுந்துவிடக் கூடாது.

முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து, இந்த அரசின் நிலைப்பாடு என்ன? உங்களுடைய கொள்கை என்ன? இது தொடர்பான ஓர் ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்று  கொண்டிருக்கிறோம்.

எனவே, இப்போதாவது இது தொடர்பில் அரசு என்ன நிலையில் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

ஏற்கெனவே, கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்ற 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்ற நிலைப்பாட்டில், அரசு அசையாமல்-ஆடாமல் உறுதியாக நிற்க வேண்டும்.

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி: முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த கருத்துகளை நடுவன் அரசு தெரிவித்திருக்கிறது.

இதனை ஆதரிக்கிறோம்-எதிர்க்கிறோம் என்பது கிடையாது. இதை பொருத்தவரையில், அனைத்து கட்சிகளின் ஆலோசனை அடிப்படையில் தான் அரசு செயல்படும்.

மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு குறித்து நடுவன் அரசு ஒரு திட்ட அறிக்கையை அனுப்பியுள்ளது.

அதில், மருத்துவப் படிப்புக்கான இடங்களைப் பிரித்து வரையறை செய்துள்ளது.

அதன்படி, மொத்தம் ஆயிரம் இடங்கள் இருக்கின்றன என்றால், அவற்றில் 150 இடங்கள் அனைத்து இந்திய ஒதுக்கீட்டுக்குச் செல்கின்றன. 850 இடங்களில், பொதுப் பிரிவினருக்கு 264 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதியுள்ள 586 இடங்களே 69 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வருகிறது.

எனவே, இது தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து அதில் முடிவுகள் எடுக்கப்படும்.

அதே நேரம்  69 விழுக்காடு இடஒதுக்கீட்டையே அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும்.  எந்த நிலையிலும் அதை கைவிடாது என்றார் முதல்வர்.

முன்னதாக, நலத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அளித்த விளக்கம்:

முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும்போது, 25 விழுக்காடு அளவுக்கு மருத்துவப் படிப்புக்கான இடங்களை கூட்டிக் கொள்ளலாம் என இந்திய மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.

கூடுதல் வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளாமலேயே, இந்த இட அதிகரிப்புகளை 5 ஆண்டுகளுக்குச் செய்யலாம் எனக் கூறியுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டுக்கு தமிழகம், கர்நாடகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளன.

இந்த இட ஒதுக்கீடு தொடர்பில் மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

அதற்கும், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஓரிரு நாள்களில் பட்டியல் வெளியாகும். இடஒதுக்கீடு தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகளுடன், சட்டப்படியான கருத்துகளையும் கோரியுள்ளோம்.

அரசு தலைமை வழக்குரைஞர் உள்ளிட்ட சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
 
இதனால், தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அந்தக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது என்றார்.

இறுதியாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், இது தொடர்பில் நாம் அனைவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

10 விழுக்காடு இடஒதுக்கீட்டால் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு குந்தகம் ஏற்படுமா என்பது குறித்து தில்லியில் உள்ள சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். 69 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 0.1 விழுக்காடு அளவுகூட குறையாமல் இருக்கும் வகையில் நாம் அனைவரும் பேசி முடிவு செய்வோம் என்றார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: