சொற்குவைத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தமிழ் சொற்கள்

சொற்குவைத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தமிழ் சொற்கள்

சொற்குவை திட்டச் சொற்கள் 2 நாள்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்

சொற்குவைத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சொற்கள், அடுத்த இரண்டு நாள்களில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை 02.07.2019 அன்று கேள்வி நேரத்தின் போது, புதிய சொற்கள் உருவாக்கம் தொடர்பாக அதிமுக உறுப்பினர் சு.செம்மலை எழுப்பிய கேள்விக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அளித்த பதில்:

தமிழில் புதிய சொற்களை உருவாக்க சொற்குவைத் திட்டம் உருவாக்கப்பட்டு ரூ.1 கோடி பணம் ஒதுக்கப்பட்டது.

அதன்படி, தமிழில் 4 லட்சத்து ஆயிரத்து 931 சொற்கள் இருப்பதை முதலில் கண்டறிந்தோம்.

ஆங்கிலத்தில் ஆக்சுபோர்டு அகரமுதலியில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 471 சொற்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

ஆங்கிலத்தைவிட தமிழில் இருமடங்குக்கு மேலாக தனித்துவம் பெற்ற சொற்கள் உள்ளன.

பிரிட்டானியா நாட்டு தரவகத்தின் வடிவத்தைப் போன்றே சொற்குவைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த இரண்டு நாள்களில் மக்களின் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்படும்.

இதேபோன்று, மருத்துவ அகரமுதலி, வேதியியல் அகரமுதலி போன்றவற்றை வெளியிட்டு இருக்கிறோம்.

இந்த அகரமுதலிகள் உள்பட மொத்தமாக உருவாக்கப்பட்ட சொற்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 3 ஆயிரத்து 875 ஆகும்.

இன்னும் 6 லட்சம் சொற்கள் தமிழில் இருக்கும் எனக் கருதுகிறோம். இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட அகரமுதலிகள் இருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து செய்யக் கூடிய திட்டம் தான் சொற்குவை திட்டம்.

கல்லூரிகளில் கூட்டங்கள்: சொற்கள் உருவாக்கத்தை இளைஞர்களிடம் இயக்கமாக எடுத்துச் செல்ல, சொல் உண்டியல் திட்டத்தைக் கொண்டு வந்து அதுதொடர்பாக 10 கல்லூரிகளில் கூட்டங்களை நடத்தியுள்ளோம்.

அறிவியல், தொழில்நுட்பம் மட்டும் இல்லாமல் அனைத்துத் துறைகளிலும் இருக்கக் கூடிய தத்துவங்களுக்கான தமிழ் சொற்களை உருவாக்கக் கூடிய பணிகள் விரைவில் நடைபெறும் என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.

இதைத் தொடர்ந்து, பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், உங்கள் துறைக்கான செலவுகளுக்கு ஒப்புதல் அளிப்பது சட்டப்பேரவையே.

நீங்கள் செய்யும் பணிகளை நாங்களே இப்போதுதான் தெரிந்து கொள்கிறோம்.

எனவே, துறையின் மூலம் செய்த பணிகளை உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு தெளிவாக, எளிமையாக தகவல்களைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு கொள்கை விளக்கக் குறிப்பில் முயற்சி எடுத்துள்ளோம் என்றார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: