அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்

தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர் : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்குந்து ஒட்டுநர் ஒருவர் குடிபோதையில் சரக்குந்தை தாறுமாறாக ஒட்டி அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்தனர்.

ஒசூரிலிருந்து கிருட்டிணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் பால் ஏற்றிய சரக்குந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்குந்து ஒசூர் அருகேயுள்ள கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் சென்றபோது அதிவேகத்தில் சென்றுள்ளது.

ஒரு கட்டத்தில் சரக்குந்து ஒட்டுநர் சரக்குந்தை தாறுமாறாக ஒட்டி சாலையில் சென்ற கார், டெம்போ, பொதியுந்து (பிக்அப் வேன்) உள்ளிட்ட பல வண்டிகளின் மீது மோதி விபத்துகளை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனாலும் அந்த சரக்குந்து நிற்காமல் கோனேரிப்பள்ளி, சூளகிரி, சுண்டகிரி, என அடுத்தடுத்து சென்றுள்ளது. இறுதியில் சின்னாறு பகுதியில் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு வேலியில் முட்டி பின்னர் பின்னோக்கி சிறிது தொலைவு சென்று நின்றுள்ளது.

இதனைப்பார்த்த வண்டி ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். தொடர்ந்து போதையிலிருந்த பால் சரக்குந்து ஒட்டுநரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இதனையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற சூளகிரி காவலர்கள் போதை ஒட்டுநரை மீட்டு அவசர ஊர்தி மூலம் கிருட்டிணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் கார், பொதியுந்தி, டெம்போ உள்ளிட்ட வண்டிகளில் சென்றவர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவ முதலுதவி பெற்றனர்.

திரைப்பட காட்சிகளை போல நடந்த இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வண்டி ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.