Private Well Near Nalan Chakravarthi Lake Sparks Protest Plans in Anchetty; Villagers Seek Krishnagiri Collector's Intervention | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Private Well Near Nalan Chakravarthi Lake Sparks Protest Plans in Anchetty; Villagers Seek Krishnagiri Collector's Intervention

📅 வெளியீடு நாள்: 24-07-2026

📄 விளக்கம்

A private agricultural well constructed near Nalan Chakravarthi Lake in Anchetty has become the focus of a growing public dispute. Local residents allege that groundwater extraction near the lake has contributed to a significant decline in water levels, raising concerns about drinking water availability for approximately 15 villages and irrigation for nearly 1,500 acres of farmland. The villagers are seeking immediate intervention from the Krishnagiri District Collector while HosurOnline continues to gather responses from all concerned departments.

அஞ்செட்டியில், தனிநபரின் ஒற்றை கிணற்றை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த அஞ்செட்டி ஊர் மக்கள் திட்டமிடுவது ஏன்? அந்த தனிநபரை "அவர் ரொம்ப நல்லவர்" எனக் கூறும் அஞ்செட்டி காவல்துறை. ஏன் இந்த முரண்பாடு?

உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, நளன் சக்கரவர்த்தி ஏரி சுமார் 15 ஊர்கள், 15,000 குடும்பங்கள் மற்றும் 1,500 ஏக்கர் விளைநிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது

நீர் நிலைகளிலிருந்து 300 மீட்டர் வரை கிணறு, ஆழ்துளை கிணறு அல்லது நீர் உறிஞ்சும் அமைப்பு அமைக்க, தமிழ்நாடு நீர்வளத்துறை சட்டத்தில் இடமில்லை எனக் கூறுகின்றனர் சட்டம் பயின்றோர். மின் இணைப்பை பெறப்பட்ட இடத்திற்கு வெளியே எடுத்துச் செல்வது சட்டப்படி குற்றம் என மின்வாரியத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், தனிநபர் ஒருவர், ஏரிக்கரையோரம் அரை ஏக்கர் நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் வாங்கி, அங்கே பெரியதொரு விவசாய கிணறு அமைத்துள்ளார்.

அந்த தனிநபர், சுமார் முக்கால் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமது வேறொரு நிலத்தின் பெயரில் தட்கல் திட்டம் மூலம் விலையில்லா மின்சார இணைப்பு பெற்று, அங்கிருந்து மின்வடங்களை, தான் புதிதாக அமைத்த கிணற்றிற்கு சாலை ஓரமாக கம்பம் நட்டு எடுத்து வந்து, பத்து எச்பி திறன் கொண்ட மூன்று நீரூந்திகளை பயன்படுத்தி, சாலை ஓரமாக பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட ஆறு இன்ச் விட்டம் கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீரை எடுத்துச் சென்றதாக அஞ்செட்டி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் அஞ்செட்டி வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்த நிலையில், ஏரி வட்டார வளர்ச்சி அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவரிடம் புகார் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து பிடிஓவிடம் வாய் வழி தகவலாக புகார் தெரிவித்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர். காவல்துறையினர் அதை உறுதி செய்கின்றனர்.

இந்நிலையில், ஏரியில் 12 அடியாக இருந்த நீர்மட்டம், மூன்று அடியாக குறைந்துள்ளது. இந்த தனிநபரின் கிணற்றினால் தான் தண்ணீர் வேகமாக குறைவதாக கருதி, பொதுமக்கள், முக்கால் கிலோ மீட்டருக்கு போடப்பட்டிருந்த மின்வடங்களையும், நீருந்திகளையும் பிரித்து எடுத்து, ஒரு கோவிலில் வைத்திருந்தார்களாம். பின்னர், யார் முன்னிலையிலாவது தீர்வு பேசி, அவற்றை ஒப்படைப்பதாக அந்த தனிநபருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கடந்த நாள் அஞ்செட்டி காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று, மின்வடங்களும் நீருந்திகளும் அந்த தனி நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது, 'மின் இணைப்பு முக்கால் கிலோமீட்டர் தூரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக எங்களுக்கு தெரியவே தெரியாது' என்று தெரிவித்தனர்..

வட்டார வளர்ச்சி அலுவலரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றோம். அழைப்பை ஏற்காததால், அவருக்கு WhatsApp மூலம் எழுத்துப்பூர்வமாக கேள்விகள் அனுப்பியுள்ளோம். அவரின் விளக்கம் கிடைத்தவுடன், அதையும் முழுமையாக வெளியிடுவோம்.

இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, பெயர் வெளியிட விரும்பாத காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், அந்த தனிநபரை குறிப்பிட்டு, "அவர் ரொம்ப நல்லவர்" என்று மட்டும் தெரிவித்தார். பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை.

எது எப்படியோ, கள நிலவரம், அஞ்செட்டி பொதுமக்களை இந்த தனிநபரின் கிணறு, ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் தூண்டுகிறது என்பதை நம்மால் உணர முடிந்தது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என மக்கள் காத்திருக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads