பர்கூர் அருகே வீட்டின் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி, 8 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இருவரைப் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள பி.கொத்தூரைச் சேர்ந்த தெய்வாணி (53) என்பவரிடம், கடந்த ஜூலை இரண்டாம் நாள் பித்தளை பொருட்கள் மற்றும் நகைகளுக்குப் பாலிஷ் செய்து தருவதாகக் கூறி மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.
அவரை நம்பி தெய்வாணி கொடுத்த 8 பவுன் நகையை வாங்கிக்கொண்ட அந்த நபர், குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார்.
தெய்வாணி தண்ணீர் கொண்டுவர வீட்டினுள் சென்ற நேரத்தில் நகையுடன் தப்பியோடிவிட்டார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பருகூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் பீகார் பாகல்பூரைச் சேர்ந்த கம்டியோ பிரசாத் ஷா (51), மணீஷ் ஷா (31) என்பது தெரியவந்தது.
ஒப்பதவாடி கூட்ரோடு அருகே தப்பியோட முயன்ற இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் "வேறு எங்காவது இதுபோன்ற திருட்டு நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளனார்களா?" என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.