பர்கூர் காவல்துறை அதிரடி: தனியார் பேருந்தில் பயணிடம் 8.5 பவுன் தங்க நகைகளைத் திருடிய ஆம்பூர் பெண் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கோவிந்தசாமி ரெட்டித் தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா (66). இவர் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி, தொகரப்பள்ளியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்பதற்காக நாட்றம்பள்ளியிலிருந்து பர்கூருக்குத் தனியார் பேருந்தில் பயணம் செய்தார்.

பயணத்தின் போது, மல்லிகா தனது கைப்பையில் வைத்திருந்த தாலிக்கொடி, பதக்கம் பொருத்தப்பட்ட சங்கிலி (டாலர் செயின்) உள்ளிட்ட எட்டரை பவுன் தங்க நகைகள் மர்மமான முறையில் திருடுபோயின.

இது குறித்து மல்லிகா அளித்த புகாரின் அடிப்படையில், பர்கூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர். பேருந்து மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் படக்கருவிகளில் (CCTV) பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததுடன், அப்பகுதி தானியங்கி (ஆட்டோ) ஓட்டுநர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாரதி (57) என்ற பெண் நகைகளைத் திருடியது உறுதி செய்யப்பட்டது. மேலும், இவர் சென்னை, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பாரதியைக் கைது செய்த பர்கூர் காவல்துறையினர், அவரிடமிருந்த எட்டரை பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.