பெங்களூரிலிருந்து மதுரைக்கு தனியார் பேருந்தில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த இரண்டு பேரை ஒசூர் அருகே ஜூஜூவாடி எல்லை சோதனைச் சாவடியில் மாவட்ட போலீசார் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.தமிழக-கர்நாடக எல்லையைக் கடக்கும் வாகனங்களை ஒசூர் சிப்காட் காவல் நிலைய போலீசார் தீவிர சோதனையிட்டு வந்தனர். அப்போது, பெங்களூரிலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘மெட்டூர் சூப்பர் சர்வீஸ்’ தனியார் பேருந்தை மறித்து சோதனை செய்தனர்.சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன், தலைமை காவலர்கள் முருகன் மற்றும் வள்ளல் ஆகியோர் அடங்கிய குழுவினர், பேருந்தில் இருந்த பயணிகளின் உடைமைகளை விரிவாகச் சோதித்தனர். அப்போது, இரண்டு பயணிகளின் தோள் பைகளில் (Shoulder bags) தலா 5 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட அந்த கஞ்சா உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.கைதானவர்கள் விபரம்:
போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பால் வியாபாரி எம். சஞ்சய் (24) மற்றும் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த தனியார் ஆன்லைன் டெலிவரி நிறுவன ஊழியர் எஸ். கௌதம் (34) என்பது தெரியவந்தது.பெங்களூரில் இருந்து கடத்தல்:
கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெங்களூரு மடிவாலா பகுதியில் உள்ள ராஜபாண்டி என்ற சப்ளையரிடமிருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கியதும், அதனை மறுவிற்பனைக்காக மதுரைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட இருவரையும் சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கஞ்சா சப்ளை செய்த பெங்களூரு ராஜபாண்டியைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.