ஓசூர் வேளாங்கண்ணி பள்ளி சந்திப்பிலிருந்து தளி வரை செல்லும் சாலையில், உள் வட்டச் சாலை அடுத்து ரயில்வே கேட் ஒன்று உள்ளது.
இந்த ரயில்வே கேட் வழியாக நாள்தோறும் 33 தொடர்வண்டிகளுக்கும் கூடுதலானவை செல்கின்றனவாம். ஒவ்வொரு முறை ரயில் செல்லும்போது 7 நிமிடங்கள் வரை ரயில்வே கேட் மூடப்படுகிறதாம். இதனால், ஒவ்வொரு நாளும் காலை 10 மணி வரையும், பின்னர் பிற்பகல் 12 மணி முதல் இந்த சாலை சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுவரை ரயில்வே கேட் தாண்டி, வேளாங்கண்ணி பள்ளி வரை சாலையில் நேராக சென்று வரும் வகையில் இருந்த நிலையில், திடீரென இன்று காலை முதல், உள் வட்ட சாலையின் குறுக்கே பேரிகார்டு போடப்பட்டு, U-Turn சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விபத்து பகுதியாக திகழும் முனீஸ்வர் நகர் சர்கிள் மற்றும் உள் வட்டச் சாலையின் நடுவே உயர் மின்னழுத்த கோபுரம் உள்ள பகுதியும் U-Turn மேற்கொள்ள வேண்டிய பகுதியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சாலையை மூடி மாற்றி அமைப்பதற்கு, குடியிருப்பு பகுதி மக்களின் பிரதிநிதிகளான 36-வது வார்டு கவுன்சிலர் பாக்யலட்சுமி மற்றும் 37-வது வார்டு கவுன்சிலர் சென்னீரப்பா ஆகியோரின் கருத்துக்களும் கேட்கப்படவில்லை என இருவரும் கூறுகின்றனர்!
மாநில நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சியின் அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது! அப்பகுதி வாழ் பொது மக்களின் கருத்துக்களும் கேட்கப்படவில்லை.
ஒவ்வொரு நாளும் அவ்வழியாக எத்தனை வண்டிகள் பயணிக்கின்றன என்பது குறித்தான தரவுகளும் திரட்டப்படவில்லை. இவ்வாறு U-Turn சாலையாக மாற்றி அமைக்கப்பட்டால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து அறிவியல் ரீதியான எவ்வித ஆய்வும் இல்லை.
பள்ளி, கல்லூரி, நிறுவனம் பேருந்துகள் வரிசையாக வரும் காலை மற்றும் பிற்பகல் வேளைகளில் ரயில்வே கேட் மூடப்பட்டால், இது மேற்கொண்டு கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு வழி வகுப்பதுடன், சாலை விபத்துகளை ஏற்படுத்தி உயிர் பலிகளும் ஏற்படலாம் என, சாலையை பயன்படுத்தும் பொதுமக்களும், தன்னார்வலர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையினரின் கடுமையான கண்காணிப்பு மற்றும் சீர் செய்யும் நடவடிக்கைகளால் மட்டுமே மட்டுமே அந்த சாலை சந்திப்பு போக்குவரத்து ஓரளவிற்காவது கட்டிற்குள் உள்ளது. அவர்கள் பணியில் இல்லை என்றால் கண்டிப்பாக ரயில் போக்குவரத்திற்கு ரயில்வே துறையினரால் கேட்டை இயக்க இயலாது. அவ்வாறான சூழலில், ரயில்வே துறையின் அழுத்தத்தால், மாநில நெடுஞ்சாலை துறையின் பொறியாளர் மேம்பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவார்.
இப்படி சாலையை மூடி மக்களை மன உளைச்சலுக்கும் விபத்துக்கும் வழி வகுப்பதை காட்டிலும், இரண்டு மூன்று நாட்களுக்கு அப்பகுதியில் காவல் துறையினர் பணி புரியாமல் இருப்பின் ரயில்வே துறையினருக்கும், மாநில நெடுஞ்சாலை துறையினருக்கும் பொது மக்களின் வலி என்னவென்று புரியும் என தன்னார்வலர் ஒருவர் எம்மிடம் குறிப்பிட்டார்.
ஓசூர் தளி சாலை திடீரென மூடப்பட்டதன் மர்மம் என்ன? இதுவரை ஓசூர் வரலாற்றில் இல்லாதது! வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது என புலம்பும் மக்கள்!
Published:
02 Oct 2026, 05:03 PM
Location:
Hosur
By:
Prakash
Source:
HosurOnline
1 / 13