ஓசூர் பேடரப்பள்ளி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதித்யா. இவர் பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்தில் பகுதி நேர டெலிவரி ஊழியராக வேலை செய்து வருகிறார்.
கடந்த 17.10.2026 அன்று காலை, சிப்காட் காவல் எல்லைக்குட்பட்ட பேடரப்பள்ளி கண்ணையன் பேக்கரி அருகே உள்ள உணவகம் முன்பு ஆதித்யா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த மர்ம நபர், ஆதித்யாவின் ₹65,000 மதிப்பிலான கைபேசியை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.
உடனடியாக ஆதித்யா தனது நண்பர்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்து, சிப்காட் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள், கைபேசி பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து கைபேசி பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்த பின் நீதிமன்றக் காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.