தேன்கனிக்கோட்டை: குடிபோதையில் சித்தியைக் கழுத்தறுத்துக் கொன்ற வாலிபர் சரண்!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குடிபோதையில் சித்தியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வாலிபர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.கண்டகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சோமப்பாவின் மகன் அசோக். இவர் நேற்று மதுபோதையில் தனது வீட்டில் இருந்த சித்தி சரசம்மா (கணவர் பெயர் சிவப்பா) என்பவருடன் ஏற்பட்ட தகராறில், அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர், அசோக் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் நேராகச் சென்று சரணடைந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சரசம்மாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலைச் சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.