HosurOnline

குருபரப்பள்ளியில் வெறிநாய் கடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதி: மக்கள் அச்சம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த குருபரப்பள்ளியில் வெறிநாய் கடித்ததில் 7 பேர் படுகாயமடைந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருபரப்பள்ளி வேணுகோபால் தெருவைச் சேர்ந்த சரஸ்வதி, விபுஷணன், அரிச்சரண், ஞானவேல், தாண்டவன் உள்ளிட்டோரை கடந்த சில நாட்களாக ஒரு வெறிநாய் துரத்தித் துரத்திக் கடித்தது. 

தகவலறிந்த வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் சாவித்திரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, பொதுமக்கள் உதவியுடன் அந்த வெறிநாயைப் பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பினர். 

அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதும், பொதுமக்கள் அச்சமடைவதும் தொடர்கதையாக உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் உடனடியாகத் தெருநாய்களைப் பிடித்து கருத்தடை மற்றும் வெறிநாய் தடுப்பூசி (Anti-Rabies Vaccination) போட வேண்டும் என்று பொதுமக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.