Hosur News, ஓசூர் செய்திகள் - A One-Day Journey into Ayur Forest: Exploring Kodagarai and the Misty Peaks of Bettamugilalam
ஓசூர் அருகே அய்யூர் காட்டுக்குள் ஒரு நாள் பயணம்...
நாம அப்படி எதை பார்க்கப் போறோம்? கொடகரை... தொடர்ந்து பெட்டமுகிலாலம்! இந்த காட்சிகள் ஓசூர் அருகிலேயேவா?
காலை ஆறு முப்பது மணி அளவில் தேன்கனிக்கோட்டையை கடந்து, அய்யூர் சுற்றுச்சூழல் பூங்கா சோதனை சாவடியில், நுழைவுச்சீட்டு மற்றும் கேமரா கருவிகளுக்கு கட்டணம் செலுத்தி விட்டு, அண்ணாந்து பார்த்தால்... இது ஊட்டியும் இல்லை... கொடைக்கானலும் இல்லை... தொலைவில் தெரிகிறது பெட்டமுகிலாலத்தின் மலைத்தொடர்கள்!
ஆமாம்! இப்படியான மலைமுகடுகளை, குறைவான செலவில் ஒரு நாள் பயணமாகவே சுற்றிப் பார்க்கலாம்!
காட்டுக்குள் நுழைந்து சற்று தொலைவு பயணித்த நிலையில்... சாலை ஓரங்களில் ஆங்காங்கே, பிற விலங்குகளின் கழிவுகளில் இருந்து மாறுபட்டு காட்சி மற்றும் நெடி தரும் யானைகளின் எரு. நாம் அடர்ந்த காட்டுக்குள் இருக்கிறோம் என்ற உணர்வைத் தருகிறது!
முதலில் நாம் கண்டது சாமி ஏரி. நாம் சென்ற நேரத்தில், யானை ஒன்று தனது குட்டியுடன் குளியல் போட்டுக் கொண்டிருந்தது. நீர் அருந்த வந்த குள்ளநரி கூட்டம் ஒன்று தனது குட்டிகளுடன் ஏரி கரையோரம் கொஞ்சிக் குலாவியது கண்கொள்ளா காட்சி.
விடி காலை ஒளியிலும், ஒளிரும் மினுமினுப்புடன் சாலையில் ஓடிக் கடந்த பறவை என்னவென்று உற்று நோக்கினால், அது, மயிலுக்கு போட்டியாக காட்டு சேவல்! காதலனுடன் சேர்ந்து ஓடியது கோழி! என்ன ஒரு அற்புத காதல் காட்சி!
நாம் முன்னோக்கி சாலையில் பயணித்த போது, பதட்டத்துடன் மக்கள் பின்னோக்கி ஓடி வந்தனர்! என்னவென்று வினவினால், அங்கே ஒரு ஒற்றை யானை! சாலையில் ஒய்யாரமாக அங்கும் இங்கும் நுனிமூங்கிலை மேய்ந்து கொண்டு தனது பெருத்த உடலை ஆட்டிக்கொண்டு நிற்கிறது!
காட்டு விலங்குகளை, அவற்றின் வீடுகளில், எவ்வித தடுப்புகளும் இன்றி நேருக்கு நேர் பார்ப்பது மனதை சிலிர்க்கச் செய்கிறது.
காட்டின் நட்ட நடுவே, திங்கள் கிழமை காலை வேளையில், பாடல் ஒலி கேட்க, அருகே சென்று பார்த்தால், புதுப்பிக்கப்பட்ட சிவாலயம்! ஒவ்வொரு திங்கள்கிழமையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுமாம்! அமைந்திருக்கும் இடம், கொடகரை செல்லும் சாலை சந்திப்பு.
கொடகரை சாலையில் முன்னோக்கிச் சென்றால், ஏராளமான செங்குத்து கொண்டை ஊசி வளைவுகள். குறைவான இழுவை திறன் கொண்ட வண்டிகளுக்கு இந்த சாலையில் இடம் இல்லை! நினைவில் கொள்க!
சாலையின் வலப்புறத்தில் பள்ளத்தாக்குகளும் அவற்றின் பசுமையும் என்றால், இடப்புறம் பெரும்பாலும் மலை முகடுகள். மலைகளுக்கு இடையிலான இடைவெளியில், நம் கண்ணில் பட்டது கேசர்குளி அணையின் நீர் பிடிப்பு பகுதி.
நெளிந்து நெளிந்து செல்லும் காட்டு வழிச்சாலையில் தொடர்ந்து பயணித்தால் நாம் சென்றடைவது கொடகரை! மலைவாழ் பழங்குடியின மக்களுக்காக, அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள குடியிருப்பு நம்மை வரவேற்கிறது. கொடைகரைக்கு அப்பால், வனத்துறையினரின் அனுமதியுடன், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உயரமான மலைமுகடான குத்திராயன் மலை முகடை காட்டு வழிப் பாதையில் நடந்து சென்று அடையலாம்!
வந்த பாதையில் மீண்டும் பயணித்து, செங்குத்தான பாறைகளை தனது முகமாக காட்டிக் கொண்டிருக்கும் மலைமீதான சாலையில் பயணிக்கும் போது, நம்மை கடந்து செல்லும் வான் மேகங்கள்! அவை விட்டுச்சென்ற குளிரும், ஈரமும், நெடுநேரம் நம்மை அவற்றின் நினைவில் நனைகிறது! பசுமையாக ஓங்கி வளர்ந்த மரங்களும், அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு காய்ந்து நிற்கும் மரங்களும், காடுகளின் தன்மையை நமக்கு பாடமாக சொல்லிக் கொடுக்கின்றன!
முதலில் வருவது காமகிரி. சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மலைவாழ் இருளர் பழங்குடியின குடியிருப்புகள். வாய்ப்பு கிடைத்தால், மலைமுகடுகளில் அவர்கள் வாழும் பகுதிகளை, அவர்களின் அனுமதியுடன், நேரில் அறிந்து கொள்வது, பழங்குடியினரின் வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
அடுத்து நாம் அடைவது பெட்டமுகிலாலம். காட்டாற்றுக்கு குறுக்கே தடுப்பணை ஒன்று இயற்கையான சூழலில் அமைந்துள்ளது.
அதே சாலையில் தொடர்ந்து பயணித்தோமானால், செங்குத்தாக கொண்டை ஊசி சாலை இறக்கம் நம்மை நேராக மாரண்ட-அள்ளிக்கு அழைத்துச் செல்கிறது.
ஊட்டி, கொடைக்கானல் என்று தொலைவான பயணங்கள் இல்லாமல், ஓசூரில் இருந்து ஒரு நாள் பயணத்திலேயே இத்தனை மலைகளையும், காட்டையும், காட்டு விலங்குகளையும் பார்த்து ரசிக்க முடியும் என்பதுதான் சிறப்பு.
இது சுற்றுலாத் தலம் மட்டுமல்ல... வனவிலங்குகளின் வீடு. எனவே இயற்கையை ரசிப்போம்; அதன் அமைதியையும் பாதுகாப்போம்.
ஒரு நாள் நேரம் கிடைத்தால்... அய்யூர் காட்டுப்பாதையில் ஒரு பயணம் செய்து பாருங்கள். ஒரு புதிய ஓசூரை கண்டெடுப்பீர்கள்!