கிருஷ்ணகிரி சேலம் பைபாஸ் சாலையில் உள்ள பேக்கரி ஒன்றில் புகுந்து, கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த 4 பேர் கொண்ட கும்பலை கூகுள் பே (GPay) பணப் பரிவர்த்தனை எண் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் பர்கூர் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
நடந்தது என்ன?
பர்கூர் ஒப்பதவாடியைச் சேர்ந்த அருண்குமார் (27) என்பவரது பேக்கரி கடைக்குள் கடந்த 28-ஆம் தேதி மாலை புகுந்த 4 பேர் கும்பல், அவரை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளது. கல்லாப்பெட்டியில் இருந்த ₹3,700 பணத்தை எடுத்ததுடன், போதாதென்று அருண்குமாரின் செல்போன் மூலம் தங்களது ஆன்லைன் கணக்கிற்கு ₹5,800 பணத்தை 'ஜிபே' மூலமாகப் பலவந்தமாகப் பரிமாற்றம் செய்து கொண்டு தப்பியோடியது.
துப்பு துலங்கியது எப்படி?
பாதிக்கப்பட்ட உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், அவர்கள் ஆன்லைன் மூலம் பணத்தை மாற்றிய செல்போன் எண்ணை டிஜிட்டல் முறையில் பின்தொடர்ந்தும், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் போலீசார் தீவிரமாகத் தேடினர். இதில் காந்தி நகர் அப்துல் ரகுமான் (27), பாரதி நகர் மணிகண்டன் (24), பழையபேட்டை கரண் (26), சின்ன அக்ரஹாரம் வடிவேல் (36) ஆகியோரே இக்கொள்ளையில் ஈடுபட்டது அம்பலமானது. கைதான நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.