HosurOnline

கிருஷ்ணகிரி Toll-Gate அருகே பரபரப்பு: புத்தகக் கடை உரிமையாளரைத் தாக்கிய 6 பேருக்கு போலீஸார் தீவிர வலைவீச்சு!

கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையைச் சேர்ந்த முகேஷ் குமார் (38) என்பவர் அப்பகுதியில் புத்தகக் கடை நடத்தி வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை அன்று தனது நண்பருடன் சேர்ந்து, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடி (Toll Plaza) அருகே இருக்கும் ஒரு தனியார் மதுக்கூடத்துக்கு சென்றிருந்தார். 

அங்கு ஏற்பட்ட திடீர் தகராறில், அங்கிருந்த ஒரு கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவர் முகேஷ் குமாரை கூர்மையான ஆயுதத்தால் கழுத்துப் பகுதியில் தாக்கியுள்ளார். 

இதில் காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர் அங்கு நலமுடன் மருத்துவம் பெற்று வருகிறார். 

இதுகுறித்துத் தகவலறிந்த கிருஷ்ணகிரி வட்ட காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். 

முதற்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் கிருஷ்ணகிரி மற்றும் சேலத்தைச் சேர்ந்த 6 பேர் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள 6 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.