கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர், சூளகிரி, வேப்பனப்பள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடாமல் பெய்து வரும் கனமழையால், கிருஷ்ணகிரி மற்றும் கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து தாறுமாறாக உயர்ந்துள்ளது.
சனிக்கிழமை வெறும் 434 கனஅடியாக இருந்த நீர்வரத்து, ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் 1,679 கனஅடியாக எகிறியது. அணையின் பாதுகாப்பைக் கருதி, பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 2,415 கனஅடியாக அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது!
அடுத்த இரண்டு நாட்களுக்கு நீர் பிடிப்புப் பகுதிகளில் இன்னும் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், அணைக்கு வரும் மொத்த தண்ணீரும் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட வாய்ப்புள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட தென்பெண்ணை கரையோர மக்களுக்குத் தீவிர வெள்ள அபாய எச்சரிக்கை (Flood Alert) விடுக்கப்பட்டுள்ளது.
"பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளைக் கூட்டிச் செல்லவோ வேண்டாம்; கரையோர மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான மேடான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்" என தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.