மத்தூர் அருகே நண்பரின் கழுத்தை அறுத்த 2 வாலிபர்கள் கைது!
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் கழுத்தை அறுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.மலையாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான வாசு (36), பூவரசன் (36) மற்றும் ஸ்டாலின் (28) ஆகியோர் கடந்த 25-ஆம் தேதி ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த வாசு, கத்தியால் ஸ்டாலினின் கழுத்தை அறுத்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இச்சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசு, பூவரசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்கள் போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.